பிரபல இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான வி.தட்சிணாமூர்த்தி (V.Dakshinamoorthy) காலமான தினமின்று
பிரபல இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான வி.தட்சிணாமூர்த்தி (V.Dakshinamoorthy) காலமான தினமின்று
கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர் (1919). இவரது முழுப்பெயர், வெங்கடேஸ்வர தட்சிணாமூர்த்தி. தாத்தா, அம்மா, தாய்வழி மாமன்கள் அனைவருமே இசைக் கலைஞர்கள் என்பதால், சிறுவயது முதலே இசை ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆலப்புழையில் உள்ள சனாதன தர்ம வித்யாசாலையில் 5-ம் வகுப்பு வரை பயின்றார். 13-ம் வயதில் அம்பாலபுழா ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் முதன் முதலாக இசைக் கச்சேரி செய்தார். திருவனந்தபுரத்தில் மூல விலாசா மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.
கர்னாடக இசைக் கலைஞர் பொட்டி வெங்கடாசலத்திடம் இசை பயின்றார். 16-வது வயதில் வைக்கம் சென்ற இவர், இசைப் பயிற்சி செய்துகொண்டே இசை கற்றுக்கொடுக்கவும் தொடங்கினார். குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிர்வாகம், ‘நாராயணீயம்’ செய்யுளுக்கு இசையமைக்கும் பணியை இவருக்கு வழங்கியது.
1948-ல் அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலை கிடைத்ததால் பெற்றோருடன் சென்னை வந்தார். இவரிடம் இசை கற்றுக்கொண்ட பாடகி பி.லீலாவின் தந்தை மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது. இளையராஜா உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களுக்கு இவர்தான் குரு.
1950-ல் மலையாளத்தில் வெளிவந்த ‘நல்லதங்கா’ என்ற திரைப்படத்தின் மூலம் இவரது திரை இசைப் பயணம் தொடங்கியது. மலையாளத் திரை இசையின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். 1952-ல் இவர் இசையமைத்த ‘ஜீவித நவுகா’ என்ற திரைப்படம் அதே ஆண்டில் இவரது இசையில் ‘பிச்சைக்காரி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது.
வசந்த கோகிலா, எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, கல்யாணி மேனன் உள்ளிட்ட பல பின்னணிப் பாடகிகளுக்கும் இசை கற்றுத் தந்தார். ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ‘அம்மா’, ‘பிறவி’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கர்னாடக இசை வடிவங்களை மிக நேர்த்தியாக திரையிசையாக மாற்றித் தந்தவர் என்ற பெருமை பெற்றார். ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். 1977-ல் தமிழிலும் மலையாளத்திலும் வெளிவந்த ‘ஜகத்குரு ஆதிசங்கரர்’ திரைப்படத்தில் இவரது இசையில் வந்த பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாகத் தமிழில் பாடப்பட்ட ‘மறுபடி ஜனனம் மறுபடி மரணம்’ என்ற பஜகோவிந்தம் பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இவரது இசையில் வெளிவந்த ‘ஒரு கோவில் இரு தீபம்’, ‘ஆண்டவன் இல்லா உலகம் எது’, ‘நல்ல மனம் வாழ்க’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் 850-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 90-வது வயதில் ஒரு மலையாளம் திரைப்படத்துக்காக நான்கு பாடல்களுக்கு இசையமைத்தார். இறுதிவரையிலும் இசையமைத்து வந்தவர்.
சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில விருது, கேரள அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ளார். மலையாளத் திரைப்பட உலகில் நான்கு தலைமுறைப் படங்களுக்கு இசையமைத்த பழம்பெரும் இசை மேதை வி.தட்சிணாமூர்த்தி 2013-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 2ல் மறைந்தார்
From the Desk of கட்டிங் கண்ணையா!