‘ஞாலம்’ போற்றும் ‘பாலம்’ பத்மஸ்ரீ கல்யாணசுந்தரம்
குடியரசு தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 106 பேர் அடங்கிய பட்டியலில் 6 பேருக்கு பத்மவிபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரில் ஒருவர் ‘பாலம்’ கல்யாணசுந்தரம். இவரது சமூகப் பணியை கெளரவிக்கும் வகையில் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இசைக்குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளவர் வாணி ஜெயராம்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகளை பிடித்து வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து பாம்புகளை பிடித்துள்ள இவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பிரிவில் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் பனையேறிப்பட்டியில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் படித்தார். பின்னர் உதவி பேராசிரியர், பேராசிரியர், துறை தலைவர், ஆயுர்வேதம் மற்றும் சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
பாலம் கல்யாணசுந்தரம்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தன் இந்தியப் பயணத்தின்போது, அரசு சாராத இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் கலாம்; மற்றொருவர் ‘பாலம்’ கல்யாண சுந்தரம்.
‘இந்தியாவின் சிறந்த நூலகர்’ விருது பெற்ற கல்யாணசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் மேலக்கருவேலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகள் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றிய இவர், அதில் கிடைத்த வருமானம், ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே தொண்டுப் பணிக்கு வழங்கியவர். ‘பாலம்’ என்ற தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவை ஆற்றி வரும் இவரது பயணம் மலைக்கத்தக்கது.
எளியோருக்கு உதவும் இவரது சமூக சேவையை பாராட்டி ’கடந்த ஆயிரம் ஆண்டுகளில் உலகம் இப்படியொரு மனிதரை கண்டிருக்காது’` என 1999ஆம் ஆண்டு அமெரிக்கா இவருக்கு ‘Man of the Millennium Award‘ என்னும் விருது அளித்து சிறப்பித்தது.
இவ்விருதில் ரூ.30 கோடியைப் பரிசாகப் பெற்ற இவர் அந்தத் தொகை முழுவதையுமே குழந்தைகள் நலனுக்காக அளித்து, அந்த விருதையே வியப்படையச் செய்தார். பெரும்பங்களா பரிசாக வந்தபோது மறுத்தவர், சூப்பர்ஸ்டார் ரஜினி தன் தந்தையாக தத்தெடுத்தபோதும் , அதனை விடுத்து தன் சொந்த வீட்டுக்குச் சென்றவர்.
ஏர்வாடி அருகே கருவேலங்குளத்தில் பிறந்த இவர், ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றி, மாணவர்களுடனும் புத்தகங்களுடனும் வாழ்ந்தவர். பின்னர், ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி, அந்த வருமானத்தையும் சேவைக்கு செலவிட்டார். ஏழை மக்களுக்கு சேவையாற்றுவது ஒன்றையே தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டவர், 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.
தனக்கென்று நிலமோ வீடோ பணமோ சேர்க்காத இவர், திருமண வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. மகத்தான மக்கள் பணிகளை எளிய மனிதராக செய்துவரும் இவரை, 20ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளர்களில் ஒருவராக ஐக்கிய நாடுகள் அமைப்பு தேர்ந்தெடுத்ததும் சாதனையானது. இப்போது இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது இந்திய அரசு.
பாலம் கல்யாணசுந்தரம் ஒரு பேட்டியில் “நான் வசதி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு 1 வயதாக இருக்கும்போது எனது தந்தையார் இறந்து விட்டார். நானும், எனது அண்ணனும் எங்களது தாயாரின் வளர்ப்பில்தான் வளர்ந்தோம். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது எங்களது தாயார் எங்களுக்கு 3 அறிவுரைகளை வழங்கினார். அதாவது, நீங்கள் என்றைக்கும் கொடுக்கும் கைகளாகவே இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் இந்த 3 விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்று சொல்லி, அந்த 3 அறிவுரைகளை வழங்கினார்.
அதில் முதலாவது, எக்காரணம் கொண்டும் பேராசைப்படக் கூடாது. அதாவது, நீ விரும்பியதை அடைய ஆசைப்படு. ஆனால், பேராசைப் படாதே என்றார். இரண்டாவது, நீ சம்பாதிக்கும் பணத்தில் 10-ல் 1 பங்கை ஏழைகளுக்கு தானமாகக் கொடு. மூன்றாவதாக, தினமும் ஏதேனும் ஒரு உயிருக்காவது உதவி செய். அது மனிதராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விலங்குகளாக இருந்தாலும் சரி, செடி கொடிகளாக இருந்தாலும் சரி என்று சொன்னார். எனது தாயார் கூறியது எனது மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. இதனால், சிறுவயதிலேயே பிறருக்கு உதவி செய்வதைத் தொடங்கி விட்டேன்.
50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எனது பூர்வீக சொத்து, நான் பணியாற்றி சம்பாதித்த 30 லட்சம் ரூபாய், பணி ஓய்வுபெற்ற பிறகு கிடைத்த பணிக் கொடை என அனைத்தையும் ஏழைகளுக்காக கொடுத்து விட்டடேன். எனது சமூக சேவையை பாராட்டி 1999-ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் ‘Man of the Millennium Award’ (கடந்த 1,000 ஆண்டுகளில் உலகம் இப்படியொரு மனிதரை கண்டிருக்காது) என்னும் விருதை அளித்து சிறப்பித்தது. (இந்த விருது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அளிக்கப்படும்) இந்த விருதுடன் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய்) அமெரிக்கா வழங்கியது. இந்த பணத்தை குழந்தைகள் நலனுக்காக வழங்கி விட்டேன்.
எனது சுயசரிதையை வைத்து அமிதாப் பச்சன் சினிமா எடுக்கப் போகிறார். தமிழில் ரஜினி நடிக்கிறார். இதில் கிடைக்கும் பணத்தையும் ஏழைகளுக்காக செலவிடுவேன்” என்றார் 83 வயதாகும் பாலம் கல்யாணசுந்தரம். அவர் வாழ்க, அவர் தொண்டு வாழ்க.