ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த நில அதிர்வுகள் | சதீஸ்
ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் கடுமையாகப் பாதித்துள்ளன நிலையில், அங்கே இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கே சில பகுதிகளைச் சுனாமி அலைகளும் தாக்கியது. இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் மற்றும் அடுத்து ஏற்பட்ட சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள சுஸு நகரம் இருக்கிறது. அங்கே இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து சுஸு நகர அதிகாரிகள், “தொடர் நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.. சிலருக்குக் காயமும் ஏற்பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறுகையில், “மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கியிருப்பதாக எங்களுக்குப் பல புகார்கள் கிடைத்துள்ளது.. அங்கே சிக்கியுள்ள போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்” என்றார்.
ஜப்பானின் சுஸுவில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லும் சாலைகளும் சேதமடைந்ததால் மருத்துவர்களால் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மேற்கு ஜப்பானில் சாலைகளில் பெரிய விரிசல் ஏற்பட்டு, இதனால் அங்கே போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
அங்கே பல மருத்துவமனைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெனரேட்டர்கள் உதவியுடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. பாதிப்பு மிக மோசமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளுக்கு உதவ ஜப்பான் 1,000 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.
ஜப்பான் ராணுவத்தினர் ஏற்கனவே ஏற்கனவே இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா மற்றும் சுசூ நகரங்களை அடைந்துவிட்டனர். மேலும் 8,500 பேர் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பூகம்பத்தால் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் முடிந்த இந்த தகவல்கள் நமக்குத் தெரிய வரும். பொதுவாக இதுபோன்ற மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பிறகு சிறிய நில அதிர்வுகள் தொடர்ந்து நீடிக்கும். இதை ஆங்கிலத்தில் aftershocks என்று குறிப்பிடுவார்கள். ஜப்பானில் இப்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறு நில அதிர்வுகள் பல மாதங்கள் கூட நீடிக்கும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் நில அதிர்வு நிபுணர் தெரிவித்தார்.
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், “பொதுவாக நிலநடுக்கம் ஏற்படும் போது அதன் பிறகு சிறு நில அதிர்வுகள் ஏற்படும்.. அவை பொதுவாகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், இதுபோன்ற வலிமையான நிலநடுக்கம் ஏற்படுத்தும் நில அதிர்வுகள் என்பது எளிதாக 6 ரிக்டரை தாண்டும். அப்படி ஏற்பட்டால் அதுவே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்” என்று அவர் கூறினார்.
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் பல பகுதிகளை முற்றிலுமாக பாதித்துள்ளது. மின்கம்பங்கள் அப்படியே பல இடங்களில் சாய்ந்தன. இதனால் பல பகுதிகளில் அப்படியே முழுமையாக இருளில் மூழ்கின. சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதனால் இருளில் மூழ்கியுள்ளனர்.