முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்..! | நா.சதீஸ்குமார்
வி.பி சிங்கிற்கு தமிழகம் தந்தை வீடு என்றும் நாங்களும் அவரது குடும்பத்தினர்தான் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விபி சிங்குக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி இருக்கிறோம் என்றும் சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின்போது,சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவச் சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை இன்று காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜய சிங், அபய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், டெல்லி சந்திப்பில் விபி சிங் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது என்றார். தமிழ்நாடு வி.பி.சிங்கிற்கு தந்தை வீடு என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், நாங்களும் விபி சிங் குடும்பத்தினர் என்பதில் பெருமை கொள்கிறோம் என்றார்.
இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கும் சமூக நீதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். விபி சிங்குக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி இருக்கிறோம். பிரதமர் பதவி போனாலும் கவலைப்படாமல் கொள்கையில் உறுதியாக இருந்தவர் விபி சிங். சமூக நீதியை காப்பாற்றுவதில் இம்மியளவும் வழுவாதது திராவிட மாடல் அரசு என்று கூறினார் ஸ்டாலின்.
1989ல் இந்திய பிரதமரான விபி சிங் 11 மாதங்களில் செய்த சாதனைகள் மகத்தானவை. பிறப்பால், பொருளாதாரத்தில் ஓபிசியும் அல்ல, ஏழையும் அல்ல விபிசிங். மண்டல் கமிஷன் ஆணையை நிறைவேற்றிய போது பெரியாருக்கு நன்றி சொன்னவர் விபிசிங். ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு, 100 நாள் வேலை திட்டம், வேலை உரிமை என சாதனைகள் படைத்தவர். தேர்தல் சீர்திருத்தங்கள், மாநிலங்களிடை கவுன்சில் கொண்டு வந்தவர். விபி சிங்கால்தான் ஓபிசி மக்கள் ஒரு அடியேனும் முன்னேறி இருக்கிறார்கள்.
நமக்கான உரிமை இன்னமும் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. 2006 க்குப் பின்னரே கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களிடம் விபி சிங் வாழ்வு சொல்லப்படவே மாநில கல்லூரியில் விபி சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.