அப்டேட் ஆதிரா – 1 | அபிநயா
அத்தியாயம் – 1
கெட்…..ரெடி…
பொதுவாகவே ஆள்பாதி ஆடை பாதின்னு சொல்வாங்க. நாம தேர்ந்தெடுக்கிற உடைகள் நமக்கு சூட்டாவது ரொம்ப முக்கியம். மாசத்துக்கு நாலு விழாக்குப் போறவங்க எப்படி தங்களோட ஆடைகளை தேர்வு செய்யறாங்க. அதிகம் செலவும் இல்லாம…..கரண்ட் டிரண்டிங்கில டிரஸ் பண்ணிக்கிறதுக்கான டிப்ஸ் பத்திதான் உங்களுக்கு சொல்ல வர்றாங்க நம்ம அப்டேட் ஆதிரா….!
பீரோவைத் தலைகீழாக புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தாள் ஆதிரா. மதன் வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகியும் காபியின் வாசனை ஹாலுக்கு வராததால், தானே கிச்சனுக்குப் போய் கலந்து மனைவிக்கும் எடுத்து வந்தவன். புடவைக்குவியலுக்கு நடுவில் மனைவியைப் பார்த்ததும், “என்ன ஆதிரா ஏதாவது புடவைக்கடைக்கு போயிட்டோன்னு நினைச்சிட்டியா ? கிளி சீட்டு எடுத்துப் போடறாப்பிலே இத்தனையும் எடுத்து போட்டு இருக்கியே ?!”
“ஏன் கேட்கமாட்டீங்க ? வர்ற 10ம் தேதி ஞாயிறு உங்க பிரண்ட் ரிசப்ஷன் இருக்கே மறந்திட்டீங்களா ?”
“அதுக்கு இன்னும் ஒருவாரத்திற்கு மேல இருக்கே….இப்பவே ஏன் ?”
காபியை ஒரு மிடறு விழுங்கியவள். “அதுக்கு….?” என்று இழுத்த இழுப்பில் …. பயந்து “செலக்ட் பண்ணிட்டியா ஆதி ?” என்று கொஞ்சினான்.
“உங்க பிரண்ட்ஸ் சர்க்கிள்லே என்னோட டிரஸ்ஸிங்கு எத்தனை ரசிகைகள் தெரியுமா ? எல்லார் முன்னாடியும் தனியாத் தெரிய வேண்டாமா ? ஏய் இந்தப் புடவை எங்கே வாங்கினே ? இந்த ஜூவல்லரி எங்கே வாங்கினே ? இப்படி நாலு பேர் கேட்டாத்தானே ….நம்ம முதுகுக்குப் பின்னாடி ஒரு இறக்கை முளைக்கும்”.
“அதுசரி…அதுக்கு ஏன் இத்தனை கலைக்கணும் ? போன மாசம் வாங்கின மாம்பழக்கலர் புடவை இருக்கே. சும்மா அட்டகாசமா இருந்தியே ?!”
“அது உங்க அண்ணன் வீடு பால்காய்ச்சினதுக்கு கட்டியாச்சே….?!”
“சரி… அதுக்கு முன்னாடி கொடி கொடியா பெரிய ரோஜாப்பூ இருக்கிறாமாதிரி வாங்குனியே ?”
“அது….இப்போ அவுட் ஆப் பேஷன்….”
“இரண்டு மாசத்துக்குள்ளேவா….?”
“அவனவன் நிமிஷத்துக்கு ஒரு தடவை அப்பேட் ஆகறான் நீங்க இரண்டு மாசத்துக்கு சொல்றீங்க ? இப்போ லாங்பார்டர்…பிளைன் ஸாரி டிசைனர் சோளி இதுதான் பேஷன்…..!”
“அப்போ மறுபடியும் பர்சேஸா….?” மதன் தன் பாக்கெட்டில் இருந்து வெளியே தெரியாதபடி பர்சை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
“ஆமா….ஆனா இந்ததடவை டிப்ரண்டான பர்சேஸ் ! அதுவும் வீட்டிலேயே ?”
ஒருவேளை யாராவது புடவைக்கடைக்காரனை வீட்டுக்கே வரச்சொல்லிட்டாளோ என்று நினைத்தபடியே…. “எப்படி ?”
“ரொம்ப கண்ணை விழிக்காதீங்க…. வெளியே தெரிச்சி விழுந்திடப்போகுது….ஒரு ஐடியா வைச்சிருக்கிறேன்!” . பீரோவைத் திறந்து அடர் சிகப்பு வண்ண புடவையை எடுத்தாள் ஆதிரா. “இதுதான் கட்டிக்கப் போறேன்.”
“இரண்டுமாசம் முன்னால எடுத்தப் புடவையே பழசுன்னு சொன்னே …. இது ஒரு வருஷத்திற்கு மேலாகுது. நாலைந்து தடவை கட்டிட்ட நினைவு எனக்கே இருக்கு…..?”
“நல்ல பொண்டாட்டியா புருஷனோட பர்ஸ்க்கு வேட்டு வைக்கக் கூடாதுன்னு பார்க்கிறேன். வேண்டான்னா …..?”
“ச்சீ….!” “என் ஆதிம்மா எது கட்டினாலும் நல்லாத்தான் இருக்கும்”. மீண்டும் அவன் கை பாக்கெட்டுக்கு பத்திரமாக இருக்கும் பர்ஸை நோக்கிப் போயிற்று.
“இந்த மெட்ரீலியலோட பேரு ஜூட் சில்க். அதுவும் விழா சாயங்காலங்கிறதால லைட்டிங்க்கு நல்லா எடுத்துக் கொடுக்கும். பிளைனா இருக்கிற இந்த புடவைக்கு, இதோ பாருங்க போனமுறை சௌகார்பேட்டை போயிருந்தப்போ…. இந்த வெள்ளை கெட்டி சரிகை பார்டர் வாங்கினேன் விலை ‘90’ ரூபாய்தான். இதை வைச்சி தைக்கப்போறேன்.”
“இப்போ சோளி மட்டும்தான் பாக்கி….”
“இதே புடவையோட சோளியில் இப்படி எதையாவது வெட்டித் தைக்க முடியாதா ?”
“கொழுப்பா…. புருஷன் பாவமாச்சே செலவு வைக்க வேண்டான்னு பார்த்தா விடமாட்டீங்களே ? அதுக்கும் கைவசம் ஒரு ஐடியா இருக்கு. போனமுறை வாங்கின இரண்டு புடவையில் ஒரு சோளிதான் தைச்சேன். வெள்ளைக் கலர்லே முழு ஜரிகை வேலைப்பாடுலே ஒரு சோளித்துணி தைக்காம இருக்கு அதை இதுக்கு பயன்படுத்திட்டா பர்பெக்ட் மேட்ச்….எப்படி என் சாமர்த்தியம்”.
“சமத்து…..பேசாம இந்த ஐடியாவை எல்லாம் அப்டேட் ஆதிரான்னு ஒரு YOUTUBE தொடங்கி போடேன். நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் “ என்றவனை செய்யலாமா ? என்ற யோசனையில் பார்த்தாள். “அப்போ புடவை பிரச்சனை தீர்ந்தது. இனிமே பங்கஷனுக்கு போக பிரச்சனையில்லை!” .
“ அதெப்படி இதுக்கு மேட்சா காதுக்கு கழுத்துக்கு எல்லாம் நகை செட் பண்ண வேண்டாமா ?” என்ற அடுத்த கேள்வியில் இம்முறை தன் பர்ஸ் தப்பப் போவதில்லை என்று மதன் திகைத்து நின்றான்.
(-தொடரும்…)