‘குருதேவ்’ ரவீந்தரநாத் தாகூர்
.இந்தியாவுக்கும், பங்களா தேஷ்ஷுக்கும் தேசீய கீதங்களை என்றோ அளித்தவரும், இருண்ட கண்டமென இந்தியா கருதப்பட்ட காலகட்டத்திலேயே – 1913 – நோபல் பரிசு பெற்றவரும், அக்காலத்திலேயே உலகம் போற்றிய கவிஞரும், இலக்கிய கர்த்தாவும், கவின்கலை (aesthetics)/நுண்கலை ரசிகமணியுமான, தனது எழுபது வயதில் உலகம் போற்றும் ஓவியரும் ஆன ‘குருதேவ்’ ரவீந்தரநாத் தாகூர் அவர்கள் அமரரான தினம், ஆகஸ்ட் 7, 1941.
தாகூர்.. கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம் போன்ற அனைத்து எழுத்துலகப் படைப்பாளி. நாட்டுப்பற்று, பெண்ணியம், கலாச்சாரம்,
உலக அமைதி, சுற்றுச்சூழல், மனிதநேயம் போன்ற கருத்துக்களை தன் எழுத்தில் தீட்டிய முற்போக்கு எழுத்தாளர்.
வண்ணங்கள் தீட்டி ஓவியங்கள் வரைவதில் வல்லவர். சாந்திநிகேதன் என்கிற கல்விநிலையம் அமைத்த உண்மையான கல்வியாளர் ( இன்றிருப்பவர்களை போலல்ல). இன்றும் அந்த கல்விநிலையம் கொல்கத்தாவில் ஒரு பெருமைவாய்ந்த பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது.
நிறைய புத்தகங்களை படித்த சிந்தனையாளர்.
கவியரசர் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர்
வங்க கவி ரவீந்தரநாத் தாகூர் ஆவார்.
இந்தியாவின் முதல் நோபல் பரிசினை இலக்கியத்திற்காக பெற்றவர்.
இந்திய கலாசாரத்திற்கும், தத்துவத்திற்கும். மேன்மைக்குமான எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.
தனது எட்டாம் வயதிலேயே கவிதை இயற்ற துவங்கியவர்,
தனது பதினாறாம் வயதில் சூரிய சிங்கம் என்ற பெயரில் புகழ் மிக்க கவிதையை வெளியிட்டவர்.
தனது பதினாறாம் வயதிலேயே சிறு கதை மற்றும் நாடகத்தைவெளியிட்டவர்.
ஆங்கிலேய அரசுக்கெதிரான விடுதலைப்போரில் பங்கேற்றவர்.
சட்டம் பயில பிரிட்டன் சென்றவர் இலக்கியத்தின் மேலுள்ள காதலால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
1883ஆம் ஆண்டு மிருனாளினி தேவி என்ற பெண்ணை மணந்தார்.
1901ஆம் ஆண்டுசாந்தினி கேதனில் ஆசிரமத்தை நிறுவினார்.
1913ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார்.
1915ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அவருக்கு செவ்வீரர் பட்டத்தை அளித்தது.
1919ஆம் ஆண்டுஅமிர்தசரசில் ஆங்கிலேய அரசின் கொடூர நடவடிக்கைகளை கண்டித்து தமக்களித்த செவ்வீரர் பட்டத்தை துறந்தார்.
1872ஆண்டு முதல் 1938வரையிலான காலங்களில் ஐந்து கண்டங்களை சேர்ந்த முப்பத்து ஒரு நாடுகளுக்கு சென்று வந்தார்.அவருக்கு எச்,ஜி,வேல்ஸ்,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட உலக புகழ் பெற்ற மேதைகளுடன் நட்பிருந்தது.
அவர் இயற்றிய ஏராளமான கவிதை ,கதைகள் காலம் காலத்திற்கும் நிலைத்து நிற்பவை.
கீதாஞ்சலியும்,இந்திய தேசிய கீதம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
நீண்ட காலம் நோய வாய்ப்பட்ட தாகூர் 7.8.1941அன்று காலமானார்.
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாச மின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம் !
அடிசினல் சேதி :
இந்திய மக்களுக்காக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்திய பெருமைக்குரியவர். ஆம்.. இந்திய காப்பீட்டுத்துறையில் தாகூருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, ஹிந்துஸ்தான் கோ-ஆப்பரேட்டிவ் லைப் அஷூரன்ஸ் சொசைட்டி என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனது வீட்டிலேயே நடத்தி வந்தார். பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவில் தனியார் வசமிருந்த இன்சூரன்ஸ் துறை தேச உடைமை ஆவதற்கு தாகூரின் இந்த காப்பீட்டு நிறுவனம் மிகப்பெரிய பங்களித்திருக்கிறது. மக்களின் சேமிப்பு நிதியை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள். எனவே இன்சூரன்ஸ் துறையை தேச உடைமை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முழக்கமிட்டு, தாகூரின் இந்த நிறுவனத்தில் வேலை செய்த தோழர் சரோஜ் சௌத்ரி உள்ளிட்ட தோழர்களின் போராட்டக்கரங்கள் இணைந்ததால் உதயமானது தான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கது.