வேப்ப மரத்துப் பூக்கள் – 4 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 4
“பெண்ணின் வலிமை என்பது உடல் சார்ந்தது அல்ல.
மனம் சார்ந்த வலிமை அது. எல்லா போராட்டங்களையும்
எதிர்த்து நிற்கும் தீரத்தையும், தைரியத்தையும் அந்த
வலிமையே தருகிறது.”
பத்மாவின் அலங்காரமே அவள் முதிர் கன்னி என்று காட்டியது.
உள்ளே வந்ததுமே அம்மாவின் காலில் விழுந்து வணங்கினாள். அம்மா அதில் புளகாங்கிதம் அடைந்தாள். முகம் மலர
“வாம்மா என்று அழைத்து அனைத்துக் கொண்டாள்.
“இந்தச் சின்ன வயசுல எத்தனை பணிவு. இளசுகள் வயசானவன்களைக் கண்டாலே கிண்டல் செய்யும். மரியாதை தருவதில்லை. பிரேமா ரொம்ப சாந்தமா இருக்கா பொண்ணு.”
“உனக்குப் பிடிச்சா போதும்மா.”
“நீ உள்ள போம்மா”– அம்மா அவளை உள்ளே அனுப்பினாள்.
“பத்மா, நீ எங்களுக்குப் போய் காபி போட்டுக் கொண்டு வா.” பிரேமா உத்தரவு போட்டாள். பத்மா உள்ளே சென்றாள்.
பத்மாவுக்கு நாற்பதுக்கு மேல் இருக்கும். ஆனால் இருபதாகக் காட்ட முயன்றிருந்தாள். ரகுராமனை விட சிறிது குள்ளம்தான். பருமனாக இருந்தாள். தலைமுடியை பறக்க விட்டிருந்தாள். காதுகளில் தோசைக்கல் போல் குண்டலம். நெற்றியில் கண்ணுக்குத் தெரியாதா பொட்டு. பட்டையாய் கண்மை. இறுக்கிப் பிடிக்கும் சுடிதார் வயிற்றுச் சதைகளை பிதுக்கி வெளிக்காட்டியது. நல்ல நிறம். அதில் அம்மா மயங்கி விட்டாள்.
அம்மா வெளிப்பூச்சை நம்புகிறவள். உன்னைப் போல் யாரானும் உண்டா என்றால் அப்படியே தன்னிடம் இருப்பதைக் கொடுத்து விடுவாள். பிரேமா அம்மாவிடம் பிரியமாக இருப்பதைப் போல் நடித்து அவளின் நகை, பட்டுப் புடவை என்று வாங்கி விடுவாள். அவள் கணவன் பரமசிவம் வேஸ்ட் என்று அம்மாவுக்கு அவளிடம் சிறிது கரிசனம் ஜாஸ்தி.
அவள் பையன் பாலமுருகனுக்கு பாட்டியிடம் செல்லம் ஜாஸ்தி. ரகசியமாக பணம் வாங்கிக் கொண்டு போய் விடுவான். ஆனால் கௌசல்யா அப்படி வர மாட்டாள். அவளை பிரேமா வரவும் விட்டதில்லை. அவள் கணவனை சிறிது கேவலமாகப் பேசி விட கௌசல்யா அதிகம் வர மாட்டாள்.
“என்னை பிரேமாதானே பாத்துக்கறா. அம்மான்னு என்னைக்கானும் கௌசல்யா வந்து பாத்திருக்காளா “என்று அம்மாவுக்கு அவள் மேல் வருத்தம் உண்டு. ஆனால் பிரேமா ஒவ்வொருவராக அவளிடமிருந்து பிரித்து தனிமைப் படுத்துகிறாள் என்று அம்மாவுக்குப் புரியவில்லை. அவள் சொல் பேச்சு கேட்டுதான் அம்மாவும் கல்யாணி மேல் பழி சுமத்தி துரத்தியது.
பிரேமாவுக்கு தன் கணவரின் சித்தி பெண் பத்மாவை ரகுராமனுக்கு மணமுடிக்க ஆசை. அவளை தன் தம்பிக்கு மணமுடித்து சொத்து, வீட்டு அதிகாரம் என்று எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக் கொள்ள ஆசை. ஆனால் கல்யாணியை விரும்பிய ரகுராமன் பத்மாவை மறுத்து விட்டார்.
கல்யாணியை துரத்தி விட்டு அவளும் இத்தனை வருஷமாக அம்மாவை வற்புறுத்தி வருகிறாள். ஆனால் ரகுராமன் சம்மதிக்க மறுத்து விட்டார்.
