“சின்ன குயில்” பாடும் பாட்டு கேட்குதா? பாடகி சித்ரா பிறந்தினம்….!
சின்னகுயில் சித்ரா இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டாலும் இவரது தமிழ் உச்சரிப்பு அருமையாய் இருக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி அசாமி, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடி வருகிறார்.
“பூஜைக்கேற்ற பூவிது” என்று தனது மெல்லிய குரலில் தமிழ் சினிமாவில் பாட துவங்கி இன்று பட்டி தொட்டியெங்கும் இவரது மதுரக் குரல் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். இவரது குரல் மட்டுமல்ல மனமும் குழையும் குழந்தை மனம் கொண்டது. இதைத்தொடர்ந்து துள்ளியெழுந்தது பாட்டு, ஒரு ஜீவன் பாடுது, பாடறியேன் படிப்பறியேன், நானொரு சிந்து காவடி சிந்து என வரிசையாக ஹிட் பாடல்களை அளித்தார்.
முதன் முதலாக தன்னுடைய 5-வது வயதில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார். பாடகி சித்ரா முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவர். படிப்பில் முதுகலை பட்டங்களை பெற்றவர் இந்த சின்னக்குயில்.
அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது என பல மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து நீங்கா இடத்தை சின்னகுயிலுக்கு பெற்று தந்தது. ஆர்.ரகுமான், மரகத மணி, வித்யாசாகர் , சிற்பி பரத்வாஜ் போன்ற பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஏராளமான மனதை மயக்கும் பாடல்களை பாடி உள்ளார்.
இந்த சின்ன குயிலாள் தனது உயிரோட்டமான குரல் மூலம் பல தேசிய விருதுகளை வென்றவர். சிந்து பைரவி’ படத்தில் இடம் பெற்ற “பாடறியேன் படிப்பறியேன்’, ‘நானொரு சிந்து’ பாடல்களுக்கு சித்ராவுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. மேலும் ‘மின்சார கனவு’, ‘ஆட்டோகிராப்’ படங்களுக்கும் தேசிய விருது பெற்று இந்தியாவில் அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார் நமது சின்னகுயில் சித்ரா.
“இதோ இதோ என் பல்லவி” என இவர் தொடங்கினாலே இவர் சரணத்தை முடித்து மங்களம் பாடும் வரை சிலையாய் அமர்ந்திருப்பர் பலர்.
சரஸ்வதி தேவி இவரது நாவில் தேனை ஊற்றி அனுப்பினாரோ என கேட்போரை வியக்க வைக்கும் இவரது இனிமை தடவிய குரல்.
பூவே பூச்சுடவா’ படத்தில் இளையராஜா இசையில் ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா’ பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதில் இடம் பெற்ற ‘சின்னக்குயில்’ என்ற வார்த்தையே சித்ராவிடம் அடைக்கலமாகி விட்டது.
பிலிம்பேர், மாநில அரசு விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். மத்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.
இவ்வளவு பெரிய சாதனைகளை அனாயசமாக செய்திருந்தாலும் அவரது சிறிய கண்களை சுருக்கி கன்னத்தில் குழி விழ சிரிக்கும் அந்த குழந்தை முகத்தை கண்டால் அவரா இவர்? என ஐயம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இந்த குழந்தை முகம் கொண்ட சின்ன குயில் அறுபது வயதை தொடுகிறார் என்பதை நம்ப இயலவில்லை. தமிழ் திரையுலகில் இவரது குரல் மேலும் ஒலிக்க துவங்கட்டும். இன்னொரு தலைமுறைக்கான இசையும் குரலும் திறமையும் இவரிடம் இன்னமும் கொட்டிக் கிடக்கின்றது. சின்ன குயில் சித்ராவும் அவரது தமிழும் நீடுடி வாழட்டும்…!!!
1 Comment
சின்னக்குயில் சித்ராவிற்கு 60 வயதா நம்பவே முடியவில்லை …கட்டுரை மிக அருமை …இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்பது மன மகிழ்ந்த தகவல் மிக்க நன்றி…