இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி | சதீஸ்
திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தருவதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, திருச்சியில் ரூ.19,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருச்சி விமான நிலையத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதையடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்குகிறார். தொடர்ந்து மதுரை – தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தொலைவிலான இரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
திருச்சி – கல்லகம் மற்றும் கல்லகம் – மீன்சுருட்டி இடையிலான சாலை உட்பட 5 சாலைத் திட்டங்களையும், ரூ.9,000 கோடி மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி இன்று திருச்சி வருவதையொட்டி, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்கின்றனர். பாஜக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.