எண்ணூரில் 48.6 டன்எண்ணெய் கசிவு அகற்றம் – தமிழ்நாடு அரசு..! | சதீஸ்
எண்ணூர் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்றும், மும்பையை சேர்ந்த ‘சீ கேர் மரைன் சர்வீசஸ்’ என்ற நிறுவனமும், எண்ணெய் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலைஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் எண்ணெய் படலம் பரவியது. கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ள பல நூறு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவு படிந்ததால், அவை அனைத்தும் பாழாகி விட்டது. எண்ணெய் படிந்த பகுதிகளில் எல்லாம் கடந்த ஒரு வாரமாக துர்நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் செத்து மிதக்கின்றன.
இதனிடையே முகத்துவார பகுதியில் படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகள் 3 அடி ஆழம் வரை தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனம் சார்பில், 8 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உதவியுடன் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் கடல் மற்றும் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், எண்ணூர் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எண்ணூர் முகத்துவார கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கடலில் கலந்தது. இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த ‘சீ கேர் மரைன் சர்வீசஸ்’ என்ற நிறுவனமும், எண்ணெய் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சிறந்த பயிற்சி பெற்ற 6 பேர் இந்த பணியை ஒருங்கிணைக்கிறார்கள். இதுவரை 276 பேரல்களில் 48.6 டன் அளவில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் 15 டன்கள் ஆயில் ஆகும்.
ஒட்டுமொத்தமாக இந்த பணியில் 482 பேர் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரில் கலந்த எண்ணெய் கசிவின் அளவை தொழில் நுட்ப உதவியுடன் சென்னை ஐ.ஐ.டி. மதிப்பிட்டு வருகிறது. மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மைக் குழு மற்றும் சுகாதாரத்துறையுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடர்ந்து இப்பணியை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.