முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது
காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்திற்கு, ரூ.404 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியாகியிருந்த நிலையில், இந்த திட்டம் குறித்து அடுத்த தகவல் வெளியாகியிருந்தது. வரும் கல்வி ஆண்டு முதல், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்க போகிறார்.. இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விரிவாக்கத்துக்கு நகர்கிறது. அந்தவகையில் இந்த திட்டத்துக்காக, 2023-24 நிதியாண்டில் ரூ.404.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அரசாணையும் வெளியாகியிருந்தது. அதில், “அனைத்து குழந்தைகளுக்கும் காலை 8 மணி முதல் 8.50 மணிக்குள் சிற்றுண்டி வழங்க வேண்டும். கலப்படமின்றி உணவு சமைக்கப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உணவு வழங்கும் முன், பள்ளி மேலாண்மைக் குழுவினர் அதை உண்டு பார்த்து, பின்னர் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்” என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அடுத்த தகவல் ஒன்று இதுகுறித்து வெளியாகி உள்ளது.. 31,000 பள்ளிகளில் படிக்கும், 15 லட்சம் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்போவதால், அதற்கு, 2 மாதங்களுக்கு தேவையான ரவை, சம்பா ரவை, சேமியா ஆகியவை, தலா, 617 டன் கொள்முதல் செய்யும் பணியில், தமிழக நுகர்வோர் கூட்டுறவு இணையம் ஈடுபட்டுள்ளதாம்.. அந்தவகையில், இப்போதைக்கு “பாம்பினோ” என்ற நிறுவனத்திடம் இருந்து சேமியா, வறுத்த ரவையும், அனில் நிறுவனத்திடமிருந்து சம்பா ரவையும் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவை, ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு தேவை என்று கணக்கிட்டு, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு, பிறகு, அங்கிருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி நடந்து வருதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.