காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடகா விவசாயிகள் தொடர் போராட்டம்!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகா விவசாயிகளின் இப்போராட்டத்தால் மாண்டியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை சொற்ப அளவில் கர்நாடகா கடந்த சில நாட்களாக திறந்துவிட்டு வருகிறது. மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), மைசூரி கபினி அணைகளில் இருந்து இந்த நீர் திறக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என கடந்த 5 நாட்களாக கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாண்டியாவில் நேற்றும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மலவள்ளி, பாண்டவபுரா ஆகிய இடங்களிலும் போராட்டம் நடந்தது. கே.ஆர்.எஸ் அணையை முற்றுகையிடவும் விவசாயிகள் முயற்சித்தனர். அப்போது காவிரி ஆற்றில் இறங்கி நின்று தமிழ்நாட்டுக்கு எதிராக முழக்கங்களை கன்னட விவசாயிகள் எழுப்பினர். இதனால் மாண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இதனிடையே தமிழ்நாடு அரசு காவிரி நீர் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழ்நாட்டுக்கு வெறும் 5,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனத்துக்கு போதுமானது இல்லை. ஆகையால் தமிழ்நாட்டிக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.