“வெங்கடேஷ் பிரபு எனும் தனுஷ்-ன் திரை ஆளுமை”

 “வெங்கடேஷ் பிரபு எனும் தனுஷ்-ன் திரை ஆளுமை”

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கென்று காலங்காலமாக வகுத்து வைத்திருந்த இலக்கணங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, பாலிவுட் சென்று அங்கும் வெற்றியடைந்து, தற்போது ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தனுஷ் இன்று தனது 40ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய, ஆதரித்த கதாநாயகர்கள் யார் யாரென்று பார்த்தால், பெரும்பாலும் அவர்கள் வெள்ளையாக இருப்பார்கள், சிரத்தை எடுத்து கட்டிக்காத்த உடல்வாகுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள், சுண்டி இழுக்கும் ஆளுமைகளாக இருப்பார்கள்.

ஆனால், ரஜினியைப் போலவே, மேலே குறிப்பிட்ட கதாநாயகனுக்கான எந்த இலக்கணுமும் இல்லாமல், ஆங்கிலத்தில் a-boy-next-to-door என்பார்களே அப்படி நமது பக்கத்து வீட்டு பையனின் முகச் சாயலுடன், ஆர்ப்பாட்டமில்லாத, மெனக்கெடுதலுடன் உடலை வருத்தி கட்டிக் காப்பாற்றிய உடல் வாகு எதுவும் இல்லாமல் மிகச் சாதாரணமான இளைஞனாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர்தான் மூத்த இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ்.

சினிமா தாகத்துடன் நடிக்க வாய்ப்பு தேடும் சாமானிய இளைஞனைப் போல, சாலிகிராமத்தின் ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் புகைப்படம் கொடுத்து விட்டு, ஆடிஷன் அட்டெண்ட் செய்த அனுபவம் ஏதும், நடிகர் தனுஷிற்கு இல்லை. ஆனால், அவரின் உடல் வாகுக்காக படு மோசமான விமர்சனங்களையும், படப்பிடிப்புத் தளத்தில் பலரது கேலிகளுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. மெல்ல, தனது பலம், பலவீனங்களை கண்டறிந்து அதன் மூலமே தன்னைச் செதுக்கிக் கொண்ட திரை ஆளுமைதான் நடிகர் தனுஷ்.

தனுஷ் அவர்களின் அண்ணன் செல்வராகவன் திரைக்கதை எழுத, தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் பள்ளிக்குச் செல்லும் விடலைப் பையனாக நடிக்க ஆரம்பித்து, தற்போது 20 ஆண்டுகளை நெருங்கும் திரைப் பயணத்தில் தனுஷ் உலகிற்கு சொன்னதெல்லாம் என்னவென்றால், சினிமாவில் ஜெயிக்க உடல் வாகு, முக வெட்டு இவற்றையெல்லாம் தாண்டி அர்ப்பணிப்பு உணர்வுடன், கலையை நேசித்து திரையில் தோன்றினால், பிராந்திய, தேசிய, சர்வதேச எல்லைகளையெல்லாம் தாண்டி ரசிகனின் மனதை வெல்லலாம் என்பதே.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ”காதல் கொண்டேன்” திரைப்படத்தில், மிக கசப்பான குழந்தைப் பருவ அனுபவங்களைக் கொண்ட, சமூகத்தில் அனைவரையும் போல, மிகச் சாதாரண வாழ்க்கையை வாழ ஏங்கும் இளைஞனாக நடித்திருந்த கதாபாத்திரம் அனைவரையும் வியக்க வைத்தது.

இயக்குநர் சுப்ரமணிய சிவாவின் ”திருடா திருடி”திரைப்படத்தில் வேலையில்லாமல், 24 மணி நேரமும் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் சாமானிய இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார். அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மன்மத ராசா” திரைப்பாடல் தான் தனுஷ் அவர்களை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. அப்பாடலில் இருந்த, துடிப்பும், இளமையும் தனுஷைப் பற்றிப் பலரையும் பேச வைத்தது.

தனுஷின் சிறப்பம்சமே அவர் மிகவும் அழுத்தமான கதைக்களங்களை தெரிவு செய்யும் அதே நேரம், லாஜிக் எதுவுமில்லாத மசாலா படங்களிலும் நடிப்பார். அப்படித் தான், அவர் ஆரம்பக் காலம் முதலே தன்னை வடிவமைத்துக் கொண்டார்.

