எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 3 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 3 | ஆர்.சுமதி

       

அத்தியாயம் – 3

கண் குளிர பார்த்து பார்த்து ரசித்தாள் அம்சவேணி. மாலையும் கழுத்துமாக மணமேடையில் நின்றிருந்தனர் குமணனும், கோதையும்.

நகரத்தின் அத்தனை பணம் படைத்தவர்களும் அங்குதான் இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் பணம் பல ருபங்களில் உருமாறி இருந்தது. பட்டாகவும் தங்கம் வைரமாகவும் மாறியிருந்தது.

மாறாத ஒன்றாய் இருந்தது கோதை வீட்டாரின் எளிமை மட்டும்தான். பொருந்தாத இடத்தில் ஒட்ட முடியாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தனர். மீராவும், பானுவும் மேடையில் இருந்த அக்காவை மிரள மிரளப் பார்த்தனர்.

தலைமுதல் கால்வரை தங்கமும் வைரமும் தரிக்கப்பட்டிருந்தது.

“மீரா…அக்கா எப்படியிருக்கா பாரேன்.”

“ராணி மாதிரி இருக்கா. சரஸ்வதி சபதம் படத்துல பிச்சைக்காரியா திரிஞ்சுக்கிட்டிருக்கற கே.ஆர்.விஜயாவை யானை மாலைப் போட்டு ராணியாக்கிடுமே அதே மாதிரி நம்ம அக்காவும் ராணியாயிட்டா.”

“அப்போ அத்தானை யானைங்கறியா?”

“ச்சு..சும்மாயிருக்க மாட்டே. யார் காதுலயாவது விழுந்திட போகுது. மாப்பிள்ளையை கலாய்க்கிறோம்னு நம்மை மண்டபத்தை விட்டு துரத்திடப் போறாங்க.””துரத்துவாங்க துரத்துவாங்க  அத்தானைக் கலாய்க்க நமக்கு முழு ரைட்ஸ் இருக்கு. நாம கொழுந்தியாளுங்களாக்கும்.”

“ஏன்டி அக்கா போட்டிருக்கற நகைகள் எல்லாமே அக்காவுக்குத்தானா? இல்லே…கல்யாணம் முடிஞ்சதும் அந்தக் கிழவி எல்லாத்தையும் வாங்கிக்குமா?“

“ஏன் நீ அதுல ஏதாவது சுட்டுடலாம்னு பார்க்கறியா?”

“அத்தான் எனக்கும் இதே மாதிரி ஒரு செட் வாங்கித்தருவார்”

“அவர் என்ன ஜொள்ளு பார்ட்டின்னு நினைச்சியா?”

“கொழுந்தியாளுக்கு மயங்காத அக்கா புருஷன் யாரும் கிடையாது”

“ஆஹா..ஆசையைப்பாரு. எல்லாருக்கும் அக்கா மாதிரி அதிர்ஷ்டம் கிடைக்காது.”

“அதிர்ஷ்டம்!. நாம அவ மனசை மாத்தாட்டி இந்த அதிர்ஷ்டம் ஏது? இந்த மாப்பிள்ளையை கட்டிக்க மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னாளே. அம்மாவும் நீயும் நானும் எவ்வளவோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியும் ஒத்துக்கவேயில்லையே. கடைசியா அம்மா நம்ம ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு வீட்டை விட்டுப்போயிடுவேன்னு மிரட்டின பிறகுதானே இறங்கி வந்தா.”

“எப்படியோ இவ மூலமா நமக்கும் பணக்கார வீட்டு மாப்பிள்ளைக் கிடைச்சா நல்லாயிருக்கும்”

“ஆமா..ஆமா…அதோ..பார் கோட்டு சூட்டுல உள்ளே வந்துக்கிட்டிருக்காரே அவர் யார் தெரியுதா?”

“இவர்…டி.வியில வருவாரே கவிதா ஜுவல்லரி ஓனர்”

“அவரே தான். பக்கத்துல வர்றானே  அவன்தான் அவரோட பையன். பார்த்து வச்சுக்க. அத்தான்கிட்ட சொல்லி உனக்கு முடிக்க சொல்லலாம்.” பானு சிரிக்க வெட்கமோ கோபமோ படாமல் மீரா “அவனுக்கு கல்யாணம் ஆயிருந்தா என்ன பண்றது?” என்றாள் நிஜமான கவலையுடன்.

