2026ல் தேமுதிக ஆட்சியை பிடிக்கும் – பிரேமலதா விஜயகாந்த்..! | சதீஸ்
தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேமுதிக ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் மிகவும் உடல் தளர்ந்த நிலையில், சக்கர நாற்காலியில் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பொதுக்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த விஜயகாந்துக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆரவாரமாக கூச்சலிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து விஜயகாந்திடம் ஆசி பெற்று பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து பேசிய பிரேமலதா வரும் 2024 லோக்சபா தேர்தலில் தேமுதிக எம்.பி.க்கள் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்வது உறுதி என்று கூறினார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் கூறினார் பிரேமலதா.
கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேமுதிக கட்சி தொடங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு தனித்து போட்டியிட்டு வெற்றி எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார் விஜயகாந்த். வாக்கு சதவிகிதமும் கணிசமாக இருக்கவே திமுக, அதிமுக கட்சியினர் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
இதனையடுத்து பழம் நழுவி பாலில் தானாக விழும் என்று நம்பிக்கையோடு சொன்னார் அப்போதய திமுக தலைவர் கருணாநிதி. ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து பேசினார் விஜயகாந்த்.
அதிமுக தேமுதிக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல்வரானார் ஜெயலலிதா. திமுகவை விட அதிக எம்எல்ஏக்களை பெற்றது தேமுதிக. எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தார். சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசியதால் அதிமுக தேமுதிக கூட்டணி முறிந்தது.
திமுக, அதிமுகவிற்கு தமிழ்நாட்டில் மூன்றாவது அணியாக உருவெடுத்த தேமுதிக கட்சி, அதன்பிறகு மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கியது. தேமுதிகவில் இருந்தவர்களே துரோகம் செய்து விட்டு கட்சியை விட்டு விலகினர். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளாராக அறிவித்து தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட்டனர் அனைவருமே டெபாசிட்டை பறிகொடுத்தனர். அப்போதும் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.
தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரால் சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டதில் இருந்து அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமாக இருந்த பிரேமலதாவே கட்சியை நடத்தி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்தின் முகத்தை காட்டி, அவர் கையசைப்பதை மட்டுமே வைத்து வாக்கு சேகரித்து வந்தார் பிரேமலதா.
கொரோனா கால கட்டத்திற்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது முகத் தோற்றமும் மாறத் தொடங்கியது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணி இணைந்தது. தொகுதி பங்கீடு பிரச்சினையால் பிரிவினை ஏற்பட்டு அமமுக உடன் இணைந்து தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டது தேமுதிக.
லோக்சபா தேர்தல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இண்டியா கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேமுதிகவை புறக்கணித்துள்ளன. யாருடன் கூட்டணி என்று இதுவரை தேமுதிகவும் அறிவிக்கவில்லை. தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தேமுதிக பொதுக்குழு இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா தனது பணிகளை கட்சி அலுவலகத்திற்கு சென்று தொடங்கி விட்டார். இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் 2024ஆம் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றார். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.