சிலம்புச்செல்வர் ம.பொ.சி. பிறந்த நாள் இன்று

 சிலம்புச்செல்வர் ம.பொ.சி. பிறந்த நாள் இன்று

இந்தியாவிற்கு சுதந்திரம் கைக்கெட்டும் தொலைவில் இருந்தபோது, தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரர்களிடமிருந்து கலகக்குரல் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் கூட்டங்களில் பேசிய ம.பொ.சியை, ‘கிராமணியே திரும்பிப்போ…!’ என தாக்குதல் நடத்தி விரட்டினர் அந்த மக்கள். மேலும் எதிர்ப்பு காட்டும்விதமாக, “ஆந்திரம் பிரிக்கப்பட்டால் சென்னையையும் நாங்களே பெறுவோம்” என சவால் விடுத்தனர் அவர்கள் .

பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கு மொழியுணர்வாளர், அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். 58 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப்பின் அவர் மரணமடைய, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அவரது மரணத்திற்கு பரிசாக ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலத்தை அப்போதைய காங்கிரஸ் உருவாக்கி ஒப்படைத்தது ஆந்திர மக்களுக்கு. 1953 அக்டோபரில் ஆந்திரம் உருவானது.

சவால் விட்டபடி மாநிலத்தை பிரித்துக்கொண்ட ஆந்திரமக்களின் அடுத்த இலக்கு சென்னை. 1956 ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே’ என்ற கோஷத்துடன், ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டுப் போராட்டங்கள் மேற்கொண்டனர்.

வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும், தென்சென்னை ‘சென்னை மாகாணத்தின்’ தலைநகராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ‘அபாய’ கோரிக்கை. அரசியல் களத்தில் இது பல அதிர்வுகளை ஏற்படுத்தின. அப்போது சென்னையை காக்க தமிழகத்தில் இருந்து புறப்பட்ட ஒரே தலைவர் ம.பொ.சி. எல்லா வழிகளிலும் தனது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டுக்கொடுத்தார்.

‘தலைநகர் சென்னை’ என இன்று நாம் போற்றிக்கொண்டாடும் சென்னை, ஒருநாள் நம்மை விட்டு செல்லும் நிலை வந்தபோது, பெரும் போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக்கொடுத்த பெருந்தகை ம.பொ.சி. சென்னையை காக்க அவரிட்ட முழக்கம், ‘தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்’ என சென்னையை காக்கும் போரில் இளைஞர்களை எழுச்சியடைச்செய்தவர்.

திருப்பதியும், திருத்தணியும் ஆந்திரர் வசம் செல்ல இருந்த நிலையில், தனது வலுவான போராட்டங்கள் மூலம் அதையும் முடக்கினார். ஆனாலும் திருத்தணியை மட்டுமே நம்மால் தக்கவைக்கமுடிந்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும், செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்தபோதிலும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வாழ்வின் நில வளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை காக்க போராடியத் தலைவர் ம.பொ.சி.

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906 ஆண்டு ஜூன் மாதம் 26ம் நாளில் பிறந்தார். ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலில் பிறந்ததால், 3 ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டு நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார். பின்னர் அச்சுக் கோர்க்கும் பணியில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்தார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம. பொ. சி. என்று ஆயிற்று.

3ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ம.பொ.சி, பின்னாளில் சங்க இலக்கியத்தில் தேர்ந்தவராக விளங்க களம் அமைத்துக்கொடுத்தது சிறைவாசம். தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களை படிக்க பயன்படுத்திக்கொண்டார். பாரதியின் மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி, அவரைப் பற்றி படைத்த நுால்கள் திறனாய்வுக்கு ஒப்பானவை.

1950 ல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும்பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி அழைத்து விழாவை நடத்தினார் ம.பொ.சி. ம.பொ.சியின் தமிழ்க்கொடையை பாராட்டி, பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவருக்கு ‘சிலம்பு செல்வர்’ என்னும் பட்டத்தை வழங்கினார்.

தமிழ், தமிழர், தமிழகம் என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த்தொண்டுபுரிந்த ம.பொ.சி 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி உடல்நலம் குன்றி தனது 89 வயதில் காலமானார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...