வேப்ப மரத்துப் பூக்கள் – 8 | ஜி ஏ பிரபா

 வேப்ப மரத்துப் பூக்கள் – 8 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 8

                                    உன் வாழ்க்கையை நீ நேர்மையுடன் வாழப் பழகு.

                                    உனக்காக மற்றவர்கள் வாழ முடியாது. மற்றவர்கள்

                                    வாழ்வை நீ வாழ முடியாது. ஆனால் மற்றவர்கள்

                                    சந்தோஷத்திற்காக நீ தியாகம் செய்ய முடியும்.

                                    “மௌனமே பல சமயங்களில் விபரீதமாகி விடுகிறது.”

            மௌனிகா சூடாய் காபியைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தாள்.

            “என்கிட்டே இருக்கு.” ரகுராமன் தன் பிளாஸ்கிலிருந்து தனக்கு ஊற்றிக் கொண்டார்.

            இருவரும் காண்டீனில் இருந்தார்கள். வெங்கடேச பவனிலிருந்து சாப்பாடு வரும் முன்பு. இப்போது ஒப்பந்தம் கை எழுத்தாகியதும் இங்கேயே சமையல் நடக்கிறது. ஒரு உதவியாளர் நின்று மேற்பார்வை செய்ய, அனைத்தும் நீராவி மூலம் வேகிறது.

மௌனிகா உணவு மற்றும் ஊட்டச் சத்து துறையில் டிப்ளமோ முடித்திருந்ததால் தற்போது அவளையே கேண்டீனில் உணவு சார்ட் தரச் சொல்லி விட்டது நிர்வாகம். பிசியோதெரபி பெஷன்ட்டுகளைப் பார்த்து விட்டு கேண்டீனுக்கு வந்து நோயாளிகளின் குறிப்புகளைப் பார்த்து உணவு மெனு தருவாள். மதியம், மாலை, இரவு மெனு கொடுத்து விட்டு, மாலை வேலை முடிந்து கிளம்பும் போது மறுநாள் காலைக்குத் தேவையான உணவுக்கான மெனுவும் கொடுத்து விட்டுக் கிளம்பி விடுவாள்.

            உற்சாகமாக அவள் வேலை செய்வது நிர்வாகத்தால் கவனிக்கப் பட்டது.

            மௌனிகா சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை. மனிதாபிமானம், சேவை என்ற உணர்வுடன் ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்தாள். ரகுராமனுக்கு அவளின் சுறுசுறுப்பும், உற்சாகமும் கவர அவளுடன் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார். அப்போதுதான் கல்யாணியைப் பற்றிச் சொல்ல மௌனிகா ஒரு கனிவுடன் அவர் பேச்சைக் கேட்டாள்.

            அவள் தன் மனதைப் படிக்கிறாள் என்று புரிய ரகுராமனு நிறைய விஷயங்கள்  பேசினார்.

மனிதர்கள் விரும்புவது அக்கறையும், கவனமும்தான். தன் மன வேதனைகளை, பாரங்களை காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வே தைரியம்,தெம்பைக் கொடுத்து விடும். அத்துடன் ரகுராமன் மௌனிகா தன் மகளாக இருப்பாளோ என்று சந்தேகப் பட்டார். அவளின் தாய் பெயர் என்ன, அப்பா யார் என்று கேட்க விரும்பினார். ஆனால் அவர் தானாக கல்யாணியைச் சந்தித்து எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கல்யாணி விரும்பினாள்.

            “அவங்க சொந்தம், பந்தம்னு எல்லோரும் கூடிய சபையில் உன்னை தன் மகள்னு அவர் அறிவிக்கனும்” என்றிருந்தாள் கல்யாணி.

            அதனாலேயே மௌனிகா அமைதி காத்தாள்.

            “அது என்ன மௌனிகான்னு பெயர்.?”

            “எங்கப்பா பேச வேண்டிய சமயத்துல  அமைதியா இருந்துட்டார். அதனால் எனக்கு இந்தப் பெயர்.”

            “உண்மைதான் பேச வேண்டிய நேரத்தில் பேசாம இருக்கறதும், அனாவசியமா பேசறதும் பல விபரீதங்களுக்குக் காரணம் ஆகிறது. மௌனம் உத்தமம்.”

            “அதுவுமே சில சமயம் பல விபரீதங்களுக்கு காரனமாயிடர்த்தே, உதாரணம் நீங்க.”

