நீ என் மழைக்காலம் – 2 | இ.எஸ்.லலிதாமதி

 நீ என் மழைக்காலம் – 2 | இ.எஸ்.லலிதாமதி

                 

அத்தியாயம் – 2

பருவம் தோறும் மழை வெவ்வேறு வண்ணங்களையும் வாசனைகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. அது எப்போதும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை.  ஒரே மாதிரியாக வருவதும் இல்லை.

வெவ்வேறு திசையில் வெவ்வேறு வடிவங்களில் தூறலாக சாரலாக, கனத்தும் அடர்ந்தும் மெலிந்தும் சிலநேரம் வெயிலில் காய்ந்தும் கூட வருகிறது மழை.

நிவேதிதாவை ஒருமழை நனைத்துக் கொண்டிருந்தது.
அன்பெனும் மழை. காதலெனும் பெரும் மழை.

அந்த பெருமழைக்கு ஈடாய், இந்த உலகில் வேறு எதுவும் இருந்திடப் போவதில்லை.  ஏன் உலகையே பரிசாகக் கொடுத்தாலும் அதற்கு ஈடாகப் போவதும் இல்லை.  ஆனால் அந்த அன்பிற்கு கூடுதல் அலங்காரம் சேர்ப்பவையாக சின்னச்சின்ன பரிசு பொருட்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை . மழைப்போல் நினைவில் வைத்து மகிழ்ந்திருக்கவும், போற்றி பாதுகாக்கவும் பரிசு பொருட்கள் காரணமாக இருக்கின்றன.

அந்தப்பொருள் எப்போது யாரால் கொடுக்கப்பட்டது என்பதை விட, கொடுக்கப்பட்டவரின் முகத்தை, அந்த கணத்தின் சூழலை, அதன் ரசனைமிக்கத் தருணங்களை காலம் முழுக்க அப்படியே வைத்திருக்கவும், ரசிக்கவும் பரிசு பொருட்கள் காரணமாக இருக்கின்றன.

இவள் பிறந்தநாள் பிப்ரவரி ஒன்பது என்று தெரிந்து வைத்துக்கொண்டு ,  அன்று எதிரில் வந்து நின்றான் கார்த்திக்.  வகுப்பு முடிந்து இவள் கிளம்பும் நேரம் பார்த்து, அதை அவள் கையில் கொண்டு வந்து திணித்தான்.

`என்ன?’ என்றாள் மலர்ச்சியுடன்.

`சும்மா! உன் பிறந்தநாளுக்கு குட்டி அன்பளிப்பு’’ என்றான்.

‘‘என் பிறந்தநாளை உன்கிட்ட சொல்லவே இல்லியே!’’

‘‘உன் மூஞ்சி புத்தகத்தில் எல்லா விவரமும் பார்த்தேன். அப்புறம் நீ கல்லூரியில் சேரும் போது பூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்பதிலும் பார்த்தேன்’’ என்றான்.

‘‘திருடா! இவ்ளோ ஞாபகம் வச்சிருக்கியா நீ? என்றவள்,  நன்றி என்றாள். இதில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா’’ என்றாள்.

அவள் ஆர்வமாய் அந்த சிறிய பொட்டலத்தைப் பிரிக்கப் போக, , அவன் தடுத்தான்.

‘‘வேணாம் … இங்க பிரிக்காதே’’

‘‘ஏன்?’’

‘‘இல்ல, வீட்டுக்குப்போய் பிரிச்சுப்பாரு…’’

‘‘ரொம்பவும் சஸ்பென்ஸ் வைக்காத கார்த்தி! என்னால் தாங்க முடியாது’’ என்றாள்.

‘‘அதிகமாக எதிர்பார்த்து போகாதே. ஏமாந்துடுவே. குட்டியான பரிசு தான்’ என்றவன், ‘‘ உனக்கு சேலை, சுடிதாரை விட இது நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் வாங்கி வந்தேன்’’ என்றான்.

 ‘அப்படி என்ன இருக்கும்?’ மனதில் குடை விரித்த ஆர்வத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு,  அவனிடமிருந்து விடை பெற்றாள்.

கல்லூரி வளாகத்தை விட்டு, வெளியில் கடற்கரை சாலையில் பயணிக்கும் போது வண்டியை ஓர் ஓரமாய் நிறுத்தி விட்டு, பிரித்துப் பார்க்கலாமா என்று ஒரு குறுக்கு புத்தி ஓடியது.

`சே! சே! வேணாம்.

