குஷி – ஈகோ கிளாஷ் ! திரை விமர்சனம் | தனுஜா ஜெயராமன்
விஜய்தேவர கொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் குஷி படத்தை சிவா நிர்வணா இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் செப்.1 ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் ஓடியது. தற்போது நெட்பிளிக்ஸ் ஒடிடியில் காணக்கிடைக்கிறது.
காஷ்மீரில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் விஜய் தேவர கொண்டா மற்றும் சமந்தா இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். பாகிஸ்தான் முஸ்லீம் பெண் என சமந்தா சொல்வதை நம்பி ஏமாறுவார் தேவரகொண்டா. பின்னர் சமந்தா ப்ராமின் என தெரியவருகிறது. சமந்தாவாக வரும் ஆரத்யா ஆன்மிகச் சொற்பொழிவாளர் சதுரங்கம் ஸ்ரீனிவாச ராவ் (முரளி சர்மா) மகள்
ஆன்மிகம் என்பதெல்லாம் பொய், அறிவியல்தான் உண்மை என்கிற நாத்திகவாதியான லெனின் சத்யாவின் (சச்சின் கெடேகர்) மகன்தான் விஜய் தேவர கொண்டா (விப்லவ்).
இரண்டு துருவங்களான பெற்றோரின் மறுப்பினால் தேவரகொண்டாவும் சமந்தாவும் சேரவே முடியாத நிலையினில், வீட்டை எதிர்த்து திருமணம் செய்கிறார்கள். இவர்கள் தாங்கள் சிறப்பான கணவன் மனைவி என்பதை உலகுக்கு காட்டுவோம் என்று சபதமும் போடுகிறார்கள்.
அவர்கள் சொன்னதைக் செய்யமுடிந்ததா? என்பதே மீதி திரைக்கதை.
ஈகோ கொண்ட இன்றைய இளம் தலைமுறை தம்பதிகளை திரையில் காட்டுகிறார்கள் விஜய் தேவர கொண்டாவும் சமந்தாவும். நிஜக்காதலராக என நினைக்க தோன்றும் வகையில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.
சின்ன சின்ன விஷயங்களை காம்பிளிகேட்டாக மாற்றுவது , ஈகோ பிடித்து அலைவது, தான் சொல்வது தான் சரியென நினைப்பது, ஆணாதிக்கம் என பல்வேறு ப்ரச்சனைகள் தம்பதிகளுக்கிடையே. இதனோடு ஆத்திகம் vs நாத்திகம் என்கிற வேறுபாடுகள் வேறு . ப்ரச்சனைக்கு கேட்கவா வேண்டும்.
ரோகினி ஜெயராம் தம்பதிகள் வழக்கம்போல நடுத்தர தம்பதிகள் என்கிற அடையாளத்தோடு வருகிறார்கள். சினிமா அகராதியில் வரும் அதே டேம்பிளேட் எடுத்துக்காட்டு தம்பதிகள் கான்சப்ட் தான்.
ஆத்திகர் முரளி சர்மாவும் நாத்தீகர் சச்சின் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்கிறார்கள.
ஆத்திகம் பெரிதா? நாத்தீகம் பெரிதா? என்கிற விவாதத்துக்குள் போகாமல், வாழ்க்கையில் அன்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் தான் பெரிது என கதையை முடிக்கும் இயக்குனரை பாராட்டலாம்.
குஷி என்றாலே ஈகோவா? அல்லது ஈகோ என்றாலே குஷியா என்னுமளவிற்கு தமிழ்சினிமாவின் ஈகோ களஞ்சியமாக மாறியிருக்கிறது குஷி. குஷி ஈகோ கிளாஷ்….!