நீ என் மழைக்காலம் – 10 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 10
நகரம் முழுக்க நனைவது போல், மழை சோவென்று கொட்டிக்கொண்டிருந்தது. எப்போதாவது தான் இது போன்ற மழை பெய்கிறது, எல்லா இடத்திலும் சொல்லி வைத்தாற்போல். இல்லாவிட்டால் தியாகராயநகரில் பெய்யும் மழை, மயிலாப்பூரில் பெய்யாது. மயிலாப்பூரில் பெய்வது மந்தவெளி வரைக்கும் கூட வராது. ஆனால் இந்த மழை வஞ்சனை இல்லாமல் ஒட்டு மொத்த நகரத்தையும் நனைத்து குளிப்பாட்டி, தெருக்களில் தண்ணீரை ஓட விட்டிருந்தது. மின்விளக்கு வெளிச்சத்தில் தங்கக்கம்பிகள் தரையில் இறங்கி வருவது போல் தோன்றியது.
நிவேதிதாவின் குரல் மழைமேகத்தில் நுழைந்து, தவழ்ந்து நனைந்து கொண்டிருந்தது .
‘‘காதல் காட்டுத் தீ போன்றது. அதையாராலும் எதுவும் செய்திட முடியாது. தானாகவே எரிந்து தணிய வேண்டும். அல்லது தெய்வீகக் செயலாக பெருமழை பெய்து அதை தணிக்க வேண்டும். மற்றபடி மனிதர் தண்ணீர் விட்டு அணைப்பது சாத்தியமில்லை. இதை நான் சொல்லவில்லை. நம் மகாகவி பாரதியார் தான் சொல்லி இருக்கிறார்…’’ என்று முன்னோட்டம் ஒன்றை கொடுத்துவிட்டு, திருமலை படத்தில் இருந்து,
“அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…”
என்ற பாடலை சுழல விட்டாள். பாடல் சுழலும் நேரம் கார்த்தியை அலைபேசியில் அழைத்தாள்.
‘‘டேய் அழகா எங்கடா இருக்கே? என்ன பண்றே’’என்றாள்.
‘‘கழுதை கெட்டா எங்க இருக்கப் போகுது, ஆபீஸ் தான்…! என்றவன்,
‘‘நெஜமா நான் அழகனா?’’ என்றான்.
‘‘இதென்ன கேள்வி? எனக்கு நீ எப்பவும் அழகன் தான். மற்ற எல்லாரையும் விட ‘ஸ்பெஷல் தான்’’
‘‘சும்மா சொல்லாத! நான் என் மூஞ்சியை பல தடவை கண்ணாடியில் பார்த்திருக்கேன்…’’
‘‘நீ பார்க்கிறதுக்கும், நான் பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு கார்த்தி. நீ உன்னை சாதாரணமாய் பார்ப்பே. நான் என் மனசு, விழி எல்லாவற்றிலும் காதலை நிரப்பிக் கொண்டு பார்ப்பேன்… ! ஆனாலும் நீ அழகில்லை என்று யார் சொன்னது? நீ சிரிக்கும் போது விழும் அந்த கன்னக்குழி போதுமே! வசீகரிக்கும் அந்த காந்தக் கண்கள் போதுமே, மனசை கொள்ளையடிக்கும் அந்தச் சிரிப்பு போதுமே…..’’
‘‘என்ன இருந்தாலும் உன் அழகிற்கு முன் நானெல்லாம் ஏணி வச்சாலும் எட்ட மாட்டேன். என்னைப் போய் எப்படி நீ ஒ.கே. சொன்னியோ?’’ என்றான்.
‘‘வேணும்னா சொன்னதை கேன்சல் பண்ணிடலாமா? வாபஸ் வாங்கிகிட்டா?’’ அவள் அவனை வம்புக்கு இழுத்தாள்.
‘‘கனவில் கூட அப்படி சொல்லாத நிவேதிதா. ஏன்னா, உன்னை அவ்வளவு பிடிக்கும் எனக்கு.’’
‘‘இரு அடுத்தப் பாடலை ஒலி பரப்பிட்டு வரேன்…’’ அவன் பேச்சை துண்டித்தவள், ஒரு காதல் பொன்மொழியைச் சொன்னாள்.
‘காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல். காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான்.’
இதையும் நான் சொல்லலீங்க. ஒரு மேலை நாட்டு அறிஞரின் கருத்து, என்றவள், முள்ளும் மலரும் படத்தில் வரும்,
“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா”
என்ற பாடலை ஒலிக்க விட்டு வந்தாள்.
