ஓவிய சாம்ராட் மாருதி மறைவு || ஓவியத் துறைக்குப் பேரிழப்பு
கோட்டோவியங்களில் தனித்தன்மையுடன் வரைவதில் வல்லவர் மாருதி. அவர் ஓவியக் கதாபாத்திரங்கள் தமிழ்ப் பாரம்பரியத்தின் அடையாளமாகக் காட்சியளிக்கும். வண்ணங்கள் உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும். அவரது இறப்பு தமிழ்ப் பத்திரிகையுலகில் பெருத்த இழப்பு.
புதுக்கோட்டையைச் சொந்த மாவட்டமாகக் கொண்ட டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு 1938ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 அன்று ரங்கநாதன் என்கிற மாருதி பிறந்தார். மாருதியுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள்.
மாருதி ஆரம்பக் காலங்களில் ரங்கநாதன் என்ற பெயரில் திரைப்படங்களுக்கு பேனர் உள்ளிட்டவற்றை வரையும் வேலை செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பும் கிடைத்தது. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்ததால் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் பத்திரிகைகளுக்கு வரையும் பணியைத் தேர்ந்தெடுத்தார். அப்பொழுது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள பார்மசியின் பெயர் மாருதி. அதனால் இதழ்களுக்கு ஓவியம் வரையும் பொழுது ‘மாருதி’ என்ற பெயரை எழுதினார்.
1969ஆம் ஆண்டு முதல் ஓவியங்கள் வரைந்து வந்தவர், கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு சிறுகதைகளுக்கு ஓவியங்களும் அட்டைப்படங்களும் வரைந்துள்ளார். கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். பத்திரிகையுலகில் தனி சாம்ராஜ்ஜியமே நடத்தினார். ஓவியர் மாருதி ஓவியம் மட்டுமல்லாது உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களுக்கும், வீர மங்கை வேலு நாச்சியார் என்ற ஓரங்க நாடகத்திற்கும் ஆடை வடிவமைப்பிலும் ஈடுபட்டார்.
மாருதி புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். அவரது தந்தை ஆசிரியராக இருந்ததால், வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி படிப்பில் சேர்ந்த மாருதி ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.
தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது தந்து சிறப்புத்துள்ளது. அவரின் மகள்கள் இரண்டு பேரையும் பூனேவில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவர் மட்டும்தான் இங்கே இருந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை மோசமானதால், அவரின் மகள்கள் பூனேவுக்கே கூட்டிச் சென்றனர். அவருக்கு அங்கே தனியாக இருப்பது போன்ற உணர்வு இருந்ததால் அவர் மட்டும் திரும்பச் சென்னைக்கே வந்துவிட்டார். இங்கே வந்த பிறகு அவருக்குத் திரும்ப இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் இன்று (27-7-2023) காலமானார். அவருக்கு வயது 86.
இந்தத் தகவல் ஓவியக் கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மீளா சோகத்தைத் தந்தது. அன்னாரது குடும்பத்தினருக்கு அவர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். நாமும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்