“அம்மா இங்க பார். பத்மா நல்ல பொண்ணு. நீயே பார்த்தீல்ல? எவ்வளவு மரியாதைன்னு. சொந்தமா ஒரு வீடு இருக்கு. அம்பது பவுன் நகை இருக்கு. அவளும் படிச்சிட்டு ஒரு கம்பெனில வேலை பாக்கறா. இது போக அவ அப்பா கொஞ்சம் பணம் வச்சிருக்கார். அவர் காலத்துக்குப் பிறகு எல்லாம் அவளுக்குத்தான். பிக்கல்,பிடுங்கல் இல்லை. ஒரே பொண்ணு.”
“எல்லாம் சரிதான். ஆனா ரகு சம்மதிக்க மாட்டேன்றானே.”
“நீதான் கொஞ்சம் அழுத்திப் பேசணும். இன்னும் அவளையே நினைச்சிட்டு இருக்கான். ஓடிப் போனவ எங்க இருக்கா, எவன் கூட இருக்கான்னு தெரியுமா?”
“அப்படிச் சொல்லாதே.”அம்மா சங்கடத்துடன் மறுத்தாள்.
“நீ இன்னும் அவளுக்கு சப்போர்ட் செய். ரகுராமன் வெளிநாடு போனப்போ கன்சீவ் ஆகியிருக்கா. யார் என்னன்னு கேட்டப்போ பதில் சொல்லாம மௌனமா நின்னவ அவனைப் பார்க்க தைரியமில்லாம ஓடிப் போயிட்டா. அவ்வளவு ஒழுக்கம்னா இருந்து தன்னை நிரூபிச்சிட்டு போயிருக்கலாம்ல?”
பிரேமா குரலில் காட்டம். கல்யாணி திருமணமாகி வந்த நாளில்ருந்து அவளுக்கு அவள் மேல் வெறுப்பு, பொறாமை, வந்த நாள் முதல் அவளைப் பற்றி அம்மா, ரகுராமனிடம் புகார் சொல்லிக் கொண்டிருப்பாள். அவள் கோபத்துக்குப் பயந்தே அம்மா அவளை எதிர்த்துப் பேச மாட்டாள்.
இப்போதும் அமைதியாக இருந்தாள்.
“உன்னால பதில் சொல்ல முடியலை இல்லையா? ரகுகிட்டப் பேசி அவனை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வை. பத்மா இங்கதான் இருப்பா. தாய் மாமனா எங்களுக்குப் பொறுப்பு இருக்கு. அவ என் நாத்தனார் பொண்ணு. அவளை ரகுவுக்குச் செஞ்சு வச்சுட்டா, அவனுக்கும் கல்யாணம் ஆன மாதிரி ஆச்சு. எங்க கடமையும் நிறைவேறிடும். இவளைத் தவிர வேறு யார் வந்தாலும் நீ நிம்மதியா இருக்க முடியாது.”
பிரேமா கறாராகப் பேசினாள்.
அம்மா மௌனமாக இருந்தாள். உடல் தளர்ந்து, தனியாக இருக்கும் சூழ்நிலையில் அவளால் பிரேமாவை எதிர்த்துப் பேச முடியவில்லை. அவள்தான் இப்போது அவளுக்குத் துணை. ரகுவுக்கு கல்யாணம் ஆகி விட்டால் பயமில்லை. பத்மா நல்ல பெண்ணாக இருக்கிறாள். அவளே இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து விட்டால் பிரேமாவையும் திருப்தி செய்த மாதிரியும் இருக்கும்.
அம்மாவுக்கும் ஆசையாக இருந்தது. ஆனால் ரகுராமன்…?
இன்னும் சிறிது நேரத்தில் ரகுராமன் மதிய சாப்பாட்டுக்கு வந்து விடுவான். பத்மாவைப் பார்த்ததும் என்ன ரகளை நடக்கப் போகிறதோ?
ரகுராமன் ஒரு ஐடி கம்பெனியில்தான் முதலில் இருந்தார். அமெரிக்காவில் இருந்தவர் அங்கிருந்து நான்கு வருடத்திற்கு முன் திரும்பி விட்டார். ஒரு வருஷம் எந்தத் தொழிலும் செய்யாமல்தான் இருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக ஒரு அமைப்பின் மூலம் சிறு தொழிலுக்கு உதவி செய்கிறார். பணம் உள்ள மூன்று பேர் ஒன்று சேர்ந்து முதலீடு செய்து திறமை உள்ளவர்கள் தொழில் செய்ய உதவுவார்கள்.
