காத்து வாக்குல ரெண்டு காதல் – 1 | மணிபாரதி
அத்தியாயம் – 1
பாஸ்கரன், ஈஸி சேரில் சாய்ந்த படி, தினசரி பேப்பரை புரட்டி புரட்டி ஒரு செய்தி விடாமல் படித்துக்கொண்டிருந்தார் எல்லாரும் தினசரி பேப்பரை காலை நேரத்தில் படிப்பது தானே வழக்கம். ஆனால், இவர் மாலை நேரத்தில் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். காரணம், காலையில் அவருக்கு நேரம் இருப்பதில்லை.
அவரது மகள் நந்தினி ஆபிஸ் புறப்படும் நேரம் அது. அவள் எழுந்து காபி காபி போட்டுக் கொடுத்துவிட்டு, குளிப்பதற்கு செல்வாள். அவள் குளித்து விட்டு வருவதற்குள், அவர் குக்கரில் சாதம் வைத்து, காய்கறிகள் நறுக்கி வைக்க வேண்டும். அவள் குளித்து விட்டு வந்து குழம்பு தாளிப்பாள். அதன் பிறகு, காலை டிபனை முடித்து ஆபிஸ் புறப்படுவாள். பாஸ்கரன் தான் பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு போய் விட்டு விட்டு வருவார். வீட்டிற்கு வந்ததும் ஈரத்துணிளை கொண்டு போய் மாடியில் காயப் போடுவார். கடைக்கு போக வேண்டிய வேலை இருந்தால் போய் வருவார். கரண்ட்பில் கட்டுவது, போன் ரீசார்ஜ் பண்ணுவது என அந்த வேலையையும் சேர்த்து முடிப்பார். இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் மதியமாகி விடும். அப்புறமென்ன? சாப்பிட்டு சிறுது நேரம் ஓய்வெடுத்தால் மாலை வந்து விடும். காபி போட்டு குடித்து விட்டு, பேப்பர கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தால், நந்தினி வீடு திரும்பும் வரை அதை ஒரு வரி விடாமல் படிப்பார்.
அவள் வந்ததும், சிறிது நேரம் அன்றைய நாளின் நிகழ்வுகளை இருவரும் பேசிருந்து விட்டு, இரவு சாப்பாட்டை முடிப்பார்கள். இது அவர்களின் தினசரி வாடிக்கை.
அன்று ஏழரை மணி ஆகியும் நந்தினி வீடு திரும்ப வில்லை. பேப்பரிலிருந்து கடிகாரத்திற்கு கவனத்தை திருப்பிய பாஸ்கரன், டயத்தைப் பார்த்து திடுக்கிட்டார். போனை எடுத்து நந்தினிக்கு நம்பர் போட்டார். ரிங் முழுவதுமாக அடித்து ஓய்ந்தது. அதற்கு மேல் அவரால் ஈஸி சேரில் நிம்மதியாக உட்கார முடியவில்லை. எழுந்து வாசலுக்கு வந்தார். வாசலில் நின்ற படி, தெரு முனை வரை பார்வையை செலுத்தி துழாவினார். யார் யாரோ போய் வந்து கொண்டிருந்தார்கள். நந்தினி வருவதற்கான அறிகுறி சிறிதும் தென் பட வில்லை. வருவதற்கு தாமதமாகும் என்றால், போன் பண் ணி சொல்லி விடுவாள். அப்படி செய்யாததால் பயம் அவர்மனதை கவ்வ ஆரம்பித்தது. உடம்பு பதட்டத்தில் நடுங்கியது.
