சென்ற வியாழன் அண்ணா லைப்ரரியில் நடைபெற்ற பிடரி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. T.N.இராதாகிருஷ்ணன் என்கிற தீபன் அவர்களின் இரண்டாவது புத்தக வெளியீடு. மேடையில் மட்டுமல்ல, பார்வையாளர்களாகவும் மாபெரும் ஆளுமைகள். இனிய மாலையாக அமைந்தது அந்நிகழ்வு.
புத்தகம் பற்றி சிலவரிகள்
பிடரி
புராணத்தின் நிகழ்வுகளை ஒட்டிய கர்ஜணை பிடரியில் தெரிகிறது.
அவளின் முகச்சதைச் சுருக்கமே
மூதாட்டியின் முன் கதைச் சுருக்கம்…!
அதேபோல் ! அணிந்துரையிலேயே புத்தகத்தின் அடக்கத்தை புரிந்துகொள்ள முடிந்தது. திரு.சப்தரிஷி அவர்கள் அத்தனை அழகாக பெயர் வாரியாக பட்டியலிட்டு வரிசைப்படுத்தி, வாசிக்கும் ஆர்வத்தை பல நூறுமடங்கு உயர்த்தியிருந்தார்.
புத்தகத்தின் ஆசிரியர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களும் தன் என்னுரையில், மெய்யான இதிகாசக்கதைகள், இதிகாசத்தோடு இணைந்த கற்பனை, முழுக்க கற்பனை என்று கதைகளைப் பட்டியலிடுகிறார். வரிக்கு வரி வார்த்தை ஜாலங்கள் எட்டிப்பார்க்கிறது.
புத்தகத்தை வாசிக்கத் துவங்கியபோது, பள்ளிக்கால உண்மையான விடுமுறை ஞாயிறு காலைகள் நினைவுக்கு வந்தது. இதிகாசக் கதைகள் பழைய தூர்தர்ஷனில் பார்த்ததை நினைவூட்டியது.
அத்தனை கதைகளுமே தன்னிலையின் விளக்கமாக அருமையாக இருந்தது. எல்லாக் கதைகளுமே பாசிட்டிவ் கோணத்தில் இருந்தது.
வாசித்ததில் மிகவும் ரசித்த கதை…
காதலாகிக் கசிந்தேன்.
காதலனின் அதீத வெளிப்பாடு பக்தி !
கூனல் விழுந்த கோணல் நிலா.
கிறுக்கப்பட்ட கேள்விக்குறி !
கதையின் நாயகி குப்ஜாவின் அறிமுகம் இது.
உலகை உயிர்ப்பிக்கும் உணர்வாய் காதல், உயிரின் சுடரை எல்லம் இருவிழியில் தேக்கி அவனுக்காக…காத்திருக்கிறாள். அவன் வரவில்லை, பார்த்துச் சென்ற கண்களில் எல்லாம் ஏளனச் சாயல் வீசுகிறது.
என்னைத் தாங்கிட ஒரு திண்தோள் நான் தங்கிட ஒரு நெஞ்சு….எனத் தனக்கானவனைத் தேடி தவிக்கிறாள் குப்ஜா.
அதிகாலையின் கண்விழிப்பின் நேரமே, அவள் மனதில் இனம்புரியாத ஒரு குதூகலம்…அதுவும் எப்படி ?
சரிந்த என் முதுகில் சறுக்கிச் சென்றது சந்தோஷக் காற்று !
குவா குவா காலத்திலிருந்து கொண்டே நான் அறியாத குதூகலம்
ஒருவேளை முன்பார்த்து மறுத்து சென்ற யாராவது இன்று வந்து மனையாளாக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லப் போகிறானோ என்ற எதிர்பார்ப்பு.
அதன் ஒட்டு மொத்தப் பூர்த்தியாக கிருஷ்ணனைக் காண்கிறாள். வேதனை, விரக்தி, அலட்சியத்தின் வலி, ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு, விழிகள் மூலம் விழுங்கிக் கொள்ள எத்தனித்து, முடியாமல் தவித்துடூ தளும்பித், தடுமாறி, அவனின் பார்வை அவளைத் தொட்ட சமயம்…அச்சோ பார்த்தானோ ? இல்லையோ ? அந்த பார்வையில் தெரிந்தது வெறுப்பா என்று துடித்து….கிருஷ்ணனின் பார்வையில் காதலையும், கருணையும் வழியவிட்டு….தீபன் அவர்கள் எழுதியிருந்ததைப் போல அதர இதழ்களின் அணையா தீப ஒளியை உணர முடிந்தது !
