நேர்மையான மாணவருக்குப்  பாராட்டு

 நேர்மையான மாணவருக்குப்  பாராட்டு

சமீபத்தில் சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவியின் காலில் வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தார்.   பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ரோட்டில்  ஒற்றை வெள்ளிக் கொலுசு தவறி விழுந்துவிட்டது. இது குறித்து பெற்றோர் தகவல் தெரிவித்ததும், பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பேசும்போது, பள்ளி மாணவர்கள் தாங்கள் நடந்து செல்லும் சாலையில் வெள்ளிக் கொலுசு கிடந்தால் தகவல் தெரிவிக்குமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருபவர் சபரிவர்ஷன்.  மறுநாள் பள்ளிக்கு வந்த இம் மாணவர்   காலையில் வந்த உடன் பள்ளிக்கு வெளியே சற்று தூரத்தில் ரோட்டில் மண்ணில் வெள்ளிக் கொலுசு போன்று புதைந்து கிடப்பதாகவும், மேலே சற்று லேசாக நீட்டி கொண்டு இருப்பதாகவும் வகுப்பு ஆசிரியரிடம் கூறினார். வகுப்பு ஆசிரியரும் மாணவரும் சென்று பார்த்தபோது தொலைந்துபோன வெள்ளிக் கொலுசு மண்ணின் உள்ளே இருப்பதைக் கண்டுபிடித்து  எடுத்தனர். 

உடனடியாக வெள்ளிக் கொலுசை தவறவிட்ட மாணவியின் வீட்டுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் ஏற்கனவே இருந்த ஒரு கொலுசை கொண்டுவந்து காண்பித்து, இந்தக் கொலுசும் அதன் ஜோடிதான் என்று உறுதிப்படுத்திப் பெற்றுக்கொண்டனர். தனது மகளுக்கு முதன்முதலாக வாங்கிய வெள்ளிக் கொலுசு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் மாணவியின் தந்தை விடைபெற்றார்.

பள்ளிக்கு வெளியே, ரோட்டில் பல பொதுமக்களும் மாணவர்களும் செல்லும் இடத்தில் கவனமாகப் பள்ளியில் சொன்னதைக் கேட்டு இளம் வயது மாணவர் சபரிவர்ஷன்  நல்ல எண்ணத்துடன், நேர்மையுடன் வெள்ளிக் கொலுசை  எடுத்துக் கொடுத்த நிகழ்வைப் பாராட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் பரிசு வழங்கினார். நிகழ்வில் மாணவரின் தாயார் அமலாவிற்கும்  பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாணவரின் தாய்  தனது மகளின் செயலைப் பார்த்து தன்னை அறியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் மாணவருக்குப்  பாராட்டு தெரிவித்து, வாழ்த்தினார்கள். நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமி  நன்றி கூறினார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...