“ஊருசனம்” இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி….!
நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் நமது மக்களும் கொண்டாடவேண்டும் என்று கேட்டுள்ளார் கார்த்தி.
இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட பாடல்கள் உருவாகி வரும் சூழலில் நமது நாட்டுப்புற கலைகளையும் நம் சொந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது ‘ஊருசனம்’ என்கிற தனி இசை பாடல்.
இந்த பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து இந்த இசை ஆல்பத்தை தயாரித்தும் உள்ளார் அட்ராம் (ATRam). முத்துச்சிற்பி மற்றும் ரேப்பர் ஃபனோஹா இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலை கண்கவரும் வகையில் இயக்கியுள்ளார் முகின் ஜெயராஜ். இந்தப் பாடலுக்கான நடனத்தை கோகுல் வடிவமைத்துள்ளார். ட்ரெண்ட் மியூசிக்கில் வெளியாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இந்த பாடலை பார்த்துவிட்டு நடிகர் கார்த்தி, தனது மகிழ்ச்சியையும் இந்த இசைக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் இன்றைய இளம் கலைஞர்களும் நமது மக்களும் கொண்டாடுவதை பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக உணர முடிகிறது. பல தலைமுறைகளாக கடந்து வரும் நம் முன்னோர்களின் சொத்தான பாரம்பரிய கலை வடிவத்தை இப்போதும் தொடர்ந்து பயிற்சி செய்து வரும் கலைஞர்களை பார்த்து தலை வணங்குகிறேன். இந்தப் பாடலை வடிவமைத்த விதமும் அதில் அழகாக நாம் பாரம்பரியத்தை வெளிப்படுத்திய விதமும் சிறந்த ஒரு முயற்சி” என்று கூறியுள்ளார் கார்த்தி.