முதல் ஒரு வருடம் லாபத்தில் பங்கு. தாங்கள் போட்ட முதலீடு எடுத்ததும், ஒரு குறிப்பிட்ட சதவீதம் லாபத்தில் எடுத்துக் கொண்டு தொழிலை அவர்கள் கையில் ஒப்படைத்து விடுவார்.
அந்த விதத்தில் ரகுராமன் தான் வழக்கமாக டீ, வடை சாப்பிடும் ஒரு அய்யர் கடைக்கு உதவி செய்கிறார். நன்றாகத்தான் ஓடியது கடை. திடீரென்று கடை கை மாறியது. அய்யருக்கு வேலை போனது. சின்னச் சின்னதாக நாலு குழந்தைகள். என்ன செய்வது என்று தவித்தவருக்கு ரகுராமனின் ஹெல்பிங் ஹேன்ட் கை கொடுத்தது.
“எங்ககிட்ட பணம் இருக்கு. உங்க கிட்ட திறமை இருக்கு. தெரிஞ்ச தொழிலையே ஆரம்பிங்க. அதற்கான திட்டமிடல், மார்க்கெட்டிங் நாங்க பாத்துக்கறோம். லாபத்துல பாதிப் பாதி. எங்க முதலீட்டை எடுத்ததும் முக்கால் பாகம் உங்களுக்கு, கால் பாகம் எங்களுக்கு.” என்று ஒப்பந்தம் போட்டு, வெங்கடேச பவன் ஆரம்பிக்கப் பட்டது.
இப்போது அது லாபகரமாக ஓடுகிறது. ஒரு மிகப் பெரிய மருத்துவமனையுடன் ஒப்பந்தம் போடப்பட்டு அந்த உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளது. அது விஷயமாக அலைவதில் சரியான நேரத்துக்குச் சாப்பிட வர முடிவதில்லை அவரால்.
இன்னைக்கு வந்ததும் கேட்டுடணும் என்று காத்திருந்தாள் அம்மா.
ரகுராமன் வரும்போதே அவசரமாக வந்தார்.
“என்னம்மா சாப்பிட்டியா?”
“ நீ வரட்டும்னுதான் காத்திருந்தேன். பேசணும்.”
‘ என்ன பேசனும்?”– கேட்டவர் பத்மாவைப் பார்த்ததும் சுதாரித்தார்.
“ஓ பத்மாவா? என்ன பேசுவேன்னு தெரியும்”
“தெரியும்ல. அப்போ பதில் சொல்லு”
“அதான் சொல்லிட்டேனே. ஒருமுறைதான் கல்யாணம்னு”
“அந்தத் தரம் கேட்ட கழுதையை எத்தனை நாள் நினைச்சிட்டு இருக்கப் போறே?” பிரேமா கோபத்துடன் கேட்டாள்.
‘பிரேமா” கோபத்துடன் சீறினார் ரகுராமன்.
“போதும் இத்தனை நாள் பேசினது போதும். இனி கல்யாணியைப் பத்திப் பேசினால் நான் மனுஷனா இருக்க மாட்டேன். அவளைப் பத்தி அவதூறாப் பேசினா அடுத்த நிமிஷம் நீ இங்கிருந்து போயிட வேண்டியதுதான்.”
“நல்லா இருக்குடா. ஒரு ஒழுக்கம் இல்லாதவளுக்காக கூடப் பிறந்தவளையே வீட்டை விட்டு விரட்டறியா?”– அம்மா பதறினாள்.
“அவ ஒழுக்கம் கெட்டவன்னு நீ நம்பறியா?”
ரகுராமன் குரலில் கூர்மை.
“வயத்துல வளர குழந்தைக்கு அப்பன் யாருன்னு கேட்டா பதில் சொல்ல முடியாதுன்னு சொன்னாளே!”
“அதனால் அவ ஒழுக்கம் கெட்டவள் ஆகிடுவாளா”
“ இப்போ என்ன சொல்றே நீ”
“அம்மா இப்போ சில விஷயங்களை நான் பகிரங்கப் படுத்த வேண்டும். கல்யாணி வீட்டை விட்டுப் போனதுல ஒரு சதி இருக்கு. அதை அம்பலப் படுத்தனும். இங்கு நாடு வீட்டில் கல்யாணியை வச்சு சில உண்மைகளை நான் சொல்லணும். அதுக்குப் பிறகு அவ என்னை மன்னிச்சு ஏத்துகிட்டா சரி. இல்லைன்னா அப்புறம் பாக்கலாம்.”
“கல்யாணிக்கு வேற கல்யாணம் நடந்திருந்தா?- பத்மா.
“ இருக்காது. அவ என் கல்யாணி. பத்மா இல்லை.”
