அது ஒரு கவி மாலைப் பொழுது
“கவிதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல, கவிதை மனம் படைத்தவர்களால்தான் நல்ல கவிதைகளைப் படைக்க முடியும்” என்றார் கவிஞர் யவனிகா ஸ்ரீராம்.
கவிஞர் நகுநா எழுதிய ‘பசித்த வனத்தின் கண்கள்’ என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா 23-4-2023 அன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் நூலை வெளியிட, எழுத்தாளர் மதன் கார்க்கி நூலைப் பெற்றுக்கொண்டார்.
மா.மகேஷ்வரி மீனாட்சி எனும் நகுநா திரைப்பட உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சிறுகதைகளும் எழுதக்கூடியவர். த.மு.எ.க. சங்கப் பணியிலும் ஈடுபட்டு வருபவர். அவர் தொடர்ந்து முகநூலில் எழுதிவந்த கவிதைகளின் தொகுப்பாக பசித்த வனத்தின் கண்கள் என்கிற பெயரில் ஒரு பெண்ணின் பார்வையில் ஆணித்தரமான கருத்துக்களை, தன் உள்ளக்கிடக்கையில் இருந்து தொகுக்கப்பட்ட கவிதைகளை நூலாக்கியிருக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சாலிகிராமம் கிளை சார்பாக இந்த நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
த.மு.எ.க. சங்க நிர்வாகி திரைப்படத் தொகுப்பாளர் சரத்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேரல் புக்ஸ் வெளியீட்டாளர் கவிஞர் அம்பிகா குமரன் வரவேற்புரை வழங்கினார்.
கவிஞர், திரைப்பட எழுத்தாளர், இயக்குநர் பிருந்தா சாரதி வாழ்த்துரை வழங்கினார். திரை எழுத்தாளர் லீலா புத்திரன், கவிஞர், பாடலாசிரியர், இயக்குநர் ஏகாதசி, யவனிகா ஸ்ரீராம், எழுத்தாளர் கரன்கார்க்கி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் நகுநா ஏற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் நகுநாவின் கவிதைத் திறனைப் பாராட்டிப் பேசினார்கள். இவர் எதிர்காலத்தில் சிறுகதையும் நாவலையும் எழுதுவார். தைரியமான பெண்ணுக்கு உதாரணமானவர் நகுநா என்று பாராட்டிப் போசினார்கள்.
ஒரு ஞாயிறு மாலை நேரத்திலும் அரங்கு நிறைந்த கூட்டம் இருந்தது. அதோடு முக்கிய பிரமுகர்களும், கவிஞர்களும் எழுத்தாளர்களும் சினிமா கலைஞர்களும் வந்திருந்தார்கள்.
நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் நிறைவான விழாவாக அது அமைந்திருந்தது.