எண்ணூர் பகுதியில் அடுத்த சுற்றுச்சூழல் பாதிப்பு..! | சதீஸ்
எண்ணூர் பகுதி தற்போதுதான் கச்சா எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டும் வரும் நிலையில், நேற்றிரவு திடீரென அமோனியா வாயு கசிந்ததால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னைக்கு ஆளாகினர்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், சென்னையின் அனைத்து பகுதிகளும் மீண்டு விட்டன. ஆனால், எண்ணூர் பகுதி மட்டும் இன்னும் இதிலிருந்து மீளவில்லை. காரணம் கச்சா எண்ணெய் கழிவுகள்தான். எண்ணூர் பகுதியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. மழை வெள்ளத்தின் போது இந்த ஆலையிலிருந்த எண்ணெய் கழிவுகள் மழை நீருடன் கலந்து வெளியேறியுள்ளது. இதனால் எண்ணூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த பிரச்னை சர்ச்சையான நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்த சிபிசிஎல் நிறுவனமும் கடலில் கலந்த எண்ணெய் கழிவை அகற்ற தொடங்கியுள்ளன. ஆனால் தற்போது வரை இந்த கழிவுகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது மற்றொரு அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.
எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விளக்கமளிக்கையில், “கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கப்பலிலிருந்து அமோனியா வாயு எண்ணூரில் உள்ள தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து குறைவான அளவு அமோனியா திடீரென வெளியேறியதால்தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ளனர். அமோனியா கசிவால் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கச்சா எண்ணெய் பாதிப்பை தொடர்ந்து தற்போது அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளதால், எண்ணூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.