கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி -குறிப்பு

 கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி -குறிப்பு

ல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி 

சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய அவரின் நூல்கள் இன்றைக்கும் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன.புத்தமங்கலத்தில் பிறந்த அவர் எஸ் எஸ் எல் சி படிக்கும் பொழுது காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை போரில் பங்குபெற தன்னுடைய படிப்பை துறந்து சிறை சென்றார்.

கல்கி முதலில் திரு விகவின் நவசக்தி இதழில் பணிபுரிந்தார். பின் ராஜாஜி அவர்களின் விமோசனம் பத்திரிக்கையை எடிட் செய்யும் பணியில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து ஈடுபட்டார். பின்னர் ஆனந்த விகடன் இதழில் இணைந்தார்.

அவரின் மனைவி கல்யாணி மற்றும் தன் பெயரை இணைத்து விஷ்ணுவின் அவதாரமான கல்கி என்பதை தன் புனைப்பெயராக சூடினார் அவர். கல்கியின் கையெழுத்து ஒரு காலத்துக்கு பிறகு எக்கச்சக்கமாக எழுதி எழுதி புரியாமல் போகிற நிலைக்கு போனது. அதனால் நகைச்சுவையாக ,”என் கையெழுத்து போகப்போக கம்போசிடருக்கும்,கடவுளுக்கும் மட்டும் புரியும் படி ஆகி விட்டது !” என்பார்

எக்கச்சக்க முடிச்சுகள்,ஆழ்வார்க்கடியான்,நந்தினி,சேந்தன் அமுதன் என்று கற்பனை கதாபாத்திரங்கள் இவற்றையெல்லாம் சேர்த்து அவர் தீட்டிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றைக்கும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. சமீபத்தில் நாடகமாக ஆக்கப்பட்ட பொழுது அதை பல்லாயிரம் ரசிகர்கள் கண்டு களித்தார்கள். 

சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய இரண்டு நாவல்களும் டி.கே.சி அவர்களுடன் மாமல்லபுரம் போன பொழுது மன ஓட்டத்தில் எழுந்த தாக்கத்தில் கல்கி வரைந்தார். உண்மையில் சிவகாமியின் சபதம் வானொலிக்கு நாடகமாக எழுதப்பட்டு பின்னர் நாவலானது. பார்த்திபன் கனவில் வரும் சோழ நாட்டு வீரர்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை மனதில் கொண்டே கல்கி தீட்டினார். அவரின் பார்த்திபன் கனவே வரலாற்று நாவல்களில் அவர் எடுத்த முதல் படி.

பாரதிக்கு மணிமண்டபம் எழுப்ப அவர் எடுத்த முயற்சிகள் இன்றும் மறக்க முடியாதவை.

சமூக நாவல்களிலும் தனி முத்திரை பதித்தவர் அவர். அவரின் தியாக பூமி கதை திரைப்படமாக வந்த பொழுது எக்கச்சக்க எதிர்ப்பை சந்தித்தது. படத்தில் இடம் பெற்றிருந்த தேச பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்ட காட்சிகள் காரணமாக, இந்தப் படத்துக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வரப்போகிறது என்பது முந்தின நாள் தெரிந்து விட்டதால், படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காண்பிக்க, டைரக்டர் சுப்பிரமணியமும், எஸ்.எஸ்.வாசனும் ஏற்பாடு செய்தனர். தியேட்டர் முழுவதும் கூட்டம் நிறைந்து வழிய, படம் இடைவிடாமல் காட்டப்பட்டது.

கல்கி கர்நாடகம் என்கிற பெயரில் எழுதிய இசை விமர்சனங்கள் புகழ்பெற்றவை. கல்கி ஆனந்த விகடன் இதழை விட்டு விலகி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை சென்றார். பின் கல்கி பத்திரிக்கையை துவங்க முடிவு செய்த பொழுது சதாசிவம் அவர்களின் மனைவி எம்.எஸ். அவர்கள் நடித்ததே மீரா திரைப்படம். அப்படத்தில் கல்கி எழுதிய பாடல் தான் காற்றினிலே வரும் கீதம் . கல்கி இதழில் அவர் தீட்டிய சரித்திர நாவல்கள் கல்கி இதழின் விற்பனையை இந்தியாவிலேயே சாதனை அளவாக எழுபதாயிரம் பிரதிகள் வரை அன்றைக்கு கொண்டு சேர்த்தது.

மது விலக்கு,சாதி ஒழிப்பு,காந்திய கொள்கைகள் என்று தன்னுடைய நாவலில் பிரசாரத்தை சேர்த்தே செய்த அவரை இன்றைக்கு இலக்கியவாதியே இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும்,தமிழ் நாட்டில் எல்லாரின் வாசிப்பு பட்டியலில் பொன்னியின் செல்வன் கண்டிப்பாக இல்லாமல் போகவே போகாது. எழுதப்பட்டு அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னமும் அதன் வசீகரம் அப்படியே இருப்பதே கல்கியின் வெற்றி தான். இன்னமும் அதை படமாக்கும் முயற்சியும் சாத்தியமாகவில்லை என்பதே அவரின் கதை சொல்லும் பாணிக்கு சான்று. கல்கி இறந்த பின் அவரின் அலையோசை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

தொகுப்பு

ம.ஸ்வீட்லின்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...