ரகுராமன் அதிர்ந்த நடையுடன் உள்ளே சென்றார்.
“ நான் இனி இங்க ஏன் இருக்கணும். கிளம்பறேன்.” கோபத்துடன் பத்மா சீறினாள்.
“கொஞ்சம் பொறுமையா இரு பத்மா?”– பிரேமா கெஞ்சினாள்.
“இனியும் எதுக்குப் பொறுமை? அதான் தெளிவா சொல்லிட்டுப் போய்ட்டாரே”
“பிரேமா சங்கடத்துடன் நெளிந்தாள். பத்மாவின் ஆரம் ஒன்று அவளிடம் இருக்கிறது. இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தால் அந்த ஆரத்தை உனக்கே அன்பளிப்பாகத் தருகிறேன் என்றிருந்தாள் பிரேமாவின் தாயார்.
அதைக் கேட்டு விடுவாளோ என்று பயந்தாள் பிரேமா.
அதற்கு ஏற்ற மாதிரி பத்மா முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு “அத்தை, சீக்கிரம் எனக்கு நல்ல பதில் சொல்லுங்க. இல்லைன்னா என் ஆரத்தையும் நாங்க கொடுத்த ரெண்டு லட்ச ரூபாய் பணத்தையும் கொண்டு வந்து தந்துடுங்க.”– என்று கூறி விட்டு யாரிடமும் சொல்லாமல் இறங்கிப் போனாள்.
“என்னடி இது? ஆரம், ரெண்டு லட்ச ரூபாய் பணம்னு”
“அதெல்லாம் உனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம். எனக்கு ரகுகிட்ட நல்ல பதில் வாங்கித் தரனும். இல்லைன்னா ரெண்டு லட்சம் வாங்கித் தா?” பிரேமாவும் கோபத்துடன் படி ஏறிப் போனாள்.
அம்மாவுக்கும் சிறிது கோபம் வந்தது. “ என்னடி இது சும்மா பணம், பணம்னு அவனையே பிடுங்கறீங்க” என்று கொதித்தாள்.
“என்ன விஷயம்?” ரகுராமன் உடை மாற்றிக் கொண்டு வந்தார்.
அம்மா கொதிப்போடு விஷயத்தைக் கூறினார்.
“இப்போ புரிஞ்சுதா? அவளுக்கு ஆதாயம். அதனால்தான் இத்தனை கோபம். பணம் அவளுடைய சொந்த விஷயம். இனி நான் சல்லிக் காசு தரதா இல்லை. கல்யாணியை கண்டு பிடிக்கணும். எனக்கு குழந்தை பிறந்து இருந்தால் அதுக்குச் சேர்க்கணும். நான் ஒரு முடிவோடதான் இருக்கேன்.”
ரகுராமன் அம்மாவுக்கு தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்தார்.
“நீ சாப்பிடு. எனக்கு பிரேமா கொண்டு வந்து தருவா”
“அவளுக்கு இருக்கற கோபத்துல இன்னிக்கு உனக்கு சோறு கிடைக்காது. அவளுக்கு ஏன் பத்மா மேல இத்தனை ஆர்வம்னா அந்த ஆரமும், லட்ச ரூபா பணமும்.”
“இல்லைடா அவங்க அவசரப் படுத்தறாங்க.”
“அது ஏன்னு யோசிச்சியா?”
“- – – – – – – – – – – – – – – – – – – – – – -“
“அந்த பிரேமா முதல்ல ஒருத்தன் கூட ஓடிப் போய் ஒரு குழந்தையும் இருக்கு. அதை அங்கேயே விட்டுட்டு வந்துட்டா. அவளை எனக்கு செஞ்சி வச்சிடனும்னு முயற்சி. அவ முதல் புருஷன் அந்தக் குழந்தையை வச்சிண்டு அவஸ்தைப் படறான். அது வேற பெண் குழந்தை பத்து வயசாறது.”
“உனக்கெப்படித் தெரியும்”
“வேங்கடேச பவன்லதான் சர்வரா இருக்கான். லவ் பண்றப்போ இனிப்பா இருந்தது. வறுமை சூழ்ந்ததும் காதல் கசந்து போயிருச்சி. விடு. இது அவ வாழ்க்கை. என் வாழ்க்கைல யாரும் குறுக்கிட வேண்டாம்.”
ரகுராமன் உறுதியாகச் சொல்லி விட்டு அம்மாவுக்கு சாப்பாடு எடுத்து வைத்தார்.
அம்மா மட்டும் குழப்பத்துடன் அப்படியே அமர்ந்திருந்தார்.
-(ஏக்கங்கள் நீளும்…)