வேப்ப மரத்துப் பூக்கள் – 5 | ஜி ஏ பிரபா

 வேப்ப மரத்துப் பூக்கள் – 5 | ஜி ஏ பிரபா

 

அத்தியாயம் – 5

                     “நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பது மட்டுமே

                     நம் கடமை. அதை எப்படி நடத்த வேண்டும் என்பதை

                     இந்த பிரபஞ்சம் முடிவு செய்து கொள்ளும்.”

              “வாவ்” வாய் திறந்து கூவினாள் மௌனிகா.

       “எவ்வளவு பிரம்மாண்டம். ஒரு ஊரையே அடக்கிடலாம் போலிருக்கே.”

       மௌனிகாவின் வியப்பை ரசித்தபடி கல்யாணி ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.

       விஜயா மாமியின் பேரன் இங்குதான் நரம்பியல் டாக்டரிடம் உதவியாளராக இருக்கிறான். அவன் மூலம்தான் மௌனிகாவுக்கு இங்கு பிசியோதேரபிஸ்டாக வேலை கிடைத்தது.

       கல்யாணி டாக்டரை இதற்கு முன் பார்த்ததில்லை. பேர் மட்டும் கேசவ் சங்கரன் என்று தெரியும். முன்புறமிருந்த ரிசப்ஷனில் அவர் பெயர் சொல்லிக் கேட்டதும் ஒரு பெண் வழிகாட்டினாள். அவன் இருந்த பகுதியில் நூறு பேருக்கு மேல் இருந்தார்கள்.

       “நிறைய பேருக்கு நரம்புக் கோளாறுதான் பிரச்சினை”.

       “டென்ஷன் நிறைந்த வாழ்க்கை. கலோரி  அதிகமான உணவு. பீட்சா, அது இதுன்னு சாப்பாடு. என்ன சத்து இருக்கும்? எந்நேரமும் எதையோ பிடிக்கப் போவது போல ஓடிட்டே இருக்காங்க. உடல் தளர்ச்சி ஆயிடும்.”

       நர்ஸ் பெண்ணிடம் கேசவ் பெயர் சொல்லி விஜயா மாமி சொல்லி விட்டார்கள் என்று கூறியதும், இரண்டு நிமிஷத்தில் கேசவ் வெளியில் வந்தான். நல்ல உயரம்.வெண்ணெய் நிறம். கண்கள் குழந்தையின் கனிவோடு இருந்தது. பார்த்ததும் இரு கை கூப்பி வணங்கினான்.

       “பாட்டி முதல்லியே போன் செஞ்சுட்டாங்க. நீங்க எதுக்கு வந்தீங்க?”

       “அப்படி இல்லை. ஒரு மரியாதைன்னு இருக்குல்ல? நேர்ல பார்த்து நன்றி சொல்லிட்டு, எனக்கும் இங்க பக்கத்துல ஒரு வேலை இருந்தது. முடிச்சுட்டு போலாம்னு வந்தேன்.”

       “வாங்க முதல்ல என் சீஃப் பாத்துடலாம். அப்புறம் எம்.டியைப் பாக்கலாம். எம்.டி.யோட பையன்தான் என் சீஃப்.” கேசவ் அவர்களை அழைத்துச் சென்று பெரிய டாக்டருக்கு அறிமுகப் படுத்தினான். டாக்டர் கனிவோடு பேசினார்.

       “எந்த வேலையும் கடினம் இல்லை. நம்முடைய உதவியை எதிர்பார்த்து நிறைய பேர் இருக்காங்க. அன்போடு, கனிவோடு எதையும் செஞ்சா நல்லதே நடக்கும். அப்பாவைப் போய்ப் பாரும்மா. இப்போது கொடுக்கற சம்பளத்தை வாங்கிக்க. உன் வேலையைப் பார்த்து இன்கிரீஸ் செய்வோம்.”

                     “நன்றி சார்.

       “வெளியில் யாரனும் பிசியோதெரபி வேணும்னு சொன்னா நீங்க போலாம்.”

              “பார்க்கலாம் சார். முதல்ல என் வேலையில் நான் நிறைய கத்துக்கணும். வெறும் ஏட்டுப் படிப்பை விட அனுபவப் படிப்பும் வேண்டும். பேஷன்ட்சுக்கு வெறும் மருந்து மட்டும் தராமல் சைக்காலஜியும் சேர்த்து வைத்தியம் செய்யணும். நமக்கு நலமாகும்னு நம்பனும். அதுவே முழு மருந்து. இந்த முறைல நான் வைத்தியம் செய்ய நீங்க அனுமதிக்கணும்.”