”சுள்ளான்”, ”தேவதையைக் கண்டேன்”, ”புதுப்பேட்டை”, ”அது ஒரு கனா காலம்”, “திருவிளையாடல் ஆரம்பம்”, பொல்லாதவன்”, ”யாரடி நீ மோகினி”, ”படிக்காதவன்”, ”வேலையில்லாப் பட்டதாரி”, ”ஆடுகளம்”, ”வேங்கை”, “மயக்கம் என்ன”, ”அசுரன்” எனத் தொடர்ந்த பயணத்தில் கமெர்ஷியல் திரைப்படங்களுக்கும், ஆர்ட் திரைப்படங்களுக்கும் சரி சமமான முக்கியத்துவம் கொடுத்து தியேட்டரில் உள்ள A, B, C உள்ளிட்ட அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் வசமாக்கினார்.

”மயக்கம் என்ன திரைப்படத்தில்” தனுஷ் கதாநாயகியிடம் “புடிச்ச வேலையை செய்யணும் இல்லன்னா செத்தறணும்” என வசனம் பேசும் இடத்திலும், “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் அம்மாவை உயிரற்ற வெற்று உடலாகப் பார்க்கும் தருணத்தில் அப்படியே உறைந்து அதே இடத்தில் அமர்ந்து அழும் உணர்வினை வெளிப்படுத்தும் காட்சியிலும், ”ஆடுகளம்” திரைப்படத்தில் காதல் உணர்வினை துள்ளலாக லுங்கியைப் பிடித்து ஆடிக் கொண்டு பாடும்போதும், தியேட்டரில் ரசிகர்கள் நடிகர் தனுஷிற்காக மட்டுமே ஆர்ப்பரித்தனர்.

இயக்குநர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு, குறிப்பிட்ட உடல்வாகு கொண்டவர்கள் தான் பொருந்துவார்கள் எனக் காலங்காலமாக வகுத்து வைத்திருந்த விதியினை, “மரியான்” திரைப்படத்தில் தோன்றும் மீனவ இளைஞன் கதாபாத்திரத்திலும், “பொல்லாதவன்” திரைப்படத்தில் சாதாரண சண்டைக் காட்சிக்கு சிக்ஸ் பேக் வைத்ததும், “அசுரன்” திரைப்படத்தில் இடுங்கிய கண்களுடன் வரும் 50 வயது தோற்றத்திலும் தோன்றி அத்தனை எழுதப்படாத விதிகளையும் தகர்த்தெறிந்தார்.

ரசிகர்கள் ஒரு கதாநாயகனை க்ளாசானா கதாபாத்திரத்திலும் ஏற்றுக் கொள்கிறார்கள், மாசான கதாபாத்திரத்திலும் சரிசமாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அது நடிகர் தனுஷை மட்டுமே. “வடசென்னை”, “கர்ணன்”,”ஜகமே தந்திரம்”, ”பட்டாசு”, “திருச்சிற்றம்பலம்” எனக் கலவையான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

”ராஞ்சனா”, ”ஷமிதாப்” உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, “அத்ராங்கி ரே” திரைப்படத்தில் விமர்சகர்களிடம் நல்ல தரமான நடிகர் என்ற பாராட்டையும் பெற்றார்.

“தி எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆஃப் தி பாகிர்” என்ற சர்வதேச திரைப்படத்திலும் தோன்றி உலகளவில் புகழ் பெற்றார்.

பிராந்திய மொழி எல்லைகளை மட்டுமல்லாமல், இந்திய சினிமாவையும் தாண்டி, “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து தமிழ் சினிமா நடிகர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார்.

நடிகராக அனைத்து இலக்கணங்களையும் உடைத்தெறிந்தவர், ஒரு நல்ல கலைஞனாக தான் தொட்ட அனைத்து கலைகளிலும் சொல்லி அடித்து வெற்றியை தன் வசமாக்கினார் தனுஷ். பாடகராகவும், பாடலாசிரியராகவும் தமிழ் சினிமாவுக்குப் பல ட்ரெண்டிங் பாடல்களைத் தந்தவர் நடிகர் தனுஷ்.குறிப்பாக, அவரது தங்கிலிஷ் பாடலான “வொய் திஸ் கொலவெறி” பாடல் அவருக்கு உலகளவில் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.

வெகுஜன மக்கள் சினிமாவில் கவனம் செலுத்திய தனுஷ், அதே நேரத்தில் ”காக்கா முட்டை”, “விசாரணை” உள்ளிட்ட வித்தியாசமான கதை களங்களைக் கொண்ட திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அதிலும் பல சர்வதேச விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றுத் தந்தார்.

