கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு முதல்வரின் வேண்டுகோள்..!

 கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு முதல்வரின் வேண்டுகோள்..!

கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூலை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.கருணாநிதியின் வரலாற்றை கவிதையாக தொகுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்நூலை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், வைரமுத்துவின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் வரலாற்றை கவிதையாக தொகுக்க வேண்டும் என்று வைரமுத்துவுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர்,

“பொதுவாக வைரமுத்துவின் எழுத்துக்கள் வார இதழ்களில் வெளியாகும். ஆனால், தற்போது அவர் எழுதியுள்ள ‘மகா கவிதை’, எந்த இதழிலும் வெளிவரவில்லை. எனவே இந்த புத்தகம் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஒருநாள் வைரமுத்து இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து அதை வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த புத்தகமே மகா புத்தமாகத்தான் இருந்தது.

இந்த நேரத்தில் வைரமுத்துவுக்கு ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். அதாவது கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை கவிதையாக எழுத வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும். இது உங்கள் ரசிகனின் வேண்டுகோள். இன்னும் உரிமையுடன் சொல்வதெனில் இது கட்டளை” என்று வேண்டுகோள் வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் ஒரு புத்தம் போல அல்லாமல், வாளை கையில் ஏந்தியதை போல இருந்தது. பொதுவாக ஐம்பூதங்களை யாரும் அடக்க முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால், ஒரு கவிஞராக இதனை இந்த புத்தகத்தில் வைரமுத்து அடக்கியிருக்கிறார். ‘திரவ ஊசியால் பூமியின் துவாரம் போலும் துளைத்த மழை’ என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இதைத்தான் சில வாரங்களுக்கு முன்னர் நாம் பார்த்திருந்தோம். இதைவிட மழையை விளக்க முடியாது. புயலும், மழையும், வெள்ளமும் தலைநகர் சென்னை முதல் குமரி வரை இப்போதுதான் சுழற்றியடித்திருக்கிறது. இந்த நேரத்தில் ஐம்பூதங்கள் குறித்து எழுதியிருக்கிறார். சென்னையாக இருந்தாலும், நெல்லையாக இருந்தாலும் அதிகனமழை பெய்யும் என்று சொன்ன வானிலை ஆய்வு மையம் எவ்வளவு பெய்யும் என்று சொல்லவில்லை. ஏரி உடைந்து கொட்டியைதை போல வானம் மழை கொட்டியுள்ளது.

100, 170 ஆண்டுகளில் இல்லாத மழை என்று சொன்னோமே தவிர, இதற்கான காரணம் என்ன? என்பதை யாரும் சொல்லவில்லை. உண்மையான காரணத்தை இந்த புத்தகத்தில் வைரமுத்து சொல்லிவிட்டார். நாம் எதிர்கொள்ளும் பெரும் ஆபத்தாக காலநிலை மாற்றம்தான் இருக்கப்போகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள காலநிலை மாற்ற நிர்வாகக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இந்நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...