சி.சு செல்லப்பா
சி.சு செல்லப்பாவின் பிறந்தநாள் இன்று.
‘எழுத்து’ என்கிற சிறுபத்தரிகையை
சி.சு செல்லப்பா இலக்கிய விமர்சனத்துக்கு என்கிற அடிப்படையில் தான் முதலில் ஆரம்பித்தார். இயல்பிலேயே அவருக்கு ஆங்கில இலக்கிய விமர்சனங்களின் மீதிருந்த ஆர்வமே இதற்குக் காரணம்.
“மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற குரல் இலக்கிய உலகத்திலும் அரித்துக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் பழக்க முறையாகிவிட்ட ரீதியிலேயே கருத்துக்களை ஆலுக்குப்படியாக ஒரே விதமாகக் கொடுக்கும் ஒரு மனப்பாங்கு பரவியுள்ள நிலையில், மக்களுக்கு இன்னின்னவைகளைக் கொடுத்து, படிக்கச் செய்ய வேண்டும், புதுப்புது விதமாக நோக்கு பார்வையும் கொண்டு, வெளியிட்டுச் சொல்ல வேண்டும் என்ற ஒரு நினைப்பு ஒரு மொழி இலக்கியத்திற்கு அவசியமானது. அந்த நினைப்புடன் எழுத்து பத்திரிகையின் ஏடுகள் பரவும் “
என்கிற அறிவிப்புடன் தான் ‘எழுத்து’ சிறுபத்தரிகை தமிழ்நாட்டில் உதயமானது.
சி.சு செல்லப்பாவிற்கு இலக்கிய விமர்சனங்கள் மீது ஆர்வமிருந்தாலும் ‘எழுத்து’ முன்வைத்த பெரும்பாலான பரீட்சார்த்த முறையிலான முயற்சிகள் சிறுபத்தரிகைகளின் வரலாற்றிற்கு பெரும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது என்பது யாரும் மறக்கவே முடியாத கருத்து.
இரண்டாயிரம் பிரதிகள், நேரடியாகச் சந்தாதாரர்களுக்கு மட்டும் என்கிற இரண்டு நிபந்தனைகளுடன்’ எழுத்து’ உருவானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அதிகபட்சமாக நானூறு மனிதர்களைக் கூட சந்தாதாரர்களாகப் பெறவில்லை என்பதே நவீன தமிழிலக்கியத்தின் அவலநிலை.
1959 ஜனவரியில் எழுத்தின் முதல் இதழ் வெளியானது 50 பைசா விலை ஆண்டு சந்தா 5 ரூபாய். கடைசி இதழ் எழுத்தின் பன்னிரண்டாம் ஆண்டில் (1970) வெளியானது 119 ஆவது இதழ் அது. அதனுடன் ‘எழுத்து’ என்கிற சிறுபத்தரிகை தனது மூச்சை நிறுத்திக் கொண்டது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் சி.சு செல்லப்பா ‘எழுத்து’ சிறுபத்தரிகை வழியாகத் தீவிரமாக நவீன தமிழிலக்கியக்க சூழலில் இயங்கியுள்ளார். சிறுகதைகள், இலக்கிய விமர்சன கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், மற்றும் வாடைக்காற்று என்கிற பகுதியில் அன்றைய இலக்கியப் போக்குகள் மற்றும் சச்சரவுகள் பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் அனைத்துமே இன்றும் மாபெரும் இலக்கிய பொக்கிஷங்கள்.
தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றே சி.சு செல்லப்பா இதழ் நடத்தினார். இதைப்பற்றி இன்றும் நவீன தமிழிலக்கியத்தில் சிலாகித்துப் பேசுபவர்கள் உண்டு ஆனால் அதைப் பற்றிய வருத்தங்கள் அவருக்குப் பெரிதாக இருந்தாக தெரியவில்லை. பணம் கிடைத்தால் நகைகளை மீட்டுக் கொள்ளலாம் இல்லையென்றால் மொத்தமாக விற்று விடலாமே என்பதே அவரின் எண்ணமாகவும் இருந்துள்ளது. (சுந்தர ராமசாமியின் குறிப்புகள்)
‘எழுத்து’ மட்டுமின்றி அதன் வழியாக பதிப்பகம் தொழில் இறங்கிக் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நல்ல புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளார். ஊர் ஊராகப் போய் தனது புத்தகங்களை விற்கவும் முயற்சிகள் செய்து அதிலும் பெரும்பாலும் தோல்வியே அடைந்திருக்கிறார்
சி.சு செல்லப்பா பற்றி சுந்தர ராமசாமி சொல்லும் போது தினப்படி உணவைக் கூட குறைவாக எடுத்துக் கொண்டு மெலிந்த தேகத்துடன் உலவிக் கொண்டிருந்த
சி.சு செல்லப்பாவிற்கு இலக்கியம் என்று வந்துவிட்டால் மட்டும் எங்கிருந்து அவ்வளவு ஆற்றல் வரும் என்பது தெரியவில்லை. ஒருமுறை ‘எழுத்து’ இதழிற்கு பைன்டிங் செய்யும் போது பின் (Pin) அடிப்பதற்குச் செலவு பிடிக்கிறதே என்று அவரே உட்கார்ந்து ஒவ்வொரு இதழையும் நூல் போட்டுத் தைக்க ஆரம்பித்து விட்டார். குறிப்பிட்ட தேதிக்குள் இதழ் கொண்டு வர வேண்டும் அதிலும் சிறிய பிழை ஒன்று கூட அந்த இதழில் இருக்கவே கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். தவறாகப் பிழையுடன் அச்சடிக்கப்பட்டால் எவ்வளவு பணம் வீணாகப் போனாலும் அதைப்பற்றிய கவலையின்றி மீண்டும் அச்சடித்துத் தரச் சொல்வார். அவரைப் பொறுத்தவரைக்கும் பிழையுடன் ஒரு பக்கமும் வெளியே வரக்கூடாது.
எழுத்து சிறுபத்தரிகையின் ஆணி வேர்கள் என்றால் அது மூன்று ஆளுமைகள். அவர்கள் சி.மணி, வெ.சாமிநாதன் மற்றும் தருமுசிவராமு என்கிற பிரமிள். இதில் பிரமிள் மீது சி.சு செல்லப்பாவிற்குப் பெரிய அன்பும் பிணைப்பும் இருந்துள்ளது. தன்னுடைய சிறுபத்திரிகையின் வாரிசாக அவரை அறிவிக்கலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த அன்பும் நட்பும் முரண்பாடுகளுடன் முடித்திருக்கிறது (இது நவீன இலக்கியத்தில் இன்று வரை தவிர்க்க இயலாத அம்சம்)
எழுத்து சிறுபத்தரிகையின் முக்கியமான சாதனைகள் புதுக்கவிதைகளுக்கு அது ஆற்றிய பங்களிப்பு. சி மணி, தி. சோ. வேணுகோபாலன், வைத்தீஸ்வரன், பிரமிள், நா.பிச்ச மூர்த்தி, க.நா.சு போன்றவர்கள் தொடர்ந்து புதுக்கவிதைகள் பற்றிய தங்களது கருத்துகளை எழுத்து சிறுபத்தரிகையில் எழுதி அதை வளப்படுத்தினார்கள். இதைத்தவிர கு.ப.ரா, புதுமைப்பித்தன், நா.பிச்ச மூர்த்தி, பி.எஸ்.ராமையா போன்ற ஆளுமைகளுக்குச் சிறப்ப மலர் முதன் முதலில் வெளியிட்டு அவர்களுக்குப் பெருமை செய்ததும் ‘எழுத்து’ சிறுபத்தரிகையே.
எந்தவித ஊக்கமும் ஆதரவுமின்றி பன்னிரண்டு ஆண்டுகள் இலக்கிய வைராக்கியத்துடன் நவீன தமிழிலக்கியத்தில் முக்கியமாக சிறுபத்தரிகை வரலாற்றிற்கு சி.சு செல்லப்பா ஆற்றிய பங்களிப்புக்கு என்றும் அவர் போற்றப்பட வேண்டும் மற்றும் தொடர்ந்து நினைவுகூரப்பட வேண்டும்.
(இந்தப் பதிவு சி.சு செல்லப்பாவின் தனிப்பட்ட இலக்கிய எழுத்துகள் மற்றும் படைப்புகள் பற்றிப் பேசவில்லை அவற்றைப் பற்றியெல்லாம் தனியாக ஒருநாள் எழுத வேண்டும்.)
க. விக்னேஸ்வரன்