தமிழக அரசுக்கு வாழ்த்து! || 12 மணி நேர வேலை நேரம் ரத்து
தந்தை காலை 6 மணிக்கே வேலைக்குப் போயிருப்பார். மகனோ, மகளோ காலையில் தூங்கியிருப்பார்கள். வேலைக்குப் போன தந்தை இரவு 11 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார். அதற்குள் பிள்ளைகள் தூங்கியிருப்பார்கள். பகலில் தாய் காட்டுக்கோ, விவசாய வேலைக்கோ போயிருப்பார். பிள்ளைகளை வீட்டில் உள்ள வயதானவர்கள் தான் பிள்ளைகளின் காலைக்கடன்களைச் செய்ய வைத்து, சோறூட்டி, ஆடைகள் அணிவித்து பள்ளிக்கோ. வேலைக்கோ அனுப்பி வைக்கவேண்டும்.
ஓயாத வேலை, போதிய ஊதியமின்மை, சத்தான உணவு இல்லை. ஓய்வில்லாத காரணத்தால் நோய்க்கு ஆளாகி வாலிபத்திலேயே முதுமையை அடைந்த தாய், தந்தை மாண்டு போவார்கள்.
தாய், தந்தையை இழந்த குழந்தைகள் போதிய படிப்பின்றி, உணவின்றி, வேலையின்றி வாழ்க்கையையே இழந்து வாடும் நிலைதான் கடந்த காலங்களில் இருந்து வந்தது.
அந்த நிலையைப் போக்கத்தான் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். அதைப் பொறுக்காத கொடூர பெருமுதலாளிகளின் கோரக் கரங்களின் நகங்களில் ரத்தம் பாய்ச்சித் தடுத்தார்கள். ரத்தம் ஆறாக ஓடியது. அதன்பிறகுதான் 8 மணி நேர வேலை சாத்தியமானது.
தொழிலாளர்கள் இன்று பெற்றிருக்கும் உரிமைகள் எல்லாம் அத்தனை எளிதாகத் தொழிலாளர்களுக்குக் கிடைத்தது அல்ல. பெரிய போராட்டம் மற்றும் உயிர்த் தியாகத்தின் பலனாகவே இன்று தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைக்கான உரிமைகளைப் பெற்றுள்ளனர்.
தற்போது மோடி அரசு வந்ததற்குப் பிறகு ஐ.டி. நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி. மற்றும் எம்.என்.சி. கம்பெனிகளில் பணியாற்றும் அனைவருக்குமே 12 மணி நேர வேலைதான் தற்போது வழங்கப்படுகிறது. அதிலும் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களை வேலையிலிருந்து நிறுத்தலாம். எந்த விளக்கமும் நிறுவனம் தரவேண்டியதில்லை என்கிற நிலைதான் இருக்கிறது.
முன்பு நிறுவனங்களில் வேஜ்போர்ட் கமிட்டியின் படி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்கிற சட்டம் இருந்தது. தற்போது அப்படி அவசியமில்லை. அவர்களாகவே நிறுவனத்தின் கிரேடை குறைத்துக்கொண்டு வேஜ்போர்ட் படி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டிய அவசியமில்லை என்கிற நிலை உருவாகிவிட்டது.
வேலை வாய்ப்பை வழங்குகிறேன் பேர்வழி என்கிற எண்ணத்தில் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் வெளிநாட்டு முதலீடை ஈர்க்க அவர்களுக்கு மின்சாரம் மற்றும் சாலை வசதி, வரியில் சலுகைகள் என்று பல சலுகைகளை வாரிவழங்கிவருகிறது.
கார் நிறுவனங்கள், நோக்கியா நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அரசுகளின் எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டு கம்பெனியைக் காலி செய்துகொண்டு போனார்கள். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை பறிபோனது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அப்போது வரிகளையும் சலுகைகளையும் வாரி வழங்கிய அரசுகள் கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையோ இழப்பீடையே வழங்கவில்லையே?
12 மணி நேர வேலைத் திட்டத்தை ஏன் அதைத் தமிழக அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கவேண்டியதுதானே. அவர்களிடம் உங்களுக்கு என்ன பயம்?
ஏற்கெனவே பென்ஷன் குறைப்புக்காக அரசு ஊழியர்கள் போராடிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அரசுப் பணியாக அல்லாமல் தொகுப்பூதியமாக டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அங்கன்வாடித் தொழிலாளர்களின் நிலையும் அதுதான். இடைநிலை ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், காவல் துறையிலும் தொகுப்பூதியமாகத் காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அரசு அவுட்சோர்ஸ் திட்டத்தில் பணியாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஒரு சட்டத்தையும் கொண்டுவந்திருக்கிறது தமிழக அரசு என்பது எதைக் காட்டுகிறது?
தமிழகத்தில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலைதான் உள்ளது என்பதைத்தானே காட்டுகிறது?
எட்டு மணிநேரம் உழைப்பு, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணிநேரம் தூக்கம் என்பதுதானே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உகந்தது. அதில் 12 மணிநேரம் உழைத்தால் அவன் உடல் நிலை தாங்குமா? குடும்ப உறவு சிதைந்துபோகும்தானே?
