உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..!
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உதகை 19வது ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் துவங்கிய நிலையில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், முக்கிய கோடை விழாக்களான உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சியும், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 19ஆவது ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழ கண்காட்சியும் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த 10-ம் தேதி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 19வது ரோஜா கண்காட்சியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், புறா உள்ளிட்ட வன விலங்குகளின் ரோஜா மலர்களால் ஆன வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நீலகிரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வந்த நிலையிலும், மழையில் நனைந்தபடி வண்ண, வண்ண குடைகளில், வண்ண, வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசித்து சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இன்றுடன் 19வது ரோஜா கண்காட்சி நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததன் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு கண்காட்சியை பூங்கா நிர்வாகம் நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.