நியாயவிலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும்..! | சதீஸ்
‘மிக்ஜாம்’ புயல் நிவாரணத் தொகை நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டது. மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகைக்கு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை வழங்கி தொடக்கி வைக்கிறார். சென்னையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் அஷ்டலக்ஷ்மி நகரில் முதலமைச்சர் இதனை தொடக்கிவைக்க உளளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நியாய விலைக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் நிவாரணத் தொகை வழங்க உள்ளதால் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் நிவாரணத் தொகை நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட உள்ளதையொட்டி சென்னை, திருவள்ளுர் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் அன்றைய தினம் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.