‘‘எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் கார்த்தி. ரொம்ப என்பது வாய் வார்த்தைக்காக இல்லை. வெறித்தனமாய் பிடிக்கும். உன் மீது பைத்தியம் பிடிக்கும் அளவிற்குப் பிடிக்கும்…. வானம் அளவிற்கு பிடிக்கும்’’ என்றாள்.
‘‘வானம் எவ்ளோ பெருசு இருக்கு தெரியுமா?’’ என்றான்.
‘‘தெரியாதே! அளக்க முடியாதே! அப்படி அளக்க முடியாத அன்பு தான் நான் உன் மீது வச்சிருக்கேன், புரிஞ்சுக்கோ..’’
கார்த்திக் அவளின் அன்பில் கரைந்தான். மெழுகாய் உருகினான். அவளை பத்திரமாய் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தான்.
‘‘நான் ஒண்ணு சொல்லட்டா கார்த்தி?’’ என்றாள்.
‘‘ம்’’
‘‘காதல் பூக்க ஒருசொல் போதும். ஒரு பார்வை போதும். ஒரு புன்னகை போதும்னு சொல்வாங்க. எனக்கு இந்த மூன்றுமே வாய்த்திருக்கிறது, உன்சொல், பேச்சு, பார்வை எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு என்றாள்.
‘‘எப்பவும் இதே மாதிரி பிடிக்குமா என்னை? எந்த சூழ்நிலையிலும்?’’
’‘பிடிக்கும்… பிடிக்கும்டா’’ என்றவள், அப்படி எனக்குப் பிடிக்காமல் போகிறது என்றால், நான் உயிரோடு இல்லை என்று அர்த்தம்…’’ என்றாள்.
‘‘சே!சே! அப்படி எல்லாம் பேசாத நிவேதா’’ பேச்சை மாற்ற விரும்பினான்.
‘‘சரி, நான் ஒண்ணு கேட்பேன், தருவியா?’’
‘‘என்ன?’’
‘‘ ஒரு முத்தம் குடேன்’’
‘‘உனக்கு நேரம் காலமே கிடையாதா?’’ என்றவள், போனை துண்டித்துவிட்டு பாடலுக்கு வந்தாள்.
ஆணுக்கு காதல் வாழ்க்கையில் ஓர் அங்கம். பெண்ணுக்கு காதலே வாழ்க்கை’’ என்ற பொன்மொழியை கூறிவிட்டு,
“நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா”
நீயா படப் பாடலை ஒலி பரப்பி விட்டு,
‘‘இப்போ’’ கேளு என்றாள்.
‘‘அதான் கேட்டேனே…’’
‘‘அதைத் தான் இன்னொரு வாட்டி சொல்லு’’
‘‘ஒரு முத்தம் குடுடி’’ அவன் கிசுகிசுத்தான்.
‘‘நான் மாட்டேம்பா!’’
‘‘அப்ப என்னை பிடிக்கும்னு சொன்னது எல்லாம் பொய்யா?’’
‘‘பொய்யில்லை! ஆனால் நான் தரமாட்டேன். நீ குடு’’
‘‘அப்படியா? நல்ல சான்ஸ். நீயா கொடுத்திருந்தால், ஒண்ணு தான் கொடுத்திருப்பே. நான் என்றால் என் விருப்பம் போல் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்…’’ என்றவன், அப்படியே லைனில் இரு, என்று கூறிவிட்டு போனுடன் மொட்டைமாடிக்கு வந்தான்.
வானத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. இவன் நனையாத இடமாகப் பார்த்து நின்றான். மழை சத்தத்துடன், ‘‘கிடைச்சுதா?’’ என்றான்.
‘‘இல்லியே’’ என்றாள் வேண்டுமென்றே.
‘‘ஊஊஊஊஊம்ம்ம்ப். இப்போ வந்துச்சா ?’’ என்றான்.
‘‘ம்.. ’’ என்றாள் அவள். அவன் மறுபடியும் கொடுத்தான்.
‘‘இப்போ எங்க குடுத்தேன் தெரியுமா?’’
‘‘எங்க?’’
‘‘உன் அழகான காந்த கண்ணுல.’’
‘‘…’’
அவள் பேசவில்லை.
‘‘இப்போ எங்க தெரியுமா…?’’
‘‘எங்க?’’
‘‘பூப்போன்ற உன் கன்னத்தில்…’’
அவள் பேசும் நிலையை தொலைத்துவிட்டு வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘‘இப்போ உன் உதட்டில்’’ அவன் சொல்லி முடித்தபோது வானில் இன்னும் வேகமாய் காற்றுடன் மழைவீசத் தொடங்கி இருந்தது.
-(சாரல் அடிக்கும்)