கிளாம்பாக்கம்’ பேருந்து நிலையம்.. /மக்களின் கோபமும் குமுறலும்.
மக்களின் கோபமும் குமுறலும்.
சென்னை மாநகரில் குடியிருந்து வரும் தென் மாவட்ட மக்களை சொந்த ஊர் பக்கம் செல்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குமுறல்கள் வெடிக்கிறது.
சென்னை மாநகரில் பல பத்தாண்டுகளாக குடியிருந்து வரும் தென் மாவட்ட மக்களுக்கு தெரியும்.. முதலில் எங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார்கள் என்பது.. இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் பிராட்வே என்றழைக்கப்படும் இடத்தில்தான் 1990களில் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என்கிற SETC/ TNSTC போக்குவரத்து கழகங்களின் ‘தாய்’ பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை மாநகரின் ‘நட்ட நடு’ சென்டரில்தான் அப்போது அத்தனை தென் மாவட்ட பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் அருகே உள்ள எழும்பூரில் இருந்து திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழக பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவை அத்தனையும் சென்னை மாநகரின் மையத்தில்தான் இருந்தவை. சென்னை மாநகரின் எந்த பகுதிக்கும் செல்வதற்கு ஏதுவாகவே இருந்தது.
சென்னை பாரிமுனையில் இருந்து தொலைதூரத்தில் இருந்த திருவான்மியூர், தாம்பரம் எண்ணூர், மணலி போகவும் வசதியாகத்தான் இருந்தது. தென் மாவட்ட மக்களில் கணிசமானவர்கள் வடசென்னையான திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில்தான் அதிகம். ஆகையால் தென்மாவட்ட மக்கள் சென்னை மாநகருக்குள் வரவும் சொந்த ஊர் திரும்பி செல்லவும் பேருதவியாகவே இருந்தது இந்த பயணம். தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்களுக்கு ஆன் த வேதான்.. அதனால் பயணம் எளிதானதாகவும் இருந்தது. ஒரு கட்டத்தில் கோயம்பேடு என்று அலையவிட்டனர். கோயம்பேட்டுடன் கேகே நகர், தாம்பரம் என அலையவிட்டனர். அப்புறமாக கோயம்பேட்டில் இருந்து பைபாஸ் வழி என சுற்றவும் விட்டனர். சென்னை மாநகரின் மையத்தில் இருந்து சொந்த ஊரான தென் மாவட்டங்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட் கிடைத்து போவதற்குள் படாத பாடு படனும்.. முன்பதிவு செய்யப்படாத அன் ரிசர்வ் பெட்டியில் ஏறுவதற்கு பல மணிநேரம் ‘துண்டு’ போட்டு குடும்பத்தில் குடியிருக்கனும். அப்படி இல்லை எனில் கோயம்பேடு போய் அல்லோகலப்படனும். பண்டிகை நாட்களில் தாம்பரம் போங்க, கேகே நகர் போங்க என துரத்தி அடிக்கப்பட்டனர் தென் மாவட்ட மக்கள்.
சென்னை மாநகரின் தென் மாவட்ட மக்கள், கடந்த 30 ஆண்டுகளின் முடிவில் எங்க வந்து பேருந்து ஏறுகிறோம் எனில் செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இருந்துதான். ஆமாங்க..
சென்னை பிராட்வே- கிளாம்பாக்கத்துமான தொலைவு 39 கிமீ
சென்னை தி.நகர் – கிளாம்பாக்கத்துக்குமான தொலைவு 37 கிமீ சென்னை கோயம்பேடு- கிளாம்பாக்கத்துக்குமான தொலைவு 29 கிமீ
சென்னை திருவான்மியூர்- கிளாம்பாக்கத்துக்குமான தொலைவு 28 கிமீ
வடசென்னை எண்ணூர்- கிளாம்பாக்கம் தொலைவு 55 கிமீ
ஆனால் செங்கல்பட்டுக்கும் கிளாம்பாக்கத்துக்குமான தொலைவு வெறும் 27 கிமீ தான்
. அதாவது சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டுக்கு முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னை மாநகரை விட்டு சொந்த ஊர் பேருந்தை பிடிக்க தென் மாவட்ட மக்கள் சுமார் 2, 3 மணிநேரம் அலைந்து திரிந்துதான் பேருந்து ஏற வேண்டும். எதுக்கு இந்த அலைச்சல்?
பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திக்கலாம் என்பது போல சென்னை கோயம்பேட்டிலேயே கூட இருந்திருக்கலாமே.. அல்லது சென்னை மாநகரத்தின் மையத்திலேயே ஒரு பகுதியை உருவாக்கலாமே?
அவ்வளோ பெரிய தீவுத் திடலை கேட்டு வாங்கி பிரம்மாண்டமான தென் மாவட்ட பேருந்து நிலையத்தை அமைத்து தரலாமே? சென்னைக்கு உள்ளே வந்துவிட்டால் சொந்த ஊர் போகனும் என்கிற நினைப்பு கூட வந்துவிடக் கூடாது என்கிற வகையிலா இப்படி பாடாய்படுத்துவது? என்பதுதான் தென் மாவட்ட மக்களின் கோபமும் குமுறலும்.
news courtesy:https://tamil.oneindia.com