‘ம்…அப்ப அந்த ஓனரையே ரெண்டாந்தாரமா கட்டிக்க” பெரிதாக சிரித்தாள் பானு.

இப்பொழுது நிஜமாகவே கோபட்டாள் மீரா.

வெள்ளியை தங்கத்தில் பதித்ததைப் போல் வெள்ளி சொம்பை கோதையின் தங்கநிற கைகளில் தந்தாள் அம்சவேணி.

ஆசையாகப் பார்த்தாள்;. புத்தம் புது மஞ்சள் கயிறு அவளுக்கு புது அழகையும் பொலிவையும் கொடுத்திருந்தது. மெல்ல அணைத்து நெற்றியில் வைத்த குங்குமம் கலையாமல் முத்தமிட்டாள்.

“போம்மா..” என அறைக்குள் அனுப்பிவிட்டு உள்ளே சென்றாள்.

காத்திருந்த குமணன் எழுந்து கதவருகே வந்தான். கையிலிருந்த பால் சொம்பை வாங்கி அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு அவளுடைய தோளில் கைப்போட்டு நடந்தான். அந்த செயல் அவனுடைய தோழமையைக் காட்டுவதைப்போல் இருந்தது.

கட்டிலில் அமர்த்தினான். கலையழகு சிற்பமாய் ஜொலித்தவளை காதலுடன் பார்த்தான்.

அருகில் அமர்ந்து அவளுடைய வலது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான்.

“கோதை உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?”

“ஏன் கேட்கறிங்க?”

“ஏன்னா எனக்கு இல்லை.ஆனா.. இப்ப நம்பறேன்”

“ஏன் கடவுள் திடீர்னு கண்ணெதிரே தோன்றினாரா?”

“பரவாயில்லையே நல்லா பேசறியே. எனக்கு இந்த கடவுள் விதி இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனா..இப்ப நம்பறேன். இன்னார்க்கு இன்னார்ன்னு எழுதி வச்சிருக்கான்னு சொல்லுவாங்களே… அது நீ எனக்கு கிடைச்ச பிறகு உண்மைன்னு தோணுது. நீ எனக்காகவே பொறந்தவ மாதிரி ஒரு உணர்வு.”

அவள் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். அவனே பேசினான்.

“உண்மையை சொல்லட்டா? சத்தியமா இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிப்பேன்னு நான் நினைக்கவேயில்லை. எல்லாரும் உன் மனசை மாத்தி சம்மதிக்க வச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்”

‘அதுதான் உண்மை’ மனதில் நினைத்துக்கொண்டாள்.

“ஒரு கோடீஸ்வரன் திடீர்ன்னு வந்து  வசதியில்லாத வீட்ல பொண்ணு கேட்டா எந்த பொண்ணு சம்மதிப்பா? சுத்தி இருக்கறவங்க என்னவெல்லாம் சொல்லுவாங்க தெரியுமா? மாப்பிள்ளைக்கு என்னமோ குறை இருக்குன்னு பேசுவாங்க. மாப்பிள்ளைக்கு மாறுகண், கைசரியில்லை, கால் சரியில்லை இப்படி ஏதாவது சொல்லி மனசைக் கலைப்பாங்க. “

லேசான அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். ‘என்ன இவன் எல்லாத்தையும் ஒட்டுக்கேட்டதைப்போல் பேசுகிறான்?

“உன்னையும் அப்படி கலைச்சிருப்பாங்க. ஆனா.. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதிலிருந்து நீ அதையெல்லாம நம்பலைன்னு தெரியுது. சரிதானே?”

அதற்கும் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.

“என்ன பதிலையே காணும்?”

அவளுடைய அமைதி நீடித்ததே தவிர பதிலில்லை.

“இன்னொரு முக்கியமான கேள்வி. இதற்கு நீ கண்டிப்பா பதில் சொல்லித்தான் ஆகனும்”

‘என்ன?’ என்பதைப்போல் அவனைப் பார்த்தாள்.

“நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?”

திடுக்கென நிமிர்ந்தாள் கோதை.

“என்ன இந்தக் கேள்வியை நீ எதிர்ப்பார்க்கலையா? இப்படித்தான் சினிமாவுல கதைகள்ல ஹீரோ ஹீரோயினைப் பார்த்து கேட்பான். ஹீரோயின் தன் பழைய காதலை அவனை நம்பி சொல்லுவா. இல்லாட்டி மறைப்பா. சொன்னவளை அதைவச்சே ஹீரோ கொடுமைப் படுத்துவான். சொல்லாதவள் என்னைக்காவது தன் காதல் தெரிஞ்சுடுமோன்னு பயந்து பயந்து வாழ்ந்துக்கிட்டே இருப்பா. இப்படியெல்லாம் உன் வாழ்க்கையில் எதுவும் நேராது. நீ தாராளமா உனக்கு அப்படி ஒரு காதல் அனுபவம் இருந்தா சொல்லலாம்.

