காத்து வாக்குல ரெண்டு காதல் – 6 | மணிபாரதி

 காத்து வாக்குல ரெண்டு காதல் – 6 | மணிபாரதி

அத்தியாயம் – 6

ந்தினி அவளது சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது போன் ஒலித்தது. எடுத்து நம்பர் பார்த்தாள். “அப்பா“ என பெயர் தெரிந்தது. ஆன் பண்ணி “சொல்லுங்கப்பா..“ என்றாள்.

“ஒண்ணு சொன்னா என்னை திட்ட மாட்டியே..“

“என்னப்பா..“

“பால் வாங்கலாம்ன்னு கடைக்கு போயிருந்தேன்.. வாங்கிட்டு திரும்பும் போது கல்லுல கால இடிச்சுகிட்டேன்.. நகம் லேசா பேத்துகிச்சு..“

நந்தினி பதறி போனாள்.

“எதுக்குப்பா நீங்க கடைக்கு போனிங்க.. சொன்னா சாய்ந்தரம் வரும் போது நா வாங்கிட்டு வர மாட்டனா.. சரி இப்ப எப்படி இருக்கு..“

“ரத்தம் கசிஞ்சுகிட்டே இருக்கு.. துணி வச்சு சுத்தி இருக்கேன்..“

“சரி இருங்க நா வரேன்..“

“இல்லம்மா நா பாத்துக்குறேன்..“

“என்னத்த பாத்துக்குவீங்க.. இருங்க, நா வந்ததும் ஹாஸ்பிட்டல் போகலாம்..“

“சரிம்மா..“

இருவரும் போனை துண்டித்தார்கள்.

நந்தினி பர்மிஷன் சொல்லி விட்டு, ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தாள். பாஸ்கரன் வலியை பொறுத்துக் கொண்டவராக கண்களை மூடி ஈஸி சேரில் சாய்ந்து படுத்திருந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கிய நந்தினி ஆட்டோக்காரரிடம் “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.. பக்கத்துல ஹாஸ்பிட்டல் வரைக்கும் போய்ட்டு வரனும்..“ என்று கூறி உள்ளே வந்தாள்.  சத்தம் கேட்டு பாஸ்கரன் எழுந்து கொண்டார்.

“ஏன்ப்பா இப்படி பண்றீங்க..“

“ஒண்ணுமில்லம்மா.. சின்ன காயம்தான்.. ஒரு டிடி இஞ்சக்சன்  போட்டா சரியாயிடும்..“

“சரி ஆயிடும்தான்.. ஏற்கனவே உங்களுக்கு சுகர் இருக்கு.. புண்ணு ஆறுறதுக்கு நாளாகாதா..“

“அதான் டேப்லட்ஸ் எடுத்துக்குறனே..“

“என்னவோ போங்க.. நா சொல்றது உங்களுக்கு புரிய மாட்டங்குது..“

இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள்.

ஆட்டோ ஹாஸ்பிட்டல் வாசலில் வந்து நின்றது. இருவரும் இறங்கி உள்ளே வந்தார்கள். டாக்டரை சந்தித்து விஷயத்தை சொன்னார்கள். டாக்டர் துருத்தி கொண்டிருந்த நகத்தை கட் பண்ணி எடுத்தார். பாஸ்கரன் வலியால் துடித்தார்.  அதை பார்த்த நந்தினி கவலையில் மூழ்கினாள். டாக்டர் காயத்தை சுத்தப்படுத்தி மருந்து தடவினார். பின் டிடி இஞ்சக்சனை போட்டு விட்டார். மூன்று நாட்களுக்கு டேப்லட்ஸ் எழுதிக் கொடுத்தார். நந்தினி பணத்தை எடுத்து கொடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

“இனி எது தேவைன்னாலும் என்கிட்ட சொல்லுங்க.. நா வாங்கிட்டு வரேன்..“

“ஏன்ம்மா இவ்வளவு பதட்டப்படுற..“

“முடியலப்பா.. உங்களுக்கு எதாவது ஒண்ணுன்னா மனசு தாங்க மாட்டங்குது..“

“இருக்கும்தான்.. தப்பில்ல.. ஆனா இது ஒரு சின்ன விஷயம்தான..“

“சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ உங்கள எந்த குறையும் இல்லாம கடைசி வரைக்கும் நா பாத்துக்கனும்ப்பா.. அதுதான் என்னோட ஆசை..“

அவர் அவளை பெருமையுடன் பார்த்தார். “என் வளர்ப்பு தப்பா போகல..“ என்றார்.

அப்போது அவரது போன் ஒலித்தது. எடுத்து நம்பர் பார்க்க, வெங்கடாச்சலம் என பெயர் தெரிந்தது. ஆன் பண்ணி “சொல்லுங்க தாசில்தார்..“ என்றார்.

“ரிட்டையர்ட் தாசில்தார்..“ என்றார் வெங்கடாச்சலம்.

“அதுக்காக பண்ண சர்வீஸ் இல்லைன்னு ஆயிடுமா..“

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.. வர்ற சன்டே அன்னிக்கு நாங்க உன் வீட்டுக்கு வரலாம்ன்னு இருக்கோம்.. உனக்கு வசதி எப்படி..“

“வெல்கம்.. வெல்கம் மை ஃபிரண்ட்..“

“அட்ரஸ் மேப்ப சென்ட் பண்ணி விடு..“

“உன் சன்னுக்குதான் வீடு தெரியுமே..“

“ஆமால்ல.. சரி வந்துடுறோம்..“

இருவரும் போனை கட் பண்ணினார்கள். “யாருப்பா..“ நந்தினி கேட்டாள்.

