முழுவீச்சில் தமிழக வெற்றிக் கழக மாநாடு ஏற்பாடுகள்..!
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டு திடலின் முகப்பு பகுதி மற்றும் மேடை பகுதியும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் பணி 90 சதவிகிதம் நிறைவு பெற்று மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாடு நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு கிராமத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. பலூன்களில் விஜயின் உருவம் அச்சிடப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக இந்த பலூன் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட்டவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநாட்டு திடலின் முகப்பு பகுதியும் மற்றும் மேடை பகுதியும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை போன்ற வடிவில் மஞ்சள் நிறத்தில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்த கழுகு பார்வை காட்சிகள் வெளியாகி இணையத்திலும் வைரலாகி வருகிறது.