சென்னையில் இன்று சாலை, மழை நீர் வடிகால் பணிகள் நேரில் முதல்வர் ஆய்வு..!

 சென்னையில் இன்று சாலை, மழை நீர் வடிகால் பணிகள் நேரில் முதல்வர் ஆய்வு..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சாலை பணிகள், மழை நீர் வடிகால் பணிகள் தரமாகவும் முறையாகவும் நடைபெறுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டார்கள்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. அமைச்சர் பெருமக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்ற கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.

இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்த உள்ளேன். இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சாலைப் பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்பதை கண்டிப்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களைத், தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனுக்குடன் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, மாவட்டந்தோறும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஒத்திகைப் பயிற்சிகள் நடத்துவதோடு, பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைத்திடவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையுடன் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, வடகிழக்குப் பருவமழையின் போது பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

அந்த வகையில் இன்று சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள், சாலை பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். வளசரவாக்கம், பெருங்குடி, மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் சாலை பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...