அரபிக்கடலில் தேஜ் புயல்: ரெட் அலர்ட்..
அரபிக்கடலில் உருவாகும் தேஜ் புயலால் மகாராஷ்டிர வானிலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.அரபிக் கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் திங்கள் கிழமை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதனை தொடர்ந்து இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் பின்னர் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்கள் புயலுக்கான முக்கிய நாட்களாக பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அரபிக்கடலை விடுங்க… வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்… இந்திய வானிலை மையம் வார்னிங்!
இதன்காரணமாக மகாராஷ்டிர மாநில வானிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் இந்திய வானிலை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் (IMD) அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் இந்திய வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது. இந்த சூறாவளி புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ஆம் தேதி இந்தியாவின் மும்பையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதகாவும், தேஜ் புயல் கடுமையான சூறாவளி புயலாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்திய கடல் பகுதியில் வெப்பமண்டல புயல் உருவானால் “தேஜ்” என்று அழைக்கப்படும் என ஏற்கனவே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு பிந்தைய காலத்தில் உருவாகும் முதல் புயல், இந்த தேஜ் புயல் ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு, பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் அரபிக்கடலில் வெப்பமண்டல புயல் எதுவும் உருவாகவில்லை. ஆனால் அதே நேரத்தில் வங்கக்கடலில் சித்ராங் மற்றும் மாண்டூஸ் என இரண்டு வெப்பமண்டல புயல்கள் உருவானது. இந்நிலையில் தற்போது தேஜ் புயல் மும்பையை குறி வைத்து உருவாகி வருகிறது.