பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்ட கோர விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்…
தெற்கு பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்ட கோர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் என்றும் காயமடைந்த 100 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இருந்து சுமார் 275 கிலோ மீட்டர் (171 மைல்) தொலைவில் உள்ள நவாப்ஷாவின் சஹாரா ரயில் நிலையம் அருகே ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன.
ரயில் பெட்டிகள் உருக்குலைந்து கிடந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் பல பகுதிகளில் இருக்கும் ரயில் பாதைகள் பழங்காலத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த பாதைகளில் விபத்து ஏற்படுவது அசாதாரணமானது அல்ல. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் விபத்து நடந்த இடத்தில் டஜன் கணக்கான பொதுமக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்ததைக் காட்டின. சில பயணிகள் கவிழ்ந்த ரயில் பெட்டிகளில் இருந்து வெளியே வர முயற்சித்துக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர் பிபிசி உருதுவிடம் பேசியபோது, பல பெண்கள் மற்றும் குழந்தைகள் தரையில் கிடந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்தார். “அவர்கள் பயத்திலும், பதற்றத்திலும் கூச்சலிட்டு அலறினர். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அருகில் உள்ள இந்த கால்வாயில் இருந்து என் கைகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டுவந்து, மயக்கத்தில் இருந்த பயணிகளின் முகத்தில் தெளித்தேன். அவர்களுக்கு சுயநினைவு திரும்பும் என்ற நம்பிக்கையில் இதுபோல் நான் செய்தேன்,” என்று நசீர் அகமது கூறினார்.
மேலும், “ரயில் தடம் புரண்டபோது ஜன்னல் வழியாக வெளியில் விழுந்ததால்” உயிர் பிழைத்ததாக நாசர் என்ற பயணி கூறினார். தனது மகனுடன் ரயிலில் பயணித்த அஸ்லாம் கூறுகையில், “நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அப்போது நாங்கள் பயணித்த ரயில் பெட்டி கீழே விழுந்தது. அது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு பேரழிவு போல் இருந்தது.” விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் சாத் ரபீக் கூறுகையில், சம்பம் நடந்த போது, ரயில் சாதாரண வேகத்தில் பயணித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், தடம் புரண்டதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இயந்திரக் கோளாறு அல்லது நாசவேலையின் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அதே நேரம் ரயில் தண்டவாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தான் விபத்து நேர்ந்தது என்று வெளியான தகவல்களை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கராச்சியில் உள்ள ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குறைந்தது எட்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம்புரண்டு கவிழ்ந்தன என்றார். மேலும், மீட்புப் பணியாளர்களுடன் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்க உதவினார்கள் என்றும் அவர் கூறினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தொலைதூரத்தில் உள்ள, சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிந்து மாகாணத்தின் நவாப்ஷா மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் பணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து சிந்து மாகாணத்தின் உள்மாவட்டங்களுக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சிந்து மாகாண தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஷர்ஜீல் மேமன் பிபிசியிடம் பேசியபோது, அரசு அதிகாரிகள் மீட்புப் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளித்துச் செயல்பட்டதாகத் தெரிவித்தார். “இந்த மீட்புப் பணிகளில், நாங்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறோம்,” என்று கூறினார். 2021 ஆம் ஆண்டில், சிந்து மாகாணத்தில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர் என்பது மட்டுமின்றி டஜன் கணக்கான பயணிகள் காயமடைந்தனர். 2013 மற்றும் 2019 க்கு இடையில், இதுபோன்ற விபத்துக்களில் 150 பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.