            “ஆமாம். தக்க நேரத்தில் விஷயங்களைப் பகிரனும். நான் அந்த சமயத்துல  அம்மா முக்கியம், என் தன்மானம் முக்கியம்னு நினைச்சுட்டேன். அம்மா பேச்சை மறுத்து என் மனைவியை ரகசியமா சந்திச்சது தப்பு. ஆனா என் மனைவியைத்தானே சந்திச்சேன். அம்மாவும் முக்கியம், மனைவியும் முக்கியம். ஒருத்தி என்னை பூமிக்கு கொண்டு வந்தவ. ஒருத்தி என்னையே உலகமா எண்ணி வாழறவ.”

            மௌனிகா அவரையே பார்த்தபடி இருந்தாள்.

            “ கடந்து போனதை இனி மாற்ற முடியாது. இனி வருவது நல்லதா நடக்கணும். அது மட்டும்தான் இனி முக்கியம். எனக்கு என்ன குழந்தை பிறந்திருக்குன்னு தெரியலை. கல்யாணி இருக்காளா, இல்லையான்னு கூடத் தெரியலை.”

            ரகுராமன் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

            “அப்படி ஏன் நினைக்கறீங்க. அவங்களும் உங்களைப் பார்க்க ஏங்கிட்டிருக்கலாம்ல?”

            “அவ ஏங்கினாலும் வர மாட்டா. ஓவரா ஈகோ பார்ப்பா.”

            “முதல்ல நீங்க ரெண்டு பெரும் சந்திக்கணும் சார். அப்போதான் எல்லா மன வேறுபாடுகளும் கலையும்.”

            “அதுக்குத்தான் கடவுளை வேண்டிட்டிருக்கேன்.”

            “கவலைப் படாதீங்க. நீங்க அவங்களையே நினைச்சிட்டிருக்கற மாதிரி அவங்களும் உங்களையேதான் நினைச்சிட்டிருப்பாங்க. ஒரு கதை கேள்விப் பட்டிருக்கீங்களா? அசோக வனத்துல சீதை இருந்தப்போ ஒரு கூட்டுல இருந்த புழு குளவியா மாறி பறந்து போச்சாம். அதைப் பார்த்து சீதை சொல்றா. அந்தக் குளவியையே நினைச்சு, நினைச்சு புழு குளவியா மாறி பறந்து போயிருச்சி, நானும் ராமரையே நினைச்சு, நினைச்சு ராமரா மாறிட்டா என்ன பண்றதுன்னு கேட்கறா.

            அதுக்கு விபீஷணனுடைய மகள் திரிசடை சொல்றா. கவலைப் படாதே. உன்னையே நினைச்சு உருகிட்டிஐக்கற ராமர் சீதையா மாறிடுவார். உலகில் ஒரு ராமர் சீதைதான் அப்படின்னு. உங்க கதையும் அப்படித்தான். கல்யாணிதான் நீங்க. நீங்கதான் கல்யாணி.”

            எட்டி அவள் கையைப் பிடித்துக் கொண்டார் ரகுராமன்.

            “உன் வார்த்தை ரொம்ப ஆறுதலா இருக்கு மௌனிகா. பேசாம நீ என்கூடவே இரேன்.”

                                                “அப்புறம் எங்கம்மா?”

            “உனக்கு எங்கவீட்டுக்கு பக்கத்துலேயே வீடு தரேன். நீயும் உங்கம்மாவும் அங்க வந்துரு.”

            “நல்ல ஐடியா. ஆனா எங்கப்பா வந்துட்டா நாங்க அவர் கூடப் போகணுமே?”

                        “ரகுராமனின் முகம் சுருங்கியது.

            “உண்மைதான். பெண்கள் எப்போதும் பெற்றவர்களுக்குச் சொந்தமில்லை.”

            “அப்படிச் சொல்லாதீங்க. பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.”

            ரகுராமன் பதில் சொல்லாமல் பார்வையை வெளியில் வெறிக்க விட்டார். மனசு சோர்ந்து விட்டது. கல்யாணிக்கு ஆண் குழந்தையா, பெண்ணா என்று தெரியவில்லை. ஆனால் மௌனிகாவைப் பார்க்கும்போது இவள் தன் மகளாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமும், இருக்குமோ என்ற எதிர் பார்ப்பும் இருக்கிறது.

            அவளின் பேச்சு, சிரிக்கும்போது வாயில் விரல் வைத்து சிரிப்பு, ஓரக் கண் சுருக்கம் என்று கல்யாணியை நினைவு படுத்துகிறாள்.அவள் ஒருநாள் காபி கொண்டு வந்தால். கல்யாணி போட்ட மாதிரியே இருந்தது. ஒருநாள் வாழைக்காய் கூட்டு.

            அவர் மௌனிகாவிடம் வெளிப்படையாக கேட்கத் தயங்கினார். அதை அவளும் புரிந்து கொண்டாள். ஒரு ஆழ்ந்த புன்னகையோடு கல்யாணியின் பதிலுக்குக் காத்திருந்தாள்.