அவன் சொல்வது போல் வீட்டிற்குச் சென்றே பார்க்கலாம். அவன் சொல்லுக்கு,  வார்த்தைக்கு மதிப்பளிக்கலாம்.

அவன் அன்பை மதிக்கும் நான், அவன் வார்த்தைகளை பரிபூரணமாக நிறைவேற்றவும் வேண்டும்’  நினைவுகளுடன், முன்னிலும் வேகமாய் வண்டியை செலுத்தினாள்.

அம்மாவோ,  அக்காவோ ஏது என்று கேட்டால் என்ன சொல்வது? அதற்கும் யோசித்து வைத்திருந்தாள்.  கூட படிக்கிற தோழி கொடுத்தாள் என்று சொல்ல வேண்டும்.
அப்பா, அம்மாவைவிட ஆயிரம் கேள்வி கேட்பவள் கயல்விழி.
கேட்டால்‘ உன்னை பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு . என்னை நம்பித்தான் உன்னை இங்கு படிக்கவே அனுப்பி இருக்கிறார்கள். இல்லாவிட்டால் நான் விடுதியில் தங்கி வேலை செய்திருப்பேன். உனக்கு விடுதி சாப்பாடு ஒத்துக்கவில்லை என்று தான் வீடு எடுத்து தங்கி இருக்கிறோம். நான் தான் உனக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பதில் சொல்லி ஆகவேண்டும்.

அம்மாவும் அப்பாவும் மாதத்தில் ஒருநாள், இரண்டு நாள் மட்டுமே வருகிறார்கள். மீதி நாள் எல்லாம் நான் தானே உன்னை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்பாள்.

அப்பா, அம்மா சொந்த ஊரான வேலூரிலேயே இருக்கிறார்கள்.  ஊரில் தம்பி ப்ளஸ்டூ படிக்கிறான்.
அவன் படிப்பு முடிந்ததும் அனைவரும் சென்னைக்கு வரலாம். வரலாமலும் போகலாம்.
ஆனால் அதுவரை அக்கா கயல்விழிக்கு அவள் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும்.
இப்போதைக்கு தனியார் வானொலி ஒன்றில், அறிவிப்பாளர் பணி. ஆனால் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஒரே ஆசையில் தமிழ் எம்.ஃபில் படிப்பை தேர்வு செய்திருந்தாள். அதற்காக கடற்கரை சாலையில் உள்ள பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்ற போது தான் அங்கு,  அவனைப் பார்த்தாள்.

கல்லூரி வளாகத்தில் நின்ற புன்னை மரத்தடியில் தான் அவன் நின்றிருந்தான்.
புன்னைமர நிழலின் குளுமை அவன் முகத்தில் பிரதிபலித்தது. மெல்லிய ஊதா நிறத்தில் கோடுகள் போட்ட சட்டை போட்டிருந்தான். வட்டமான முகத்தில் இடது பக்கம் வகிடு எடுத்து தலைவாரி இருந்தான்.  தலை குனிந்து அலைபேசியில் மேய்ந்து கொண்டிருந்தான்.

 “எக்ஸ்யூஸ்மீ..! அப்ளிகேஷன் போடனும். பார்ம் எங்க வாங்கணும்?” என்ற போது தான் நிமிர்ந்தான்.

நிமிர்ந்தவனின் எதிரில் ஒரு நிலவு நிற்க , அவன் திகைத்தான்.

“என்ன கேட்டீங்க?” என்றான் தடுமாறி.

“எம்.ஃபில் அப்ளிகேஷன் வாங்கணும். ஆபீஸ் ரூம் எந்தப்பக்கம் இருக்கு?” என்றாள்.

‘‘இடது பக்கம் திரும்பி போனா ஐந்தாவது ரூம்’’ என்றவன்,

“எம்.ஃபில். எதைப் பற்றி ஆய்வு பண்ணப் போறீங்க?” என்றான் ஆர்வம் தாங்காமல் .

“சங்க இலக்கியத்தில் நட்பு”  என்றாள்.

“நட்பா?  பிசிராந்தையார்,  கோப்பெருங்சோழன் மாதிரியான நட்புக் கதையா?”  என்றான்.

அவள்,  அவனை ஆழமாகப் பார்த்தாள்.

“ஊகூம்”  என்றாள்.

“அப்புறம்?”  அவன் விழித்தான்.

