ரஷ்யாவின் “லூனா 25” திட்டம் தோல்வி…
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி வெடித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி ஒருவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விண்வெளி துறையில் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு முன்னோடியாக சோவியத் ரஷ்யா இருந்தது. முதன் முதலில் விண்வெளிக்கு ராக்கெட்டை, செயற்கைக்கோளை, விலங்குகளை, மனிதர்களை குறிப்பாக பெண்களை, நிலவுக்கு விண்கலனை அனுப்பியது இந்த நாடுதான். இதுமட்டுமல்லாது 80களில், வளர்ந்து வந்த எளிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களையும் சோவியத் ரஷ்யா தனது சொந்த செலவில் விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. அப்படியாக தான் இந்தியாவிலிருந்து இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவும் விண்வெளிக்கு சென்றிருந்தார்.
இவர் விண்வெளியில் 7 நாட்கள் தங்கி இந்திய விண்வெளி வரலாற்றில் மகத்தான சாதனை புரிந்தார். மட்டுமல்லாது இந்தியாவுக்கு தேவையான கிரயோஜெனிக் என்ஜின் கொடுத்தும் சோவியத் ரஷ்யா உதவி செய்தது. இப்படிப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரரான ரஷ்யா தற்போது அது அனுப்பிய ஒரு விண்கலம் தோல்வியில் முடிந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 1990களுக்கு பிறகு சோவியத் ரஷ்யா உடைந்ததால் நிலவை நோக்கிய விண்வெளி பயணம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அரை நூற்றாண்டு காலத்திற்கு பின்னர் ரஷ்யா மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கியது. அப்படி உருவானதுதான் லூனா 25 எனும் விண்கலம். இந்த விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டிருந்தது. லூனா 25 விண்கலத்தின் ரோவர் நிலவில் ஓராண்டு ஆய்வு நடத்த இருந்தது. இதற்கேற்ப கடந்த 11ம் ஆண்டு ரஷ்யா லூனா 25 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இது சந்திரயான் 3 விண்கலத்தை போல பூமியின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, பின்னர் நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி பொறுமையாக டிராவல் செய்யாது.
நேரடியாக நிலவுக்கே சென்று அதன் பின்னர் தென் துருவத்தில் தரையிறங்கும் வகையில் மிகவும் அட்வான்ஸாகவும், அதிக பொருட் செலவுடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் உள்ள கருவிகள் நிலவில் துளையிட்டு அதன் மூலம் சேகரிக்கப்படும் மண்ணை ஆய்வு செய்யும். இப்படி அனுப்பி வைக்கப்பட்ட லூனா தரையிறங்க ஆயத்தமான நிலையில் எதிர்பாராத விதமாக அதன் பூஸ்டர்கள் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மோதியது. இதனால் இந்த திட்டம் தோல்வி என ரஷ்யா அறிவித்தது.
இந்நிலையில்தான் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸிலிருந்து மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி ஒருவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 90 வயதான மைக்கேல் மரோவ் எனும் இந்த விஞ்ஞானி இதுவரை ஏராளமான சோவியத் ரஷ்ய திட்டங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கூறுகையில், “இந்த சம்பவம் என் வாழ்க்கையில் நடந்த கடினமான விஷயமாகும். லூனா 25ஐ நிலவில் தரையிறக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. நாங்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னர் நிலவை ஆராய விண்கலத்தை அனுப்பினோம். நிலவு குறித்த ஆராய்ச்சியில் இது புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று நினைத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.