அவருக்கு மனைவி இல்லை. நந்தினி பிறந்து அவளுக்கு பத்து வயது இருக்கும் போது, மூச்சு தினறல் ஏற்பட்டு இறந்து போனாள். பாஸ்கரன் துடித்துதான் போனார். அவளை அவருக்கு நிரம்ப பிடிக்கும். கல்யாணம்ஆனதிலிருந்து “ரஞ்சிதம்.. ரஞ்சிதம்..“ என்று உயிரை விடுவார். கோவிலுக்கு, சினிமாவிற்கு, நண் பர்கள் வீட்டு கல்யாணத்திற்கு என்று எங்கு போனாலும், ரஞ்சிதத்தை உடன் அழைத்து செல்வார். அவர்கள் ஜோடி போட்டு நடக்கும் அழகே தனி அழகு. தெருவாசிகள் பொறாமை கொள்வார்கள். அப்படி மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு திரிந்தவருக்கு, திடீரென்று ஒருநாள் அவளது துணை இல்லாமல் போனது, வாழும் போது நரகத்தை காட்டியது. அவளது நினைவுகள் எழும் போதெல்லாம், கூடவே அவள் அருகில் இல்லை என்கிற எண்ணமும் சேர்ந்து எழும். அது அவரை வாட்டிதான் எடுக்கும். அப்போது கண்ணீர் அவரது கன்னத்தில் கோலமிடும். 12 வயது நந்தினி “ஏன் ப்பா அழறீங்க..“ எனக்கேட்பாள். குழந்தையிடம் தனது வலியை காட்டிக் கொள்ள விரும்பாத அவர்“ ஒண்ணுமில்லடா செல்லம்.. அப்பா கண் ணுல தூசி விழுந்துடுச்சு..“ என்று சொல்லி சமாளிப்பார். ஆனால், அவளை அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்த்தார். உறவுக்காரர்களில் சிலர், அவரை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினர். ஆனால், அவரால் ரஞ்சிதம் இடத்தில் வேறு ஒரு பெண்ணைவைத்து பார்க்க மனமில்லை. தைரியமும் இல்லை.
வீட்டை பூட்டி விட்டு தெரு முனையில் போய் நின்று பார்க்கலாமா என யோசித்து, வீட்டு சாவியை எடுப்பதற்காக வீட்டிற்குள் வந்தார். அப்போது வாசலில் செருப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார். நந்தினி செருப்பை கழட்டி விட்டுக்கொண்டிருந்தாள். வாசலுக்கு ஓடி வந்த அவர்“ஏம்மா லேட்..“ எனக்கேட்டார்.
“பஸ் பிரேக்டவுனாயிடுச்சுப்பா.. வேற பஸ் மாறி வரலாம்ன்னா அவன் ஊரை சுத்தி கொண்டு வந்து இறக்கி விடுறான்..“
“அதை ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாமேம்மா.. நா என்னன்னு நினைக்குறது.. துடிச்சு போய்ட்டேன்..“
“இன்னிக்குன்னு பார்த்து ஃபோன் ல சார்ஜ் போயிடுச்சுப்பா..“
“அப்படியா..“
“ஆமாம்ப்பா“ என்றவள் போனை சார்ஜில் போட்டாள். பின் முகம் அலம்பி நைட்டிக்கு மாறினாள். “கொஞ்சம் காபி போட்டு தறிங்களாப்பா.. தலைய வலிக்கிற மாதிரி இருக்கு..“ என் றாள். பாஸ்கரன் எந்த மறுப்பும் காட்டாமல் காபி போட்டு கொடுத்தார். அவள் காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள். அப்போது, அவளது கண் கள் எதையோ தீவிரமா யோசிப்பது தெரிந்தது. பாஸ்கரன் அதை கவனிக்க வில்லை. இரவு சாப்பிடுவதற்கான டிபனை தயார்செய்வதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
அப்போது அவளுடைய போன் ஒலித்தது. எழுந்து போன் அருகே வந்து நம்பரை பார்த்தாள். “ராகவ்“ என பெயர்தெரிய, “இடியட்“ என முனகி போனை கட்பண்ணினாள்.
–(காற்று வீசும்…)
1 Comment
ஒரு சினிமா பார்ப்பது போல் காட்சிகள் கண் முன் விரிகின்றன.
வாழ்த்துகள்