கரை புரண்டோடுதே கனா – 2 | பத்மாகிரக துரை
அத்தியாயம் – 2
“அடிடா அவளை, இழுத்து கொல்லுடா..” திடுமென கத்தலாய் குரல் வர ஆராத்யா திடுக்கிட்டாள்..
“அடப்பாவி உருப்படுவியா நீ..?
உங்கம்மா சொல்றான்னு உன் பொண்டாட்டியை இந்த அடி அடிக்கிறியே..?” மனோரமாவின் குரல் துயரத்துடன் ஒலித்தது..
“என்ன ஆச்சுரமா அடிச்சிட்டானா..?” மாதவனின் குரல்..
“ஆமாங்க அடின்னதும் பட்டு பட்டுன்னு அடிச்சிட்டான்.. இவனெல்லாம் என்ன ஆம்பளைங்க..”
“த்சொ..த்சொ..” மாதவனின் பரிதாப உச்சுக் கொட்டலில் எட்டி உள்ளே பார்த்தாள் ஆராத்யா..
மனோரமாவும், மாதவனும் டிவி முன்னால் அமர்ந்திருந்தனர்..
மாதவன் அப்போது தான் காபி கலந்து கொண்டு வந்து மனோரமாவிற்கு கொடுத்திருந்தார்..
இருவருமாக டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆராத்யா இடுப்பில் கை வைத்துக்கொண்டு இருவரையும் முறைத்தாள்.. இவர்கள் இருவரும் காலையில் வெட்டிக்கோ, குத்திக்கோ என்று சண்டை போட்டதென்ன..
இப்போது ஒருவரையொருவர் கொஞ்சியபடி டிவி பார்ப்பதென்ன..?
“எனக்கு காலையில் சாப்பாடு போடாமல் வீட்டை விட்டு விரட்டியாச்சு.. இங்கே நீங்களே சமைச்சு ஒருத்தருக் கொருத்தர் ஊட்டி விட்டுக்குறீங்களாக்கும்..?”
முறைப்போடு பெற்றவர்கள் முன்போய் அமர்ந்தாள்..
“இல்லடா செல்லம் நாங்க பேசிட்டிருக்கிறதுக்குள்ள நீ திடீர்ன்னு கிளம்பி போயிட்ட..” மாதவன் மகளை சமாதானப்படுத்த..
“நான் தான் இரு இருன்னு சொல்லிட்டே இருந்தேனே.. நீ திமிர்பிடித்து ஓடினால் நாங்கள் என்ன செய்யமுடியும்..?
நீங்க என்னங்க இந்த சின்னக்கழுதை கிட்ட போய் குழைஞ்சிக்கிட்டு..” மனோரமாவின் பேச்சில் ஆராத்யா தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்..
அவளுக்கே தெரியும்..
அவள் அம்மா –அப்பாவிற்கு இடையே வேறுயாராவது சண்டைக்கோ, சமாதானத்திற்கோ நுழைந்தால் அவர்கள் மூக்கு தான் உடையும் என்பது மிகநன்றாகவே தெரியும்..
ஆனாலும் தடவைக்கு தடவை அவள் மூக்கை உடைத்துக் கொண்டுதான் இருக்கிறாள்..
“தலையில் ஏன்டி கையை வச்சிருக்கிற..? கையை எடு..
போய் ப்ரெஷ்ஷாயிட்டு வா.. சாப்பிடலாம்..” மனோரமா அவள் கையை எடுத்துவிட்டாள்..
“காலையிலிருந்து நான் சாப்பிடவேயில்லை தெரியுமா..?”
முகத்தை பரிதாபமாக மாற்றிக் கொண்டு வயிற்றை அழுத்தி பிடித்துக்கொண்டாள் ஆராத்யா..
“அச்சச்சோ ஏன்டா செல்லம்..
ஏன் சாப்பிடாமல் இருந்தாய்..?
இப்போது ரொம்ப பசிக்கிறதா..?” பதறிய மாதவனை கை அசைத்துநிறுத்திய மனோரமா மகளின் தலையில் நொட்டென கொட்டினாள்..
“புளுகுனிக்கழுதை,
பொய்யாடி சொல்ற..? நீ சாப்பிடாமல் பட்டினி கிடப்பவளா..? உன் லட்சணம் தெரியாதா எனக்கு..?
சீன் போடாமல் எந்திரிச்சு போடி..”
நொடியில் கணித்த தாயை அந்தநிமிடம் மட்டும் ஆராத்யாவிற்கு பிடிக்காமல் போனது..
“டாடி.. பாருங்க டாடி இந்த மம்மியை, எப்போது பார்த்தாலும் என்னை மட்டம் தட்டிக்கொண்டு..”