       “நல்லாச் சொன்னே. செய்மா. இந்த மருத்துவமனைக்கு வந்தா காசு பிடுங்குவாங்கன்னு இல்லாம, அன்பும், கனிவுமா வைத்தியம் பார்ப்பாங்கன்னு சொல்லணும். நம்ம ஹாஸ்பிடல் மொபைல் வேன்ல வாரா வாரம் அருகிலுள்ள கிராமங்களுக்குப் போய் இலவசமா வைத்தியம் செய்யறோம். நீயும் போகலாம்.”

       “கண்டிப்பாக சார். எனக்கு அந்த ஆசை உண்டு. எத்தனையோ ஏழைகள் வைத்தியம் செஞ்சுக்க வசதி இல்லாம இருக்காங்க. அவங்களுக்கு பிசியோதெரபி செய்யலாம். உடற்பயிற்சி வீட்டு பெண்களுக்கு சொல்லித் தரலாம். என்னால முடிஞ்சதை நான் செய்யறேன் சார்.”- பணிவுடன் பேசினாள் மௌனிகா.

              “குட், கேசவ் இவங்களை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போ.”

       டாக்டர் கூறியதும் கேசவ் அவர்களுடன் வெளியில் வந்தான்.

       கல்யாணியை கிளம்பச் சொல்லி விட்டு கேசவ் அவளை எம்.டி.யிடம் அழைத்துச் சென்றான். அவரிடம் பேசி விட்டு, சொன்ன சம்பளம் மனதுக்கு ஏற்புடையதாக இருந்தது. திருப்தியுடன் இறங்கி வந்தார்கள்.

       பெரியவர் ஒரு பேஷன்ட் பற்றி குறிப்பிட்டார். “ நீ வேணா அவங்களைக் கவனியேன்.”

       யோசனையுடன் தலை ஆட்டினாள்.

       அவர் சொன்னது ரகுராமனின் தாயார் பற்றி.

       “பிபி அதிகமாகி ஸ்ட்ரோக் வந்திருக்கு. லைட்தான். அவங்களுக்கு சிகிச்சை கொடுத்து சரியாயிட்டாங்க. அவங்களுக்கு பிசியோதெரபி கொடுத்து சில பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தோம். ஆனா இன்னும் சரியா நடக்க முடியலை. கை கால் அசைக்க முடியலைன்னு சொல்றாங்க. முயற்சி செய்யறதில்லைன்னு நினைக்கிறேன். நீ வேணா போய்ப் பாரேன்” என்றார்.

       அதை  யோசித்தவள் “அந்த பேஷண்ட்டை நான் போய்ப் பார்க்கவா?”

என்று கேட்டாள் கேசவிடம்.

“ஓ. தாராளமா. அவங்களோட பையன் இங்கதான் இருக்கார். வாங்க அறிமுகப் படுத்தறேன்” என்று கூட்டிச் சென்றார்.

       ரகுராமன் இந்த மருத்துவமனையைப் பற்றி விசாரித்து, லாபத்தைக் கணக்கிட்டு வெங்கடேச பவனுக்கு இங்கு காண்டீன் ஒப்பந்தம் வாங்கத் தந்திருந்தார். அவரின் ஹெல்பிங் ஹேன்ட் நிறுவனத்தில் செயலாளர் என்ற முறையில் மேற்பார்வை செய்ய இங்கு இருந்தார். கேசவ் அவளை கேண்டீன் முன்புறம் இருந்த அவரின் அலுவலக அறைக்குத்தான் அழைத்துச் சென்றான்.

       “வாங்க டாக்டர்.”ரகுராமன் உற்சாகமாக வரவேற்றார்.

       “காபி குடிங்க.” எதிரில் இருந்த பிளாஸ்கிலிருந்து காபியை எடுத்துக் கொடுத்தார்.

       “வீட்டிலிருந்தே கொண்டு வந்துடறீங்களா?”-கேசவ்.

       “என் மனைவி காபியைத் தவிர வேறு யார் காபியும் இதுவரை நான் குடிக்கலை”

       மௌனிகா ஒரு பிரமிப்போடு அவரைப் பார்த்தாள். உள்ளுணர்வு இவர்தான் தன் தகப்பன் என்றது. அவரின் கல்யாண புகைப்படம் ஒன்று கல்யாணி வைத்திருந்தாள். அதே முகத்தை ஒத்திருந்தது. பெயரும் ரகுராமன். அவர்தான் இவரோ? என்று உள்ளம் துடித்தது.

       கடவுளே என் குழப்பத்தைத் தீர்த்து எங்களை சந்திக்க வை— மனசு இரைந்தது.