வலியைப் போக்கும் வலிமை உண்டு காதலனின் குரலுக்கு ! குப்ஜாவின் காதற் கடலில் தீபன் அவர்களின் எழுத்தின் வன்மையில் காதல் கசிந்துருகி ஓடியது உண்மை.
அரண்மனையில் அன்னையின் பரிமாறி அறுசுவைக்கு கூட புன்னகையை பரிசளிக்கும் அண்ணன், இந்த மூதாட்டியின் எச்சில் பழத்தை கூட அமிர்தமென சுவைக்க காரணம் கேட்கிறான்.
அதற்கு ராமர் தரும் பதில்…மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவளின்றி ராவணவதத்திற்கு வாய்ப்பில்லை. ஆனால் அவள் தன் காதலை பலர் போல மனதில் பூட்டி வைக்காமல் வெளிப்படுத்திய இடமாய் அந்த போர்த்தூண்டலுக்கான காரணத்தை விவரிக்கிறாள்.
அன்பையும் அபச்சாரம் என்கிறார்கள் ஆசாரப் பூச்சாண்டிகள் என்று சூர்ப்பணகை சொல்கிறாள். கண்கட்டப்பட்ட நீதி தேவதையின் மூடிய விழிகளின் வழியே ஒரு ஒளிப்பார்வையாய்….தன்னிலை விளக்கக் கதைகள்.
பிரிவை உணர்த்தவே பிரிவை உருவாக்கினேன் சீதாபிராட்டிக்கு என்று வாதம் செய்கிறாள்.
நீரின் பெயர் ஒன்றுதான். இருக்கும் இடம் குறித்து ஆறு, கடல், குளம் என்று மாறுபடுவதைப் போல இறைநேசமும் மாறுபடும். உங்கள் உலகில் தற்கால வழக்கல் காதல் காமரசத்தின் கெளரவ வடிவம் என் மனம் ராமசாகரத்தின் ரம்யபடிவம் என்கிறாள் சூர்ப்பணகை.
குற்றம் சாட்டப்படும் நபரின் மற்றொரு பரிமாணம் அருமை. அதை கவிதை நடையில் எதுகை மோனையில் வெளிப்படுத்தியிருக்கும் எழுத்தின் வீரியமும் அருமை.
தமிழ்படம் என்று ஒரு படம்….அதில் பேரனை ஹீரோவாக்கத்தான் நான் வில்லியாக மாறினேன் என்று பாட்டி ஒருவர் சொல்வதைப் போல காமெடியாக ஒரு காட்சி வரும். நிஜமாகவே எதிர்க்கும் ஆளைப் பொருத்தும் பல நேரங்களில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
இவர்கள் இப்படித்தான் என்ற பிம்பத்தை சுமந்திருந்த புராணகால கதாபாத்திரங்களின் மற்றொரு பக்கம். பல நாட்களாக எங்களுக்குள் யாரிடம் சொல்வது என்று தேங்கி வைத்த தன்னிலை விளக்கத்தை சகோதரர் தீபன் அவர்களின் வார்த்தைகள் மூலம் தெரிவித்தோம் என்று அவர்கள் சந்தோஷப்பட்டு கொள்வார்கள்.
முக்காலமும் தவத்தால் உணர்ந்த உங்களாலேயே அறிய இயலவில்லையே சூரியன் எழவில்லை, அது மாயை என்று நான் எப்படி அறிவேன் என்ற தவிப்பு….அதேபோல் அகல்யா….என்னும் கதையில்
கல் பேசுகிறது….
குழந்தைகளுக்கான கார்ட்டூன் கதைகளுக்கு ஏற்ற கதைகள். ராம நாமங்கள் கதைகளில் வலம் வந்தாலும்….பெண்ணின் மன உணர்வை கவித்துவமாக வர்ணனைப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
வாழ்த்துகள் திரு. T.N.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு.