‘‘சங்க இலக்கியங்களில் நட்பு என்ற சொல் காதலைத் தான் குறிக்கிறது. அதுமாதிரி காதல் என்ற பொருளில் பாடப்பட்ட ‘நட்பு’ பாடல்களை எடுத்து நான் ஆய்வு செய்யப் போகிறேன்…’’ அவள் புன்னகை செய்ய ,  புன்னை மரக்கிளைகள் காற்றில் அசைந்தன. அதன் வெண்மைப் பூக்கள் அவள் தலையிலும் தோளிலும் விழுந்து மோட்சம் பெற, அவனும் சரிந்தான் அவள் புன்னகை முன் .
எப்படி இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்தாள்?
இந்த மாதிரி கண்ணோட்டத்தில் இதுவரை யாருமே யோசித்திருக்க மாட்டார்களே…!
அவன் புருவம் உயர்த்திய படியே,

மொபலை சட்டைப்பையில் போட்டுக் கொண்டு , அவளுடன் நடந்தான்.

“அழகுங்க”  என்றான்.

“எது?”  என்றாள் அவனை திரும்பிப் பார்த்து. அவள் அப்படி திரும்பிப் பார்க்கையில்,  புறா ஒன்று தன் இணைப்புறாவை திரும்பிப் பார்ப்பது போல் தோன்றியது.

“நீங்க தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு.”  என்றான்.
உள்ளுக்குள்,  `நீயும் தான் பெண்ணே’  என்று சொல்லிக் கொண்டான்.

விண்ணப்பம் வாங்கி முடித்தப் பிறகு, தேவையான விவரங்களைச் சொன்னான்.
போட்டி நிறைய இருந்தால்,  நுழைவுத்தேர்வு இருக்கும் என்றான்.

“நான் பகுதி நேரமாகத்தான் படிக்கப் போறேன் ” என்றாள்.

“முழு நேரம் என்றால்,  ஒரே வருடத்தில் முடித்து விடலாம்.  பகுதி நேரம் என்றால்,  என்னை மாதிரி இரண்டு வருடம் ஆகும்”  என்றான்.
சந்தடிசாக்கில் தானும் எம். ஃபில் படிப்பதை சொல்லி விட்டான்.

“நீங்களும் தமிழா?”  என்றாள்

“இல்ல!  நான் பொலிட்டிக்கல் சயின்ஸ்,  இரண்டாமாண்டு”  என்றான்.

“நான் பகுதி நேரமாகத்தான் பண்ணலாம்னு இருக்கேன்”  என்றாள் அவள்.

“ஏன்?  எங்காச்சும்  வேலை பார்க்கிறீங்களா?”  என்றான்.

அவள் தான் பணிபுரியும் வானொலியின் பெயரைச் சொன்னாள்.

“நீங்க வேலை பார்க்கிறீங்களா?  இல்ல… ” என்று இழுத்தாள்.

“ நான் நாளிதழ் ஒன்றில் சப்எட்டிட்டரா இருக்கேன்”  என்றவன்,
தான் பணிபுரியும் அந்தப் பத்திரிகையின் பெயரைச் சொன்னான்.  பத்திரிகை அதிபர் அப்பாவின் நண்பர் என்பதால் வேலை போட்டுக் கொடுத்தார். அந்த முதலாளி தான் என்னை பொலிட்டிக்கல் சயின்ஸ்படி என்று இங்கே துரத்தி விட்டுட்டார்….

ஆனால் இங்க வந்து சேர்ந்தப் பிறகுதான், படிப்புக்கும், பேட்டிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைன்னு தோணுது. அதுவேற, இதுவேறு.”
அவன் சிரித்தான்.

‘‘தொடர்பே இல்லாமல் எப்படி ஒரு படிப்பு இருக்க முடியும்?’’

‘‘நான் சொல்ல வந்த அர்த்தம் வேறங்க.
பொலிட்டிகல்சயின்ஸ் படிக்காமலே எத்தனைப்பேர் அரசியல் இதழ்களில் கட்டுரை எழுதுகிறார்கள், செமையா வெளுத்துக்கட்டுகிறார்கள்…
அந்த அர்த்தத்தில் நான் சொன்னேன்…..’’

 “ஓ… அப்படியா?   என்றவள்,  என் நிகழ்ச்சி,  இரவு ஒன்பது மணியில் இருந்து பத்து மணி வரைக்கும் ஒலிபரப்பாகும்.
ஒரு நாளைக்கு பழைய பாடல்,  இன்னொரு நாளைக்கு பழசும் இல்லாமல், புதுசும் இல்லாமல் எண்பதுகளில் வந்த பாட்டு. இப்படி மாறி மாறி வரும்’’ என்றாள்.

