தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் பங்கேற்ற‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு விழா..! | சதீஸ்

 தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் பங்கேற்ற‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு விழா..! | சதீஸ்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழாவில்,  அப்போராட்டத்தில் பெரியாரின் பங்கினை விவரிக்கும் நூல்களை தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் முதலமைச்சர்கள் இணைந்து வெளியிட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழாவில்,  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” வெளியிட்டார்.  அந்த நூற்றாண்டு புத்தகத்தை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரளத் தலைவர்களின் அழைப்பின்பேரில் தந்தைப் பெரியார் வைக்கம் சென்று,  அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து,  அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த,  சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

வரலாற்று சிறப்பிக்க இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகின்றது. “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டினையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்றும்,  போராட்டத்தின் வரலாற்றையும்,  வெற்றியையும் பொதுமக்கள் மற்றும் மாணவ,  மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையிலும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 30.03.2023 அன்று விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலை  கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.

முன்னதாக, தந்தை பெரியாரின் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் மலர்வளையம் வைத்து,  மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...