       ரகுராமனின் முகமும் மௌனிகாவின் தோற்றத்தைப் பார்த்து சிறிது அதிர்ச்சியைக் காண்பித்தது. பக்கவாட்டுத் தோற்றம் கல்யாணியை நினைவு படுத்தியது. மௌனிகா அம்மாவின் நிறம். லேசாய் மஞ்சள் கலந்த பாலின் நிறம். அகன்ற கண்கள் தாமரை மொட்டுப் போல் குவிந்து வளைந்த புருவம் வரைந்தது போல் இருந்தது.

       தன்னிச்சையாக உதட்டில் புன்னகை உறைந்திருந்தது. அவரையே கூர்ந்து பார்த்தபடி இருந்தாள். கேசவ் அவளைப் பற்றிக் கூறினான். அவளைப் பற்றிச் சொல்லி விட்டு கிளம்பினான்.

       “குட், உன் பேர் என்னம்மா?”

“மௌனிகா. நானே விவரங்களைச் சொல்லிடறேன். அம்மா ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தறாங்க. அப்பா இருக்கார். எங்க இருக்கார்னு தெரியாது. கூடிய விரைவில் சந்திப்பேன்னு நினைக்கிறேன். டில்லியில் படிச்சிட்டு சீர் மிகு சென்னை நகரில் வாழ்வதற்காக காலடி எடுத்து வச்சிருக்கேன்.”

       “ ஃ பைன். கல்யாணம் ஆயிருச்சா?”

       “இன்னும் யாரும் சிக்கலை.”

       வாய் விட்டுச் சிரித்தார். “ டில்லியில் படிச்சிருக்கே. தலை விரிச்சிப் போட்டு பேஷனா இல்லாம பாந்தமா, புடவைல மங்களகரமா இருக்கே. நம்ம தமிழ்ப் பண்பாடு படி இருக்கே, அழகா தமிழ் பேசறே. பாடுவியா?”

              “பாடுவேன், ஆடுவேன். பன்னிரண்டு வருஷம் பாட்டும், பரதமும் கத்துண்டிருக்கேன். இங்க சென்னை சபாக்கள்ல புரோக்ராம் தந்திருக்கேன்.”

       “அப்படிப் போடு. நான் உங்கம்மாவைப் பார்க்கணும்.”

       “கண்டிப்பா. ஒருநாள் சந்திக்கலாம்.”-புன்னகையோடு கூறினாள் மௌனிகா.

       ரகுராமன் எழுந்தார். “இப்பத்தான் வந்தேன். ஒரு நிமிஷம் உட்காரு. சின்ன வேலை இருக்கு. முடிச்சுட்டு வரேன்.” என்று வெளியில் போனார். மௌனிகா ஒரு யோசனையுடன் ஜன்னலுக்கு வெளியில் பார்வையைப் பதித்திருந்தால். கவனம் கீழே சாலையில் பதிந்திருந்ததில் பின்னாடி கவனம் பதியவில்லை.

       “ஒகே. முடிந்தது” என்ற ரகுராமன் குரல் கேட்டுத் திரும்பியவள் பிரமித்து சட்டென்று எழுந்தாள். கண் இமைக்க மறந்து, பார்வை நகர மறுத்தது. ரகுராமின் சேருக்கு பின் சுவற்றில் அவரும், கல்யாணியும் இருக்கும் பெரிய புகைப்படம் மாட்டியிருந்தது.

       உண்மை தெரிந்த பரவசம். அப்பா என்று உடல் அதிர்ந்தது. சட்டென்று தொண்டை அடைக்க, கண்ணில் நீர் திரண்டது. தன்னைச் சமாளிக்க முடியாமல் திணறியவள் ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

              “நானும், என் மனைவியும்.” புன்னகையுடன் கூறினார் ரகுராமன்.

       “ரொம்ப நல்லா இருக்கு சார். அவங்க அழகா இருக்காங்க.”

              “மனசின் அழகு முகத்தில் தெரியுது.” அவர் குரலில் தெரிந்த நெகிழ்வு மௌனிகாவை ஆச்சர்யப் படுத்தியது. கல்யாணியை அவர் இன்னும் நேசிக்கிறார் என்று புரிய மகிழ்ச்சியாக இருந்தது.

       “இப்பத்தான் கொண்டு வந்து கொடுத்தாங்க. இங்க மாட்டிடலாம்னு ஆளை வரச் சொன்னேன். இதை மாட்டியதும் இந்த இடத்துக்கே ஒரு அழகு வந்துருச்சி பாத்தியா?”

       அவர் குரலில் தெரிந்த உணர்வுகளை ரசித்தாள் மௌனிகா.

