இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
இந்தியாவின் மாபெரும் டெக் நகரமாக இருக்கும் பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் தீர்க்க முடியவில்லை. பெங்களூர் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது ஐடி நிறுவனங்கள் அடுத்தது மோசமான டிராபிக் என்பது தான்.
பெங்களூரில் தற்போது தினமும் 1.2 கோடி வாகனங்கள் நுழைகின்றன. இந்த அறிக்கையின்படி, ஏறக்குறைய 1.2 கோடி குடிமக்கள் ஆண்டு தோறும் 60 கோடி மணிநேரத்தை (person-hours)வீணடிக்கிறார்கள், அத்துடன் ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 2.8 லட்சம் லிட்டர் எரிபொருளையும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக வீணடிக்கப் படுகின்றதாம்.
பெங்களூரில் முக்கிய சாலைகளுக்குள் நுழைய congestion tax என்ற கட்டணத்தை வசூலிக்கவும், இதை நகரத்தின் முக்கியமான 8 சாலைகளில் நிறுவ வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
நெரிசல் வரி என்பது குறிப்பிட்ட நகர பகுதிகளில் பீக் நேரத்தில் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது லண்டனில் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முறையாகும்.
பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வரி விதிக்க வேண்டும் என இந்த அறிக்கையில் பட்டியலிட்டு உள்ள பகுதிகளில் சர்ஜாபூர் சாலை, ஓசூர் சாலை, பழைய விமான நிலைய சாலை, பழைய மெட்ராஸ் சாலை, பல்லாரி சாலை, பன்னர்கட்டா சாலை, கனகபுரா சாலை, மாகடி சாலை, மேற்கு சோர்டு சாலை மற்றும் துமகுரு சாலை ஆகியவை இப்பட்டியலில் அடங்கியுள்ளது.
இந்த கட்டமைப்பு பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நகரின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும், கிரீன் ஹவுஸ் கேஸ் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், தனியார் வாகனங்களில் இருந்து பொது போக்குவரத்து முறைக்கு மாறுவதற்கு மக்களை ஊக்குவிப்பதன் மூலம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.