பூத்திருக்கும் விழியெடுத்து – 16 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 16 | முகில் தினகரன்

அத்தியாயம் –16

தலை குனிந்து அமர்ந்திருந்த வைசாலியை ஒரு தொண்டைச் செருமலில் தலை தூக்க வைத்தான் அசோக்.  “என்ன வைசாலி… பேச மாட்டியா?”

 “ம்… பேசுவேன்” என்றாள் அவள் மிருதுவான குரலில்.  அசோக்கிற்கே ஆச்சரியமாயிருந்தது. அவனுக்குத் தெரிந்த வைசாலி கணீர்க் குரலில் பளீரென்று பேசுபவளாயிற்றே?

 “நான் நேரடியாவே கேட்கறேன்…  ஏன் இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கலை?”

அவள் பதிலேதும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்க்க, “ம்… பதில் சொல்லு வைசாலி” என்றான்.

 அவள் தொடர்ந்து அமைதியையே கடைப்பிடிக்க, “பரவாயில்லை… நானே சொல்றேன்!… உனக்கு செட் ஆகிற மாதிரி… அதாவது உன் கேரக்டருக்கு செட் ஆகிற… ஐ மீன் எதையும் பொறுத்துக்கற மாதிரி ஒருத்தர் கிடைக்கலை!… அதனாலதான் நீ கல்யாணம் பண்ணிக்கலை!… என்ன நான் சொல்றது சரியா?” கேட்டான்.

வைசாலி கண்கள் கோபத்தில் சிவக்கத் துவங்கின.

“நோ…நோ… எமோஷன் ஆகாதே!… நான் ஏன் இதைச் சொல்றேன்னா… உன்னைக் காதலிச்ச அந்த மூணு வருட காலத்தில் நான் நிறைய…நிறைய… காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டுத்தான் உன் கூடப் பழகினேன்!… ”

 “என்ன அசோக்… காலேஜ் டேஸ்ல நடந்த டேன்ஸ் காம்படிஸன் சம்பவத்தைச் சொல்றியா?… ஹும்… சில காயங்கள் மருந்தால் சரியாகும்… சில காயங்கள் மறந்தால் சரியாகும்… அதை நான் மறந்திட்டேன்”

 “ஆக்சுவலா… நான் அதை மட்டும் சொல்லலை… அதைத் தாண்டி வேற விஷயங்கள் ரொம்ப இருக்கு!… உன் கிட்டே பொறுமை என்பது எள்ளளவும் இல்லை!… எதைப் பேசணும்… எதைப் பேசக் கூடாது!ன்னு இல்லாம எல்லாத்தையும் பேசுவே!… அது பல இடங்களில் என்னைப் பாதிச்ச விஷயம் உனக்குத் தெரியாது!… எல்லாத்துக்கும் மேலே பணக்காரிங்கற திமிர் உன் ரத்தத்துல எக்கச்சக்கமா இருந்திச்சு!… பணத்தை வெச்சு எதையும் செஞ்சிடலாம்ங்கற எண்ணம் உனக்குள்ளே ஸ்ட்ராங்கா இருந்திச்சு!…வீசப்படும் கல்லிலும்… பேசப் படும் சொல்லிலும் நிறைய கவனம் வேணும் வைசாலி… கல் உயிரைக் கொல்லும்… ஆனா சொல் இருக்கே?… அது உயிரோட கொல்லும்,”

வைசாலி குறுக்கிட்டு எதையோ சொல்ல வர, அவளைக் கையமர்த்திய அசோக், “அப்ப நான் பல முறை நெனச்சு பயந்திருக்கேன்… “காதலிக்கும் போதே இவ்வளவு தூரம் காம்ப்ரமைஸ் பண்ணிட்டு இருக்க வேண்டிருக்கே?… நாளைக்கு கல்யாணம்னு ஆயிட்டா… வாழ்க்கை பூராவும் இவ கூட எப்படி எப்படியெல்லாம் காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியிருக்குமோ?”ன்னு அப்பப்ப நெனச்சு நெனச்சு நொந்து போயிடுவே… தெரியுமா?” என்று சொல்ல,

 “அசோக்…  வாழ்க்கைல ஒரு பொண்ணுக்கு என்னென்ன கஷ்டங்கள் ஏற்படக்கூடாதோ… அத்தனை கஷ்டங்களும் எனக்கு ஏற்பட்டிடிச்சு!… பரவாயில்லை… அதுதான் என்னை நிறைய மாத்தியிருக்கு… தோல்விகளை மட்டுமில்லை அசோக்… எல்லா சூழ்நிலைகளையும் கடந்து போகும் மனப்பக்குவம் கூட எனக்கு வந்திடுச்சு… உன் பாணில சொல்லணும்ன்னா… இப்பத்தான் ஒரு குடும்பத்தலைவி ஆகிற மெச்சூரிட்டிக்கு நான் வந்திருக்கேன்!” அவள் சீரியஸாய்ச் சொல்லிக் கொண்டே போனாள்.