‘‘என்ன பேர்ல ஆங்கர் பண்றீங்க?’’ என்றான்

‘‘நிவேதிதா என்ற பெயரில் தான்’’ என்றாள்.

‘‘இந்தப் பெயர் உங்களுக்கு அழகா இருக்கு’’ என்றான்.

”எங்கப்பாவுடைய நண்பர் வைத்த பெயர் . அப்பாவுக்கு அவர் நண்பரை மிகவும் பிடிக்கும்.
அவருக்கு விவேகானந்தரை பிடிக்கும். அதனால் அவர் சிஷ்யை பெயரை எனக்கு வச்சு விட்டிருக்கார். இல்லாட்டி  எங்கப்பா எனக்கு மலர்விழின்னு பேர் வச்சிருப்பாராம்”

”அது கூட நல்லா தாங்க இருக்கு.”  என்றான்.

அக்காவுக்கு கயல்விழின்னு பேர் வச்சதால்… அதுக்கு மேட்சா எனக்கு  பேர் வைக்கப்பார்த்திருக்கார் அப்பா. ஆனால் அப்பாவுடைய நண்பர் முந்திக்கிட்டார்…”  என்று சிரித்தாள் அவள்.

‘எதுக்கு இவளிடம் இத்தனை தூரம் பேசுகிறோம்’ என்று அவன் யோசித்தான்.

‘யாரோ ஒருவனுக்கு,  எதுக்கு கேட்டதுக் கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்’ என்று அவள் நினைத்தாள்.

‘‘உங்க பேரை சொல்லவே இல்லையே’’ என்றாள்.

பேச்சு சுவாரசியத்தில் மறந்துட்டேன் என்றவன்,  ‘‘கார்த்தி’’ என்றான்.

‘‘நல்ல பெயர் தான்! உங்களோடது சாமி பேர் தானே’’ என்றாள்.

‘‘ஆமாம்.  எங்கப்பா முருக பக்தர். அதனால் இந்தப் பெயர் வச்சிருக்கார்’’ என்றான்.

”சாமி பேர் வைப்பதில் ஒரு நன்மை இருக்குன்னு சொல்வாங்க. தினமும் சாமி பெயரில் குழந்தையை கூப்பிடும் போது சாமியை வணங்கிய பலன் கிடைக்குமாம்… எங்க பாட்டி சொல்வாங்க ”

”அப்படியா?”  அவனுக்கு ஏற்கனவே தெரிந்த தகவல் தான் எனினும், தெரியாதது போல் வியப்பு காட்டினான்.

அவள் மெளனமாக வந்தாள்

”என்ன திடீர்ன்னு பேசாம வரீங்க”  என்றான் கார்த்திக்.

‘‘என் நிகழ்ச்சியை இதுவரை ஒரு நாளாவது கேட்டிருக்கீங்களா?’’ அவள் பேச்சை மாற்றினாள்.

‘‘நிஜமா… இல்லை சாரி!  இதுவரை கேட்டதில்லை.  இனிமேல் கண்டிப்பாக கேட்கிறேன்’’ என்றான்.

‘பார்ப்போம்,  பார்க்கலாம்’  என்றவர்கள்,  பிரியும் முன் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டார்கள்.

அவளைப் பற்றிய சிந்தனையே அவனுக்கு நாள் முழுக்க இருந்தது. அன்றைய தினம்,  ஒரு புதிய நாளாகப்பட்டது. வழக்கமான நாளாக இல்லாமல் மனதில் உற்சாகம் வழியும் நாளாக அது இருந்தது. இதற்கு முன் எதற்காகவும் அவன் இப்படி மகிழ்ந்த தில்லை. மனது ஓர் அருவியை போல் குளிர்ந்ததில்லை.  உற்சாகம் கரை புரண்டதில்லை. சுறுசுறுப்பு வந்து தொற்றிக் கொண்டதில்லை. இதென்ன புது அனுபவம்?  ஏன் இப்படி? ஒரு பெண்ணை சந்தித்ததற்காகவா இத்தனை மாற்றம்?  உற்சாகம் ? அவன் புரியாமல் விழித்தான். இனி நிவேதி தான் அவனுக்கான அத்தனை நாட்களையும் புரட்டிப் போடப் போகிறாள் என்பதை உணராமல்.
-(சாரல் அடிக்கும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...