‘மின்மினி’ செய்தி எதிரொலி || உறுப்பு தானம் விடுப்பு அதிகரிப்பு

 ‘மின்மினி’ செய்தி எதிரொலி ||  உறுப்பு தானம்  விடுப்பு அதிகரிப்பு

தானத்தில் சிறந்தது உடல் மற்றும் உறுப்பு தானம்

கடந்த சில வருடங்களாகவே, உடல்தானம், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மூளைச்சாவடைந்தவரின் பெற்றோர் தங்கள் மகனோ, மகளோ இறப்புக்குப் பின்னும் உறுப்புகளால் வாழ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் தானம் வழங்கியது செய்திகளில் இடம்பெற்றதை அறிந்திருப்போம். ஆனால் நல்ல நிலையில் இருப்போரே சிலர் முன்வந்து உடல் தானம் செய்வதைக் காண முடிகிறது. அதே நேரம் உடல்தானம் செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்காக எங்கு, எப்படிப் பதிவு செய்வது என்பது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை.

இது குறித்து ‘மின்மினி’ ஏப்ரல் மாத இதழில் சிறப்புக் கட்டுரை வெளியாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாக பல நல்ல திட்டங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் சவிதா 2023 பிப்ரவரி 24 அன்று உடல்தானம் செய்திருக்கிறார். அவர் உடல்தானம் செய்தது பற்றிய பதிவை முகநூலில் எழுதியதைப் பலர் பாராட்டியதோடு “ஏன் இந்தத் திடீர் முடிவு?” என்கிற ஆச்சரியத்தோடும் கேள்வி எழுப்பிருந்தார்கள். சிலர் உடல் தானம் செய்வதன் அவசியத்தையும் பகிர்ந்திருக்கிறார்கள். வைரலான இந்த விஷயத்தைப் பற்றி அவரிடமே கேட்டோம்.

“என் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் என் உடலைத் தானம் செய்திருக்கிறேன். இதைச் சமூகத்துக்குச் சொல்லவேண்டிய ஒரு விஷயமாக நான் பார்க்கவில்லை. குறிப்பாக இறப்பிற்குப் பிறகு நடக்கும் சடங்கு, சம்பிரதாயங்களின் மேல் எனக்கு விருப்பமில்லை. இறப்புக்குப் பின் மறு பிறவியிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தப் பிறவியில் எனக்குப் பயன்பட்ட இந்த உடம்பு மண்ணில் வீணாகப் போகிறது. இறப்புக்குப் பின் மருத்துவ ஆராய்ச்சிப் பயன்படட்டுமே என்கிற எண்ணம்தான் என் உடலைத் தானம் செய்ததற்கான காரணம்” என்றார். 

ஒரு முகநூல் பதிவு, அதைப் படித்துவிட்டுப் போகாமல் அந்த நல்ல செயலுக்குத் தாமும் துணை நிற்போம் என்று இணைந்த கமலக்கண்ணன் செயல் பாராட்டுக்குரியது. இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு யாரெல்லாம் உடல்தானம் செய்யத் தொடங்குகிறார்களோ அவர்கள் எல்லாருக்கும் பாராட்டுகள்.

உறுப்பு தானம் செய்ய 42 நாள் விடுப்பு அறிவிப்பு

உடல் உறுப்பு தானம் செய்யும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான தற்செயல் விடுப்பு 30 நாட்களில் இருந்து 42 நாளாக அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அதற்காக சிகிச்சை பெறுவதற்காகவும் தானம் அளிக்கும் அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும்.

ஒரு நன்கொடையாளரிடமிருந்து உறுப்புகளை அகற்றுவது மிகப் பெரிய அறுவை சிகிச்சையாகும். இது மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலங்கள் உட்பட மீட்க நேரம் தேவைப்படுகிறது.

ஒன்றிய அரசு ஊழியர்களிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்குவித்து இன்னொரு மனிதனுக்கு உதவும் உன்னதச் செயல்பாட்டை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு ஊழியர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அதிகபட்சமாக 42 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்கொடையாளருக்கு எந்த வகையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் அவருக்கு 42 நாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு அதன் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மனித உடல் உறுப்புகள் மாற்றுச் சட்டத்தின்படி அரசு பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நன்கொடையாளருக்கு மட்டுமே இந்தச் சிறப்பு விடுப்பு பொருந்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பெருமிதம்

“உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்கள் முன்வர வேண்டும். மற்றொரு உயிரைக் காப்பாற்றும் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படும்” என்று பிரதமர் மோடி
26-3-2023 அன்று 99வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“உயிரிழந்த ஒருவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளிப்பதன் வாயிலாக 8-9 பேர் பயனடைவார்கள். உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுபவர்களுக்கு, உறுப்பைத் தானமாக அளித்தவர் கடவுள் போலவே தோன்றுவார். உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க மக்கள் முன்வரவேண்டும்.

2013ஆம் ஆண்டு ஐந்தாயிரத்துக்கும் குறைவானவர்களே உடல் உறுப்புகளைத் தானம் தந்தனர். அது தற்போது 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் பிரதமர் மோடி.

உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு முதலிடம்

உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆறாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தினை தமிழ்நாடு பெற்று வருகிறது. 

2020 நவம்பர் 27, உடல் உறுப்பு தானத்திற்கான சர்வதேச தினத்தின்போது ஒன்றிய சுகாதார அமைச்சகத்தினால் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் 1392 கொடையாளர்களிடமிருந்து 8245 உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு, தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2020ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 107 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும், 186 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 6 பேருக்கு மிகவும் சவாலான அரிய நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே முதன்முறையாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் 400 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல உறுப்புகள் மாற்றும் அறுவை சிகிச்சை (Multi Organ Transplantation) 48 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்மா கொடை வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

2016-ம் ஆண்டு தொடங்கி அக்டோபர் 2019 வரையிலான காலகட்டத்தில் மூளைச்சாவு அடைந்த 652 பேர் கண்டறியப்பட்டு, அதில் 431 பேர் உடல் உறுப்பு கொடையாளர்களாக மாற்றப்பட்டு பெறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டின் தரவுகளின்படி, மொத்தம் கொடையளிக்கப்பட்ட 200 சிறுநீரகங்களில் 178 சிறுநீரகங்கள் மற்றவர்களுக்கு பொறுத்தப்பட்டிருக்கிறது.
இதயத்தைப் பொறுத்தவரை பெறப்பட்ட 97 இதயங்களில் 50 இதயங்கள் மற்றவர்களுக்கு பொறுத்தப்பட்டுள்ளன.

உடல் உறுப்புகளை கொடையாக அளிப்பதற்கு பதிவு செய்வது தற்போது ஆன்லைனில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடல் உறுப்புகளை கொடையளிக்க முன்வருபவர்கள் அரசின் கீழ்காணும் இணையத்தில் சென்று பதிவு செய்யலாம். https://transtan.tn.gov.in/

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...