சிணுங்கலாய் தந்தையிடம் புகாரளிக்க..
“நீ கவலைப்படாதாடா செல்லக்குட்டி..
உனக்கு டாடி இருக்கிறேன்..” மாதவன் மகளுக்கு அபயமளிக்க, மனோரமா இருவரையும் முறைத்தாள்.
“என்ன அப்பாவுக்கும், மகளுக்கும் கொஞ்சல்..? ஏய் போடி போய் டிரெஸ்ஸை மாற்றிவிட்டுவா..”
தொடர்ந்து தன்னை விரட்டும் அன்னையை பழிவாங்கியே தீருவதென கங்கணம் கட்டிக்கொண்ட ஆராத்யா மாடியேறி தன்அறைக்கள் போய் முகம் கழுவி உடைமாற்றி கீழே வந்த உடன் மெல்ல ஆரம்பித்தாள்..
“ஏன் டாடி இன்னைக்கு காலையில் அப்படியே சும்மா சிங்கம் மாதிரி கர்ஜித்துட்டு நின்னீங்களே..
நான் கூட கொஞ்சம் பயந்துட்டேன் தெரியுமா..?”
மாதவன் பரவசமாய் முகம் நிமிர்த்தி பார்க்க, மனோரமா சந்தேகமாய் கீழ்க்கண்ணால் பார்த்தாள்..
“ஆராக்குட்டி என்னையாடா சொல்கிறாய்..?”
“யெஸ் டாட்.. உங்களையே தான்..
இப்படி சேரில் உட்கார்ந்து இப்படிகையை உயர்த்தி உன்னையெல்லாம் அன்னைக்கே அந்த கருப்பசாமி கோவில் கிட்டேயே விட்டுட்டு வந்திருக்கனும்னு சொன்னீங்க பாருங்க.. உங்கரமா அப்படியே ஆடிப்போய் நின்னுட்டா..”
“அப்படியா..? உன் மம்மி அப்போது எனக்கு பயந்து கொண்டா நின்று கொண்டிருந்தாள்..?”
மாதவனிடம் புதுப்புது உற்சாகங்கள் மழைக்குடையாய் பட்பட்டென விரிந்தன..
“ம்.. ரொம்ப பயந்து கொண்டு..
இதோ இப்படி பம்பிக்கொண்டு..” ஆராத்யா தன் உடலை குறுக்கிக்காட்ட மாதவனின் மனம் அப்படி தன்னிடம் குறுகி நிற்கும் மனைவியை கற்பனையில் கண்டு மத்தாப்பூ ஜொலிக்க, நர்த்தன சக்தியாய் அவர் எதிரில் வந்து நின்றாள் மனோரமா..
இடுப்பில் இருகைகளையும் வைத்துக்கொண்டாள்..
“என்ன ஐயாவோட கற்பனை எங்கே போகுது..?”
“ஹி..ஹி.. ஒண்ணுமில்ல ரமா..
நான் நம்ம குழந்தையோட விளையாடிட்டு இருந்தேன்..
சும்மா கேலியாக..”
“குழந்தையா..? யார் இவளா..?
சரியான குரங்கு.. எந்தப் பிள்ளையாவது அப்பாவும், அம்மாவும் சண்டை போடனும்னு நினைக்குமா..?
இந்தக்குரங்கு நினைக்குது..
நம்மளை சண்டைபோட தூண்டுது..”
“ஆமா.. நான் தூண்டினாத்தானாக்கும்,
நீங்கள் இரண்டு பேரும் தானாக சண்டை போடவே மாட்டீர்கள்..”
“மாட்டோம்..” ஒன்று போல் கோரசாக சொன்ன பெற்றோரை கொலை வெறியாய் பார்த்தால் ஆராத்யா..
“பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது..
நீங்க இரண்டு பேரும் கடைசி காலத்தில் குடிக்க தண்ணிகூட கிடைக்காமல் கஷ்டப்பட போறீங்க பாருங்க..”
தன் நோக்கம் நிறைவேறாத ஆத்திரத்தில் ஆராத்யா சாபமிட,
பெற்றவர்கள் இருவரும் அவள் தலையில் நொட்டென கொட்டினர்..
“கழுதை எங்களுக்கே சாபம் கொடுக்கிறாயா..?”
“ஐயோ இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..?
எங்கேயாவது பெற்ற பிள்ளையை தாய், தகப்பன் இரண்டு பேரும் சேர்ந்து அடிப்பாங்களா..?
அந்தக் கொடுமை இந்த வீட்டில தான் நடக்குது..