12 மணி நேர வேலை 2 நாள் விடுப்பு, தொழிலாளர்கள் உடன்பட்டால் பணி செய்யலாம் என்பதெல்லாம் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்குச் சமம்.
படித்த பட்டதாரிகளுக்கு வேலை வழங்க முடியாத நிலையில் வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதுதானே நல்ல அரசுக்கு உகந்தது?
ஏற்கெனவே ஜவுளிக் கடைகளில் இளம் பெண்களும் ஆண்களும் 12 மணி நேரத்துக்கும் மேலாகத்தான் நின்றுகொண்டே உழைக்கிறார்கள். அவர்களுக்குக் கூடுதலாக 4 மணி நேரம் உழைப்பதற்குத் தனியாக சம்பளம் தருவதில்லை. டி.வி.எஸ். போன்ற நிறுவனங்களில் மூன்று ஷிப் முறையில் தொழிற்சாலைகளை இயக்குகிறார்கள். தற்போதைய 12 மணி நேர வேலை சட்டம் நடைமுறைக்கு வந்தால் 2 ஷிப் முறையில் மாற்றிவிட்டு ஒரு ஷிப் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்தானே?
தமிழகத்தின் எதிர்காலத்தை படுபாதாளத்துக்குத் தள்ளும் இந்த 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் எந்த ஆலோசனையும் சட்டசபையிலோ பொதுவெளியிலோ விவாதிக்காமல் கமுக்கமாக அவர்களாகவே நிறைவேற்றினது ஏன்?
இவர்கள் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலையை எப்படிப் போராடிப் பெற்றார்கள் என்பதையாவது படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.
8 மணி நேரப் போராட்ட வரலாறு
நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமையினைப் பெறுவதற்காக பாரிஸில் ஒன்று கூடிய தொழிலாளர்களின் போராட்டம் வலுப் பெற்றது.
1886 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வேலை நேரக் குறைப்புக்கான போராட்டத்தில் இறங்கினர். மொத்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர் போராடினர். அதில் சிகாகோ நகரில் மட்டுமே 70,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டம் தொடங்கிய நான்காம் நாலான மே 4ஆம் தேதி கூட்டத்தில் போராட்டம் வெடித்தது. அதில் பல நூறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்தப் போராட்டத்தின் எதிரொலியாகத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமை உலகம் முழுக்க தொழிலாளர்களுக்கு படிப்படியாக கிடைத்தது.
அதற்கு முன்பு வரை தொழிலாளர்கள் 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டி இருந்தது.
16-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் தொடங்கப்பட்ட 8 மணி வேலை நேர இயக்கம் உலகம் முழுவதும் பற்றிப் படர்ந்தது. உலகின் பல நாடுகளில் விடுதலை போராட்டங்களும், இருநாடுகளுக்கு இடையேயான போர்களும் நடந்துகொண்டு இருந்த 1800-ம் ஆண்டுகளில், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினர்.
பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற பல நாடுகளில் தொழிலாளிகள் 12 முதல் 16 மணிநேரம் வரை மிகச்சொற்பமான ஊதியத்துக்காக கசக்கிப் பிழியப்பட்டனர். இதை எதிர்த்து அந்தந்த நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆஸ்திரேலியாவில் 1896-ம் ஆண்டு கட்டடத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை வேண்டி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.
8 மணிநேர வேலை கோரிக்கையே ரஷிய புரட்சிக்கு வித்திட்டு சோவியத் யூனியன் உருவாக காரணமானது.
அப்படிப்பட்ட மாபெரும் உரிமைப் போராட்டம், தொழிலாளர்களின் வாழ்வாதாரப் போராட்டம், சுரண்டலுக்கு எதிரான போராட்டமே இன்று 8 மணி நேர வேலை என்ற உரிமையை நாம் பெற்றிருப்பதற்கு காரணமாக அமைந்தது. அதன் பிறகும் கூட பல்வேறு உரிமைகளைப் பெற தொழிலாளர்கள் இன்று வரை போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்த உரிமையினை எல்லாம் தொழிலாளர்கள் பெற்று இரண்டு நூற்றாண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் இந்தியாவிலேயே 12 மணி வேலை நேரத்தைத் தமிழக அரசு கொண்டுவந்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் ஆகிவிட்டது.
எதிர்க்கட்சிகள் வெளியேறிபோது. கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் குரல் வாக்கெடுப்பு மூலம் 12 மணி நேர வேலைச் சட்ட மசோதாவை தி.மு.க. அரசு அதிரடியாகக் கொண்டுவந்தது மாபெரும் தவறு.
யாருக்காக இப்படி அவசர அவசரமாக இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பது தெரியவில்லை. தமிழகமெங்கும் கடுமையான எதிர்ப்பு காட்டிய பிறகுதான் அந்த மசோதாவை ஒத்தி வைத்திருக்கிறார்கள். தற்போது தமிழக அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை மே ஒன்றாம் தேதியான இன்று (1-5-2023) நீக்கியதை வரவேற்கிறோம்.