“இல்லை அப்படியெல்லாம் எதுவும் இல்லை.”

“ஓகே. இவன் நமக்கு காதல் அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே இவனுக்கு காதல் அனுபவம் இருந்திருக்குமோ அப்படின்னு நீ நினைக்கறது எனக்கு புரியுது. என்னோட காதல் அனுபவம் ரொம்ப வித்தியாசமானது. நீ கேட்கறதா இருந்தா சொல்றேன். கேட்டுட்டு என்னை பைத்தியம்னு நினைக்கக் கூடாது.”

“இல்ல அப்படி நினைக்கமாட்டேன் சொல்லுங்க.”

“நான் யாரையும் காதலிக்கலை”

“இப்பத்தானே காதல் அனுபவம் அது இதுன்னிங்க

“எஸ். நான் யாரையும் காதலிக்கலை. பட் யாரையோ காதலிச்ச மாதிரியே ஒரு ஃபிலிங். அந்த உணர்வுவரும் போதெல்லாம் எனக்குள்ள ஒருவித இனம் புரியாத இன்பமான உணர்வு. இதப்பத்தி யோசிக்கும் போது இது ஒரு கற்பனையான உணர்வுன்னு நினைச்சி அலட்சியப்படுத்துவேன் ஆனா.. இன்னொரு விஷயத்தை சொன்னா நீ அதிர்ச்சியடைவே.”

பீடிகைப்போட்ட அவனை புரியாமல் பார்த்தாள்.

“சில சமயம் எனக்கு காதல் தோல்வியடைஞ்சமாதிரி ஒரு வேதனை நெஞ்சுக்குள்ள பரவுது. அந்த வேதனை வரும்போதெல்லாம் எனக்கு குடிக்கனும்போல ஒரு வெறி வரும். ஆனா எனக்கு குடிக்கிற பழக்கமில்லை. எங்கம்மா என்னை ரொம்ப கண்டிஷனா வளர்த்திருக்காங்க. என்னால வீட்ல குடிக்கமுடியாது. அந்த மாதிரி வேதனை வரும்போது வெளியே எங்காவது பாருக்கு போகலாமான்னு கூட தோணும். ஆனா..அம்மா முகத்துல எப்படி முழிக்கறதுன்னு தோணும் ? அதனால என்னைக் கட்டுப்படுத்திப்பேன். இதைப்பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“நீங்க யாரையுமே காதலிக்காதபோது உங்களுக்கு ஏன் இப்படி ஒரு ஃபிலிங் வரணும்? காதலிக்கற மாதிரி வர்றது இயற்கை. இந்த வயசுல இப்படி வரும். ஆனா..காதல்ல தோல்வியடைஞ்சமாதிரி வர்றது வித்தியாசமா இருக்கு சிலபேருக்கு  வாழ்க்கையைப் பத்தின ஒரு பயம் இருக்கும் எல்லாம் நல்லபடியா இருந்தாலும்  ஏதாவது எதிர்பாராதவிதமா நடந்துடுமோங்கற பயம்தான் இப்படியெல்லாம் தோணறதுக்கு காரணம்.”

“ நீ  எம். ஏ சைக்காலஜிங்கறதை நிருபிச்சுட்டே.இனிமே எனக்கு இதமாதிரி ஃபிலிங்க்ஸ் வராது.”

“அதெப்படி?”

“அதான் நீ பக்கத்துல இருக்கறியே. இனிமே…வேறமாதிரி ஃபீலிங்க்ஸ்தான் வரும்.” சொல்லிவிட்டு எட்டி லைட்டை அணைத்தான்.

அதே சமயம்…

சாமியறையில் ஏற்றிவைத்த விளக்கெதிரே கண்களை மூடி அமர்ந்திருந்தாள் அம்சவேணி.  மனம் தொடர்ந்து ஒரே பிரார்த்தனையை செய்துக்கொண்டேயிருந்தது.

‘கடவுளே… என் மகனின் வாழ்க்.கையில் இனியாவது மகிழ்ச்சி உண்டாகனும்.’

-(தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...