மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு..! | நா.சதீஸ்குமார்
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தார். தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு, டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தது. பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
வெள்ள பாதிப்புகள் குறித்து அவர் உள்ளிட்ட அதிகாரிகள் மத்தியக் குழுவினரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, மத்தியக் குழுவினர் மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மற்றொரு குழுவினர் வட சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2-வது நாளாக இன்றும் ஆய்வு செய்ய உள்ளனர்.