“வெங்கடாச்சலம் அங்கிள்.. சன்டே அன்னிக்கு ஃபேமிலியோட இங்க வரானாம்..“

அவளது முகத்தில் சந்தோஷம் தென்பட்டது.

“வரட்டும்ப்பா..“ என்றாள்.


ஞாயிற்றுக் கிழமை.

நந்தினியும், பாஸ்கரனும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.  வாசலில் கார் வந்து நின்றது. சத்தம் கேட்டு இருவரும் வாசலுக்கு ஓடி வந்தார்கள். காரிலிருந்து ராகவ், வெங்கடாச்சலம், மாலதி மூவரும் இறங்கினார்கள். ராகவ்வை பார்த்து நந்தினி திடுக்கிட்டாள். ராகவ்வும் அவளைப் பார்த்து திடுக்கிட்டான். அதை கவனித்த வெங்கடாச்சலம் “என்ன ரெண்டு பேரும் அப்படி பாத்துக்குறீங்க..“ எனக்கேட்டார். நந்தினி “அங்கிள் ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ்லதான் ஒர்க் பண்றோம்..“ என்றாள். அவர் “வாட் ஏ சர்ப்ரைஸ்..“ என்றார். அனைவரும் அதைக் கேட்டு மகிழ்ந்தார்கள். பாஸ்கரன் அவர்களை உள்ளே அழைத்து வந்தார். ஹாலில் இருந்த சோபாவில் அவர்கள் உட்கார்ந்தார்கள். நந்தினி அவர்களுக்கு காபி எடுத்து வந்து கொடுத்தாள். அவர்கள் குடிக்க தொடங்கினார்கள். வெங்கடாச்சலம் பாஸ்கரனிடம் “அன்னிக்கு நீ வீட்டுக்கு வந்தப்ப கூட நந்தினி ஒர்க் பண்ற ஆபிஸோட பேரை சொல்லல..  சொல்லி இருந்தா அன்னிக்கே இவங்க ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ்லதான் ஒர்க் பண்றாங்கன்ற விஷயம் தெரிஞ்சுருக்கும்..“ என்றார்.

மாலதி குறுக்கிட்டு “நீங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சுருக்கிங்க.. உங்க புள்ளைங்க ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ்ல ஒர்க் பண்றாங்க.. கேக்குறதுக்கே நல்லா இருக்கு..“ என்றாள்.

பாஸ்கரன் “எல்லாம் இறைவனோட சித்தம்..“ என்றார்.

வெங்கடாச்சலம் “நீ இன்னும் இதை விடலையாடா..“ என கிண்டலாக கேட்டார்.

“எப்படி விட முடியும்..? அது உயிரோட கலந்ததாச்சே..“

“இந்த பைய படிக்கும் போது என்ன பண்ணுவான் தெரியுமா..“

“என்ன பண்ணுவார் அங்கிள்..“

“படிக்குறானோ இல்லையோ, பரீட்சை பேப்பர்ல ஓம் நமச்சிவாயான்னு எழுதிட்டுதான் ஆன்சர் எழுதுறதுக்கே தொடங்குவான்..“

“இப்பவும் அதான் பண்ணிகிட்டு இருக்கார்..“

“இப்பவும் எக்ஸாம் எழுதுறானா..“ எனக்கேட்க அனைவரும் சிரித்தார்கள்.

பின் விருந்து பரிமாறப்பட்டது. நந்தினி ஹோட்டலில் இருந்து வரவழைத்திருந்தாள். அவர்கள் ருசித்து ருசித்து சாப்பிட்டார்கள். பாஸ்கரன் “ரஞ்சிதம் இருந்துருந்தான்னா ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பா..  ஹோட்டல்ல ஃபுட் ஏற்பாடு பண்ண வேண்டிய அவசியம் இருந்துருக்காது.. எல்லாத்தையும் ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணிருப்பா.. என்ன பண்றது.. நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்..“ என்றார். மாலதி “கவலைப்படாதிங்கண்ண.. இப்பதான் நாங்க வந்துட்டோம் இல்ல.. இனி நம்ம ரெண்டு குடும்பமும் வேற வேற இல்ல.. ஒண்ணுதான்..“ என்றாள். அப்போது ராகவ்வும் நந்தினியும் ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். நந்தினி, “இந்த நிகழ்வு முன்பே நடந்திருந்தால் இவனை நிராகரித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதோ?“ என நினைத்தாள்.  ராகவ் “அம்மா சொல்வதைப் பார்த்தால் வேறு எதாவது முடிவெடுத்து விடுவாளோ“ என நினைத்து லேசாக பயந்தான். நல்ல வேளை, அப்படி எதுவும் வெளிப்படையாக அவள் பேச வில்லை.

சாப்பிட்டு முடித்து, புறப்பட்டு காரில் போய்க் கொண்டிருக்கும் போது, மாலதி “நந்தினி ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா.. நம்ம ராகவ்வுக்கு எப்படி ஒரு பொண்ணு அமையனும்ன்னு மனசுல நினைச்சுகிட்டு இருந்தேனோ.. அப்படியே இருக்கா..“ என்றாள்.

அதைக் கேட்டு ராகவ் திடுக்கிட்டான்.

வெங்கடாச்சலம் “உனக்கு அவளை புடிச்சுருக்கா..“ எனக்கேட்டார்.

“ஆமாங்க..“

“அவ்வளவுதான.. கவலைய விடு.. அவளையே நம்ம வீட்டு மருமகளாக்கிடுவோம்..“

ராகவ் மேலும் திடுக்கிட்டான்.

-(காற்று வீசும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...