            “நாளை மறுநாள் எங்க நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு விழா. நீயும் வாயேன்.”

                                                “என்ன விழா சார்?”

“ எங்க ஹெல்பிங் ஹேண்ட் நிறுவனம் ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆச்சு. இதுவரைக்கும் பத்து பேருக்கு  தொழில் ஆரம்பிச்சு தந்திருக்கோம். நாங்க போட்ட முதலை எடுத்துட்டோம். எனவே தொழிலை முழுசா அவங்க கைல ஒப்படைச்சுட்டு நாங்க விலகிடுவோம். அடுத்து ஒரு அஞ்சு பேருக்கு தொழில் ஆரம்பிச்சுத் தரோம். இதற்கான விழா நாளை மறுநாள் நடக்கிறது. சூர்யாமஹால்ல. மாலை அஞ்சு மணிக்குத்தான் ஆரம்பம், நீயும் வாயேன்.”

            “ஆஹா, இதுதான் கொயின்சிடன்ட்டுன்னு சொல்றதா. எங்கம்மாதான் அந்த விழாவிற்கான ஏற்பாடுகளைப் பண்றாங்க. பலராமன் சார் ஏற்பாடு.”

            “அட, பலராமன் எங்க பார்ட்னர்தான். அவங்க அபார்ட்மென்ட்ல புதிதா குடி வந்திருக்கற லேடிதான்னு சொன்னார். நீதானா அது. அப்போ உங்கம்மாவைப் பாக்கலாம்.”

                        “ஆமாம். பாருங்க. கதையே மாறிடும்.”

            “வணக்கம் சார்.” அதற்குள் ஒருவர் வந்து நின்றார். நடுத்தர வயது. நடுத்தர உயரம். நெற்றியில் விபூதிப் பட்டை. நடுவில் குங்குமம். பளிச் என்று இருந்தார்.

            “வாங்க மணி, வேலை முடிஞ்சுதா?”

            “மதியம் சாப்பாடு வேலை முடிஞ்சுது. மேடம் ருசி பாத்துட்டா, ரூம் சர்வீசை வரச் சொல்லிடலாம். நீங்களும் இங்கேயே சாப்பிடுங்க சார்.”

            சாப்பிட்டாப் போச்சு. எனக்கும் மௌநிகாவுக்கும் கொண்டு வாங்க.”

            அவர் நகர்ந்ததும்  ரகுராமன் சொன்னார். இவர்தான் பத்மாவோட கணவர்.”

            “அட, அதிர்ஷ்டசாலி”- மௌனிகா. “ தப்பிச்சிட்டார்.”

            “எங்கே, நானும் இவனுக்குப் பொண்ணு பார்த்தேன். வேற ஒருத்தி வந்தா அவன் குழந்தையை சரியா பாத்துக்க மாட்டான்னு பயப்படறான்.”

            “நல்ல ஐடியா சொல்லட்டா?”

            “உருப்படியான ஐடியாவா சொல்லு.”

            “இவரையும், பத்மாவையும் சேர்த்து வச்சிடுங்களேன்.”

            ரகுராமன் அவளை யோசனையுடன் பார்த்தார்.

            “பத்மாவுக்குத் தேவை வசதியான வாழ்க்கை. இவருக்கு அந்த வசதி இப்ப வந்திருக்கு. இந்த ஹாஸ்பிடல் கேண்டீன் அவருக்கு உரிமையானது. ஸோ கண்டிப்பா பத்மா சம்மதிப்பாங்க. இவருக்கும் இவர் மனைவி கிடைப்பாங்க. நீங்களும் தப்பிச்சிடலாம்.” –கண் சிமிட்டினாள் மௌனிகா.

            அடக்க முடியாமல் சிரித்தார் ரகுராமன்.

            “என்ன ரெண்டு பெரும் சந்தோஷமா சிரிச்சுட்டு இருக்கீங்க?’

            கேசவ் வந்து அவர்களிடம் நடுவில் ஒரு சேரை எடுத்துப் போட்டு அமர்ந்தான்.

            “மௌனிகா ஒரு ஹாட், ஸ்ட்ராங் காபி.”

            “இதோ.” மௌனிகா எழுந்து போனாள்.

            “என்ன டாக்டர், இன்னைக்கு கேண்டீனுக்கு வந்துட்டீங்க?”

            “மதியம் ஒரு ஆபரேஷன். அதனால் சீஃப் சீக்கிரம் ஓ.பி முடிச்சிட்டார். நானும் ஒரு காபி குடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பறேன்.”

            “ஏன் நீங்க ஆபரேஷன்ல கலந்துக்கலையா?”