       “சொல்லும்மா.” ரகுராமன் அவளை உட்காரச் சொன்னார்.

       “நீங்கதான் சொல்லணும் உங்க அம்மாவைப் பற்றி.”

       ரகுராமன் விளக்கமாக அம்மாவின் நோய் பற்றிச் சொன்னார். தந்த சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகளைப் பற்றிக் கூறினார்.

      “ஆனா இயல்பா எழுந்து நடக்க மாட்டேன்றா. வீல் சேரிலேயே உட்காந்துண்டு இருக்கா. சர்க்கரை கண்ட்ரோல் இல்லாம இருக்கு. அடிக்கடி கண்டதையும் நினைச்சு தானும் நொந்து, இருக்கறவாளையும் நோகடிக்கிறா. இங்க ஹாஸ்பிடல் கூட்டிண்டு வரலாம்னா எப்படி அவளை நகர்த்துறதுன்னு தெரியலை. வீட்டுக்கு வந்து பிசியோதெரபி தந்தா தேவலாம்.”

       “கண்டிப்பா வரேன் சார். வீட்டுல உங்க மனைவி இருக்காங்களா?”

       “ நான், எங்கம்மா கீழே இருக்கோம். மேல் போர்ஷன்ல என் அக்கா இருக்கா.”

              “ உங்க மனைவி?”

       “அதான் சொன்னேனே, நான், எங்கம்மான்னு.”

              “புரியலை சார். விளக்குங்க.”

       “அட நீ புத்திசாலி. புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன்.”

                     “யானைக்கும் அடி சறுக்கும்.”

              “அட நீ யானையா? நான் மயில்னு நினைச்சேன்.”

       “ஆஹா, என் குரல் என்ன அவ்வளவு கர்ண கொடூரமாவா இருக்கு.?”

       கண்ணை மூடிக் கேட்டா உன் குரல் என் மனைவி குரல் மாதிரியே இருக்கு.”

              “நீங்க பேசறதுல இருந்து உங்க மனைவி கூட இல்லைன்னு நினைக்கிறேன்.”

       பதில் சொல்லாமல் தலை அசைத்தார். மௌனிகாவைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு கல்யாணியை நினைவு படுத்தியது. தலையை அசைத்துப் பேசும்போது, வாயை இரண்டு விரலால் மூடிச் சிரிக்கும்போது கல்யாணி வந்து போனாள். மௌனிகாவைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஒரு தயக்கம் தடுத்தது.

       தயக்கம், அச்சம், ஒரு பயமே அவர்களுக்குள் இருந்தது. மன நெகிழ்வில் இருவருமே தங்களை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை.

       “உங்க மனைவி மேல ரொம்பப் பிரியம் போல?’”

       “என் லைஃபே அவதான்மா. ஒரு தப்பு பண்ணிட்டு வேதனைல சுருண்டிருக்கேன்.”

       “உங்க கூட இல்லைன்னு தெரியுது. இப்போ எங்க இருக்காங்க?”

       “இங்க” ரகுராமன் நெஞ்சில் கை வைத்துக் காட்டினார். கண்கள் திரண்டது.

       “தன்னை மறந்து தாவி அவர் கையைப் பிடித்துக் கொண்டாள் மௌனிகா.

                           ரகுராமன் சுதாரித்துக் கொண்டார்.

       “அந்த போட்டோல பார்த்தீல்ல. உன்னை மாதிரியே இருப்பா  கல்யாணி. அதனால்தான் கொஞ்சம் மனசு வெளிப்படுத்திட்டேன். தப்பா எடுத்துக்காதே.”

       மௌனிகா முன்னேறினாள். அவர் கையைப் பிடித்து அழைத்து வந்து கிழக்குப் பார்த்து நிறுத்தினாள். குனிந்து வணங்கினாள்.

              “என்னை ஆசிர்வாதம் செய்யுங்க சார்.”

       “ உன் மனசுல இருக்கற ஆசைகள் எல்லாம் நிறைவேறி அமோகமா சகல சௌபாக்கியத்துடன் வாழணும் “- மனதார வாழ்த்தினார் ரகுராமன்.

              “மனசுல ஒரு ஆசை.”

                           “சொல்லுமா”

       “நான் விரைவில் என் தந்தையைச் சந்திக்கணும்.”

       “இறைவன் இருக்கான்மா. சீக்கிரம் நடக்கும்” –வாழ்த்திய ரகுராமன் மனதுக்குள் சின்ன எதிர்பார்ப்பு- – – – –  அவள் தன் மகளாக இருக்கக் கூடாதா?”

-(ஏக்கங்கள் நீளும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...