இறையருள்
இறையருள்
இறையருள் என்பது இனிதானதொன்று
இறையருள் என்பது இதமானதுமன்றோ
இறையருள் பெறவே
இமய வலம் வேண்டாம்
இறைஞ்சி உருகும்
இதய வளம் போதுமே
பணத்தால் பக்தியை அளப்பது மனித குணம்
மனத்தால் அருளை அளிப்பது இறைவன் குணம்
பூசலார் நாயனார்
மனக்கோவில் பூசனைகள் ஏற்றவன் இறைவன்
படித்தால் மட்டும் படுவது அல்ல பரம்பொருள்
படிந்து வணங்கிட படிவது பரமன் அருள்
வரம் தரும் அருளோ வரம்பற்றது
வரவு செலவு கணக்கோ அவன் அறியாதது
புண்ணியம் என்பது பண்ணிய வினையின் விளைவேயாம்
பங்களிப்பை பொறுத்து பகிர்ந்தளிக்கப் படுவதில்லை
சங்கு உண்டு சக்கரம் கதையும் உண்டு
பொங்கும் இசைக் குழலும் உண்டு கோபாலன் கரங்களிலே
சிங்க முகமும் உண்டு சீறிய விழியும் உண்டு
எங்கும் காணவில்லை எடைக்கல்லும் துலாமும்
ஆன்மீகத்தில் இப் படி அப் படி
காண்பது எப்படி அது தப்படி
சான்றோர் உரைப்படி நடப்பது முதற்படி
நான் எனது ஒழிய முதற்படி
முதிர்ந்துவிடும் முற்றுப்படி யாகிவிடும்
எளிமையாக வணங்குவோம்
முழுமையாக வணங்குவோம்
கடந்தது கடந்ததாக இருக்கட்டும்
நடப்பது நல்லதாக நடக்கட்டும்
கடந்த கால கசப்புகள்
வருங்கால வசந்தங்களாகட்டும்
இறையருள் இனிதானது
இறை அருள் இதமானது
இரா. சந்திரசேகரன் December 31, 2023
1 Comment
அற்புதமான ஆன்மீக கவிதை சார்.