யாராவது என்னைக் காப்பாத்த வாங்களேன்,
பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும் யார் வேண்டுமானாலும்..”
சொன்னதோடு அதுபோல் தனக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் வாசலுக்கு ஓடிய ஆராத்யாவை மாதவன் பிடித்து இழுத்துக் கொள்ள, மனோரமா அவள் முதுகில் மொத்தினாள்..
ஆராத்யா அவர்கள் பிடியிலிருந்து விடுபட்டு முழுவதும் ஓட, பெற்றவர்கள் இருவரும் மகளை துரத்தினர்..
இறுதியாக வீட்டின் பின்வாசல் அருகே மகளை பிடித்து இருவரும் தலா ஆளுக்கு நான்கு கொட்டுக்கள், மொத்துக்கள் கொடுக்க, ஆராத்யா மடங்கி கீழே அமர்ந்து சத்தமான குரலில் “ஊ”வென அழ ஆரம்பித்தாள்..
“ஆரா என்னடா..?” மாதவன் பதறி விசாரிக்க, முதலில் நாடகம் என அலட்சியம் காட்டிய மனோரமா மகளின் அழுகை கூடவும் தானும் பதறி அவளருகே தரையில் அமர்ந்து..
“ஆரா என்னடா ரொம்ப வலிச்சதா..?” என,
ஆராத்யா சட்டென அப்பாவின் மடியில் தலை வைத்து அம்மாவின் மடியில் கால் நீட்டி படுத்துக்கொண்டு இடதுகை ஆட்காட்டி விரலை ஆட்டி, “வெவ்வெவ்வே”என வக்கலம் காட்டினாள்..
“திருட்டுக் கழுதை,
தெரியும்டி உன்புத்தி..”
வாயால் வைத்தபடி மகளின் கால்களை மடியிலிருந்து தள்ளி எழுந்த மனோரமா,
“வாடிகொட்டிக்கலாம்”என மகளை உணவுண்ண அழைத்தாள்..
“ஐய்யய்யோ இதென்ன சப்பாத்தி உள்ளே வேகவே இல்லை..
டாடி நீங்க போங்க,
இந்த ரமாவுக்கு ஒருமண்ணும் தெரியாது..”
கத்தியபடி குனிந்தாள் ஆராத்யா..
குனிந்ததன் காரணம் மனோரமா அவளைக் குறிவைத்து எறிந்த தோசைக்கரண்டி.
“அடியேய் நீ இன்னைக்க செத்தடி..” கொலை வெறியோடு மகள் மீது பாய்ந்த மனைவியை இடையில் புகுந்து தடுத்த மாதவன், இருவரையும் சமாதானப்படுத்தி டைனிங் டேபிளில் அமர வைத்துவிட்டு, சப்பாத்தியை தானே தேய்க்க ஆரம்பித்தார்..
என் சப்பாத்தி சரியில்லையாடி உனக்கு..”
நெஞ்சம் ஆத்திரமாக ஏறி இறங்க மனோரமா மகளை முறைக்க..
நீயே சரியில்லையே ரமா..
பிறகு உன் சப்பாத்தி எப்படியிருக்கும்..?”
ஆராத்யா வம்பினை தொடர்ந்தாள்.
“பிசாசே.. நீயெல்லாம் பிள்ளையாடி.. உன்னை போய் பெத்தேன் பாரு..”
கூட்டி உச்சியில் கொண்டையாக போடப்பட்டிருந்த ஆராத்யாவின் கூந்தலை பிடித்து ஆட்ட,
கொண்டை அவிழ்ந்து லாங்லேயர் கட்டாக வெட்டப்பட்டிருந்த அவளது முடி முதுகில் பரவியது..
“என்னரமா இது..
சாப்பிடுகிற நேரம்.. முடி தட்டில் விழுமே..”
சப்பாத்தியை மகள் தட்டில் வைக்க வந்த மாதவன், கரண்டியை டேபிளில் வைத்து விட்டு மகளின் முடியை கோதி ஒழுங்கு படுத்தி அழகாக மீண்டும் உச்சிக்குடுமி இட்டு விட்டு அடுத்த சப்பாத்தி சுட போனார்..
ஆடிட்டிங் டைம்.. பேங்க்ல ஓவர் ஓர்க்னு சொன்னியே மம்மி..
அதுதான் டாடியை சப்பாத்தி போட அனுப்பினேன்..” பேங்க் ப்ரான்ஞ் ஹெட்டான தனது தாயைப் பார்த்து ஆராத்யா சொல்ல,
மனோரமா நெகிழ்வாய் மகளின் கையை பிடித்துக்கொண்டாள்..
