சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியது..! | நா.சதீஸ்குமார்
கார்த்திகை மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு மண்டல பூஜை விழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை. பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் தரிசனம் தரும் ஐயப்பனை தரிசனம் செய்த பல நாட்கள் கடுமையான விரதம் இருந்து வந்து காடு மேடு கடந்து மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருக்கும் பக்தர்கள் இரண்டு வேலை குளித்து பய பக்தியோடு எழுப்பும் சரண கோஷத்தை கேட்கும் போதே மெய் சிலிர்க்கும். இன்று முதல் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜைக்காக விரதத்தை தொடங்கியுள்ளனர். சிலர் மகர விளக்கு பூஜை வரை 60 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் நாராயணன் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றி 18 படிகள் வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார். தொடர்ந்து சந்நிதான கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
தொடர்ந்து 18 படிகளின் கீழ் நின்ற புதிய மேல் சாந்திகளான சபரிமலை மேல் சாந்தி பி.என். மகேஷ், மாளிகைபுறம் மேல் சாந்தி பி.ஜி.முரளி ஆகியோரை கைபிடித்து அழைத்து சென்று திருநீரு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மேல் சாந்தி மகேஷுக்கு அபிஷேகம் நடத்தி ஐயப்ப மூல மந்திரத்தை கூறி காதில் சொல்லிக் கொடுத்து மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்றார்.
மாளிகைப்புறம் கோயில் முன்பு நடைபெற்ற சடங்கில் மேல் சாந்தி முரளிக்கு அபிஷேகம் செய்து மூலஸ்தானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.
ஐயப்பன் நெய் அபிஷேக பிரியன் என்பதால் பக்தர்கள் காத்திருந்து நெய் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. 41 நாட்களும் தினமும் காலையில் உஷபூஜை , மதியம் களபாபிசேகம், கலசாபிஷேகம் உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை தொடர்ந்து 9 மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் இருமுடியோடு வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் நேரடியாக வந்தும் முன் பதிவு செய்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்டல பூஜை காலம் இன்று முதல் டிசம்பர் 27 வரை நடைபெறும். டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜைக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.