நடிப்பு, பாட்டு, தயாரிப்பு மட்டும் போதுமா, தனுஷ் இயக்கிய ”பா. பாண்டி” திரைப்படம் அவரை ஒரு முதிர்ச்சியான இயக்குநராகவும் அடையாளப்படுத்தியது.

நடிகர் தனுஷ் அவர்கள் “ஆடுகளம்” திரைப்படத்தில் நடித்தற்காக முதன்முதலில் தேசிய விருது பெற்றார். அதனையடுத்து, “அசுரன்” திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பிரிவின் கீழ் மீண்டும் ஒருமுறை தேசிய விருது பெற்றார். இது தவிர பல ஃபிலிம் ஃபேர் விருதுகளையும், தொலைக்காட்சி விருதுகளையும் நடிகர் தனுஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த“திருடா திருடி”, “சீடன்” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம் பேசினோம். அவர் கூறும்போது, “திருடா திருடி” திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அதில், தனுஷ் அவரது அம்மாவிடம் “ நீயும், அப்பாவும் இப்படியே திட்டிட்டே இருங்க ஒரு நாள் நான் ஜனாதிபதியிட்ட அவார்ட் வாங்குவேன். அப்ப நீயும், அப்பாவும் ஃபீல் பண்ணுவீங்க” என ஒரு வசனம் பேசுவார். பின்னாட்களில் அது அப்படியே நிஜமாகிப் போனது. விவிலியத்தில் “His Time” என்று ஒரு கோட்பாடு உண்டு. அதாவது, உன்னைப் பற்றி, உன் பெருமையைப் பற்றி உனக்கே தெரியாமல் பலரும் பேச ஆரம்பிப்பார்கள். அப்போதே உன் வெற்றி உறுதியாகிறது. அதுபோலத்தான் நடிகர் தனுஷின் புகழ் அவருக்கே தெரியாமல் பரவ ஆரம்பித்தது. “திருடா திருடி” திரைப்படத்தின் போது அவரிடம் நான் காட்சிகளை விவரிக்கும்போது, நான் விவரிக்கும் காட்சிக்கு முன்னால் உள்ள காட்சிகளையும், பின்னால் உள்ள காட்சிகளையும் அடி பிறழாமல் கூறுவார். அவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வு தான் அவரது உயரத்திற்கு காரணம்”, என்றார்.

மேலும், தொடர்ந்து பேசும்போது, “தனுஷ் அவர்கள் ”எளிமையே வலிமை” என்ற வாக்கியத்திற்கேற்ப வாழ்பவர். நாங்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது, வடை கடை எதையாவது பார்த்தால் நிறுத்தி அதனை வாங்கி வரச் சொல்லி உண்பார். எந்த அலட்டலும் அவரிடம் கிடையாது. அதேபோல் தான் அவரது மகன்களையும் வளர்த்து வருகிறார். அவரது மகன்களை படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்து வரும்போது ப்ரொடக்‌ஷனில் உள்ள ஒவ்வொருவருடன் இயல்பாகப் பழக வைப்பார். நடிகர் தனுஷ் ஒரு தனிமை விரும்பி. எப்பொழுதும் புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பார். அநாவசயமாக எதுவும் பேச மாட்டார். ஒரு மாதம் கழித்து என்னை அழைத்து எதாவது வேலை கொடுப்பார். அப்போது தான் என்னிடம் பேசுவார்” என்றார்

தொடர்ந்து வித்தியாசமான கதைக் களங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் அவர்களைப் பற்றிக் கூறும்போது, “என்னுடைய கதைக் களைங்களை ஒரு நடிகராக புரிந்து கொள்வது என்பது மிகச் சவாலான விடயம். நடிகர் தனுஷ் அவர்கள் நான் கூறுவதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடிப்பார். அவரது நடிப்பும், உடல் மொழியும் அவ்வளவு தனித்துவம் வாய்ந்தது. அதனால் தான் அவர் தமிழ் மொழி தாண்டி ஹிந்தியிலும் ஜெயிக்க முடிந்தது. ”கர்ணன்” திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு சோதனைகளுக்கிடையில் படமாக்கப்பட்டது. மிகப் பெரிய கூட்டம், மக்கள் அலைகளுக்கிடையில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, தனுஷ் அவர்கள் மாஸ்க் அணியாதவர்களிடமும், கொரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றாத தொழில் நுட்ப கலைஞர்களிடமும் அன்பாக கோபித்துக் கொள்வார். அவர் மிகவும் மனிதாபிமானமிக்கவர்,” என்றார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...