பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு..!
ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் ஆற்று நீர் முழுவதும் வெள்ளை நுரை ததும்பி காணப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு மற்றும் பெரிய கொம்மேஷ்வரம் பகுதியில் பாலாற்றில் மழை வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அருகாமையில் செயல்பட்டு வரும் சில தனியார் தோல் தொழிற்சாலைகள், கழிவு நீரை இரவு நேரங்களில் நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதால் ஆற்று நீர் முழுவதும் வெள்ளை நுரை ததும்பி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் பாதிக்கப்படுவதாகவும், ஆடு மாடுகளுக்கு நோய்கள் ஏற்படுவதால் இதனை தடுக்கக் கோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தனர்.
மேலும் ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்டம் நிர்வாகம் தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆனால் இதனை கண்டுகொள்ளாத ஆம்பூரில் உள்ள சில தனியார் தோல் தொழிற்சாலைகள் தற்போது மீண்டும் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டிருக்கின்றன. இதனால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு காற்றில் பறக்கிறதா? என அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒவ்வொரு மழைக் காலங்களின் போதும், தோல் தொழிற்சாலைகள் மழை நீரில் கழிவு நீரை தொடர்ந்து கலந்து விடுவதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.