கேட்டுக் கொண்டிருந்த அசோக், “ஹா…ஹா…ஹா…”வெனச் சிரித்தான்.

புருவங்களைச் சுருக்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்த வைசாலி, “ஏன் அசோக் சிரிக்கறே?” கேட்டாள்.

 “உனக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?… நீ கொஞ்சம் கூட மாறலை… கஷ்டங்களும்… துன்பங்களும்… உன் மனதின் இயல்பை மாற்றவில்லை… மாறாக சூழ்நிலைகளை அனுசரிச்சுப் போக மட்டுமே கற்றுக் கொடுத்திருக்கின்றன!… அதாவது உன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தற்காலிக அஸ்தமனமே… எப்ப வேணாலும் விடியும்… அந்த இயல்புக் குணம் வெடிக்கும்!… ”

 “ஸோ… நீ என்னை நம்பலை… அப்படித்தானே?”

 “உன்னை விட அந்த சிவராமகிருஷ்ணன் சாரை நான் நம்பறேன்!… பதினாறு வருடங்கள் உன் கூட இருந்திருக்கார்… உன்னோட எல்லா வெளிப்பாடுகளையும் அறிந்தவர்… அதற்கேற்ப அனுசரித்தவர்… ஸோ…. பெட்டர் யூ மே டிராவல் வித் ஹிம்!…முடிந்தால் மேரேஜ் பண்ணிக்கோ… இல்லேன்னாலும் பரவாயில்லை.. இப்ப இருப்பது போலவே வாழ்ந்து விடு… அதுதான் உனக்கு நல்லது”

 “என்ன அசோக் என்னைப் பழி வாங்கறியா?… ஒண்ணு நல்லா புரிஞ்சுக்கோ அசோக்… எனக்கு வலிக்கும்ன்னு தெரிஞ்சும் நீ எனக்கு வலி தர முடியும் என்றால்… வலிக்காதது போல் நடிக்க என்னாலும் முடியும் அசோக்!” வைசாலி மெல்ல மெல்ல மாறத் துவங்கினாள்.

 “நோ…நோ…நோ… உன்னை நான் பழி வாங்க வேண்டிய அவசியமில்லை!… ஒரு அப்பாவி இளைஞனின் உயிரை உன்னோட சுயநலத்துக்காகப் பறிச்ச நீ… என்னைப் பொறுத்தவரையில் ஒரு கொலைகாரியே!… சட்டப்படி உனக்கு தண்டனை கிடைக்காமல் போயிருக்கலாம்!… ஆனா தர்மப்படி நீ தண்டனை அனுபவிக்க வேண்டியவ…!… ஒரு வேளை நீ உன் குற்றத்தை ஒப்புக்கிட்டு… சட்டப்படி அதுக்கான தண்டனையை அனுபவிச்சிட்டு வா!… அதுக்கப்புறம் நான் உன்னை ஏத்துக்கறேன்!…”

தன்னுடைய அந்த பதில் வைசாலிக்கு ஒரு அதிர்வைத் தந்திருக்கும், அதன் காரணமாய் அவள் கண் கலங்கும், அவள் முகம் சோக முலாம் பூசிக் கொள்ளும், என்றெல்லாம் அசோக் எதிர்பார்த்தான். ஆனால், முகத்தில் ஒரு துளிக் கூட சலனமில்லாமல் அவள் அமர்ந்திருந்ததைப் பார்த்து, “என் எண்ணம் சரியே!… இவள் இன்னும் தன் இயற்கை இயல்பிலிருந்து மாறவில்லை!… பிரச்சினைகள் தற்காலிகப் பொறுமையை மட்டுமே அளித்துள்ளன” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன் மெல்ல எழ,

சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த சிவராமகிருஷ்ணன் உடனே வந்தார்.  அவரிடம், “கன்கிராஜுலேஷன்ஸ்” என்று சொல்லி விட்டு வேக வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான் அசோக்.

திகைத்துப் போய் நின்றார் சிவராமகிருஷ்ணன்.

-( மலரும்… )

முந்தையபகுதி – 15 | அடுத்தபகுதி – 17

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...