நீ சொன்னது சரிதான் ஆரா..
நான் சுட்ட சப்பாத்தி வேகத்தான் இல்லை..”
சுளித்த முகத்தோடு சொன்னாள்..
அவள் அப்போது தான் முதலில் தான் சுட்டு வைத்திருந்த சப்பாத்தியை பிய்த்திருந்தாள்..
“அது..” ஒற்றை விரலாட்டி சிரித்தாள் ஆராத்யா..
“உனக்கும் டாடிக்கும் காலையில் என்ன பிரச்சனைமாம்..?”
அது.. நானும் உன் டாடியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க.. உனக்கு தெரியும் தானே..?”
“ஐயோ மம்மி, நீங்க ரெண்டு பேரும் காலேஜ் படிக்கும் போது காதலித்தது, உங்க ரெண்டு பேர் பேமிலியிலும் உங்க லவ்வை ஆப்போசிஸ் செய்தது, நீ உன் பட்டிக்காட்டு ஊரில் இருந்த கருப்பசாமி கோவிலில் வந்து காத்திருந்தது, டாட் வந்து உன்னைக் கூட்டி வந்து, நம்ம சிங்கார சென்னையில் மேரேஜ் பண்ணிக் கொண்டு, இரண்டு பேரும் பேமிலி லைப்பை ஆரம்பித்தது.. இது எல்லாமே எனக்கு தெரியும்.. புருசனும், பொண்டாட்டியுமாக மாறி மாறி பத்தாயிரத்து எத்தனைநூறு தடவையோ சொல்லிட்டீங்க.. இப்போ திரும்ப முதலில் இருந்து வராதே,
மேட்டரை மட்டும் சொல்லு….”
ப்ச்.. நான் அதை சொல்ல வரலைடி..
அப்ப கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்களை இத்தனை வருடமாக எங்கள் குடும்பம் ஒதுக்கி வைத்திருந்தது..
இப்போது என் அம்மா வீட்டினர் சமாதானமாக போக நினைக்கிறார்கள் போல தெரிகிறது..”
“அது எப்படி உங்களுக்கு தெரியும்..?”
என் அண்ணன் நம் வீட்டு அட்ரஸ்ஸை இங்கே தெரிந்தவர் ஒருவரிடம் விசாரித்தாராம்..”
“எதற்காம்..?”
அண்ணன் மகளுக்கு கல்யாணாம்..
பத்திரிக்கை வைக்க நம் வீட்டிற்கு வரவேண்டுமென்று சொன்னாராம்..”
“ஓ.. அதனால் உங்களுக்குள் என்ன சண்டை..?”
“அன்று அந்த அண்ணன் என்ன பேச்சு பேசினான் தெரியுமா..? இன்று அவன் என் வீட்டு வாசல் ஏறிவிடுவானா..?”
சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்த மாதவன் தனது பாத்திரதத்தைக் கைவிட்டுக் கத்தினார்..
அவர் இட்ட சப்பாத்திகள் பறக்கும் தட்டுக்களாய் மனோரமாவின் தட்டில் வந்து சொத்தென விழுந்தன..
“ஓஹோ என் அண்ணன் மட்டும் தான் பேசினாரா..?
உங்கள் அக்கா பேசவில்லையா..?
அன்னைக்கு அந்த பொம்பளை என்னெல்லாம் பேசியது..?”
மனோரமா துள்ளி எழுந்து நின்று கத்தினாள்..
“உன் அண்ணன் பேசினதற்கு என் அக்கா பதில் பேசினார்கள்.. அவ்வளவு தானே..”
பதில் பேசினாரா..
பேட்டை ரௌடி தோற்றான்..
அப்படி கலீஜா பேசினார் உங்க அக்கா,
என் அண்ணன் எவ்வளவு டீசண்டாக நாசூக்காக பேசினார்..”
“பல்லை பேத்துடுவேன்.. யாரைடி பேட்டை ரவுடிங்கிற..?”
“உங்க அக்காவைத்தான்..”
ம்ஹீம்..
இவர்கள் திரும்ப ஆரம்பித்து விட்டார்கள். .ஆராத்யா சப்பாத்தி தட்டுடன் நைசாக மாடியேறி தனது அறைக்கு வந்துவிட்டாள்..
எப்படியும் சண்டைபோடுங்க.. அலட்சியமாக உதட்டை சுளித்து விட்டு ஒரு கையில் சப்பாத்தியோடு அடுத்தகையில் தனது காலேஜ் நோட்டை பிரித்து வைத்துக்கொண்டு அதில்ஆழ்ந்து போனாள்…
-(கனா தொடரும்..)