            “நான் இப்பத்தான் படிப்பு முடிச்சுட்டு வந்திருக்கேன். ஒரு வருஷம்தான் பயிற்சி. எனக்கு சீனியர்ஸ் நாலு பேர் இருக்காங்க. அவங்க தனியாப் போன பிறகு என்னை அழைப்பார். இன்னும் நிறைய கத்துக்கணும் சார். சீஃப் எனக்கு நிறைய சொல்லித் தரார். தனிப்பட்ட முறையில் பேஷன்ட்டைப் பாக்கச் சொல்றார்.”

 கேசவ் காபியை எடுத்துக் கொண்டான்.

            ‘எப்படிப் போகுது வேலை மௌனிகா?”

            “நல்ல, சுவாரஸ்யமா போகுது சார். அத்துடன் இந்த கேண்டீன் வேலையும் எனக்குப் பிடிச்சது. நீங்க இன்னைக்கு இங்க சாப்பிடுங்களேன்.”

            “நோ,நோ விஜயா பாட்டி வந்திருக்காங்க. அவங்க சமையல்தான் இன்று. அதான் வீட்டுக்குப் போறேன். நிறையப் பேசணும் அவங்ககிட்ட..”

            “வாவ். விஜயா மாமி வந்திருக்காங்களா? நான் அவங்களைப் பாக்கனும்.”

            “இங்க ஒரு நாலு நாள் இருப்பாங்க. ஒருநாள் வாங்க. அடுத்து மதுரை சித்தி வீட்டுக்குப் போயிடுவாங்க. உலகம் சுற்றும் வாலிபி.”

            சிரித்தான் கேசவ். அவனை  ஆசையுடன் ரசித்தார் ரகுராமன். கேசவ் அவரின் அப்பா வழியில் உறவு. அவன் மூலம்தான் கேண்டீன் ஒப்பந்தம் கிடைத்தது. அவன் எழுந்து போன பிறகும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

            “என்ன டாக்டரை ரொம்ப ரசிக்கறீங்க.” மௌனிகா சாப்பாட்டுத் தட்டுடன் வந்தாள். அவருக்கு ஒன்று வைத்து விட்டு தானும் அமர்ந்தாள்.

            “நல்ல பையன். ஒரே பையன். அவன் அப்பாவும் நானும் கிளாஸ்மேட்.”

            “ஆஹா, அப்படியா சங்கதி?”

            “ஆமாம். விஜயா மாமியோட முதல் பெண்ணைத்தான் அவனுக்கு கட்டினது. அவன் சொந்த பிசினஸ். ஓடி, ஓடி சம்பாதிச்சான். என் கல்யாணத்தப்போ வெளி நாட்டுல இருந்தான். கேசவ் ஸ்கூல் ஃ பைனல் முடிச்ச பிறகுதான் இங்க வந்தான். ஒருநாளைக்கு உன்னை அவனுக்கு அறிமுகப் படுத்தறேன்.”- ரகுராமன் எழுந்தார்.

                                    “சாப்பாடு எப்படி? சொல்லவே இல்லை.”

            “உன் மேற்பார்வை. மணியின் கைவண்ணம். சொல்லனுமா?”

            ரகுராமன் சிரித்தபடி நகர்ந்தார். மணி அவசரமாக வந்தார்.

            “எங்கே சார் கிளம்பிட்டாரா?”- ஆவலோடு வினவினார்.

            “சாப்பாட்டைப் பற்றி என்ன சொன்னார்?”

            “மணியின் கைவண்ணம். சொல்லனுமான்னு கேட்டார். இதைவிட என்ன?”

            “மணியின் முகம் மலர்ந்தது. “அருமையான மனுஷன். அவர் இல்லைன்னா நான் இந்த கேண்டீன் ஒப்பந்தம் வாங்கியிருக்க முடியாது.”

            “பொறுமையா இருங்க. உங்களுக்கு ஒரு நல்ல லை ஃப்பும் அமைச்சுக் கொடுப்பார். விரைவில் பத்மா வருவாங்க. உங்க குழந்தை, நீங்க, உங்க மனைவின்னு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.”

            “மணி முகத்தில் ஒரு ஏக்கமும், வேதனையும் சேர்ந்து பரவியது.

            “நான் பத்மாவோட எல்லாத் தவறுகளையும் மன்னிக்கத் தயாரா இருக்கேன் மேடம். என் குழந்தைக்குத் தாயா அவ திருந்தி வந்தா போதும்.”

            “எல்லாம் சரியாகும்.” யாரோ அசரீரியாகச் சொன்னபடி கடந்து போனார்கள்.

-(ஏக்கங்கள் அகலும்…)        

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...